Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

120 பணிகளுக்கு ஆன்-லைனில் டெண்டர் :சேலம் மாநகராட்சிக்கு 2வது இடம்

Print PDF
தினமலர் 13.04.2010

120 பணிகளுக்கு ஆன்-லைனில் டெண்டர் :சேலம் மாநகராட்சிக்கு 2வது இடம்

சேலம்:தமிழகத்தில் கோவை மாநகராட்சிக்கு அடுத்தபடியாக சேலம் மாநகராட்சியில் ஆன்-லைன் மூலம் கட்டுமான பணிகளை மேற்கொள்ள விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. குறுகிய காலத்தில் 120 பணிகள் மேற்கொள்ள விண்ணப்பங்கள் வந்துள்ளன.

அரசு நிதி மற்றும் மானியம், உலக வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு நிதி மூலம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என்று மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் கோடிக்கணக்கான ரூபாயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கும் துறை சார்பாக, சிறிய மற்றும் நடுத்தர நகர்ப்புற அடிப்படை வசதி மேம்பாட்டு திட்டம், பெரு நகர அடிப்படை வசதி மேம்பாட்டு திட்டம், டுபிட்கோ அடிப்படை வசதி திட்டம் ஆகியவற்றின் மூலம், சுகாதாரம், கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.உள்ளாட்சி அமைப்புக்களின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளில் கால தாமதங்களை தவிர்க்கும் பொருட்டு, அனைத்து பணிகளுக்கும் டெண்டர் விடுவது தான் நடைமுறை வழக்கம். ஆனால், அனைத்து கட்டுமான நிறுவனங்களாலும் அரசு பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோர முடியாது.சம்மந்தப்பட்ட பகுதியில் வசிக்கும் ஆளுங்கட்சி பிரமுகர்களின் விருப்பத்துக்கு ஏற்பவும், அவர்கள் கைகாட்டும் நபர்கள் மட்டுமே அரசு கட்டுமான பணிக்கான டெண்டரில் கலந்து கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. சம்மந்தப்பட்ட உள்ளாட்சி துறை உயர் அதிகாரிகளால் இதை தவிர்க்க முடியாத சூழல் நிலவி வருகிறது.கட்சி பிரமுகர்களின் பின்னணியில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தை சேர்ந்த பெரும்பாலோனோர், அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் தரமில்லாமல் மேற்கொள்ளும் பணிகளால், பணி முடிக்கப்பட்ட ஒரு சில ஆண்டுகளிலேயே மீண்டும் அவற்றை புதுப்பிக்கும் சூழல் ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நிதி இழப்பு ஏற்படுகிறது.ஆளுங்கட்சி பிரமுகர்களின் கட்டப்பஞ்சாயத்துக்களை தவிர்க்கவும், டெண்டரில் கலந்து கொள்ள விருப்பம் உடையவர்கள் அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் விதமாகவும் உள்ளாட்சி துறை சார்பில் கட்டுமான பணிகளுக்கு ஆன்-லைன் மூலம் டெண்டர் விட முடிவு செய்யப்பட்டது.மாநகராட்சி பகுதிகளில் 10 லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட கட்டுமான பணிகளை மேற்கொள்ள ஆன்-லைன் மூலம் டெண்டர் விட அரசு அனுமதி வழங்கியுள்ளது. சில மாதங்களுக்கு முன் சேலம் மாநகராட்சி சார்பில் பல்வேறு பணிக்கு ஆன்-லைன் மூலம் டெண்டர் விடப்பட்டது. தற்போது 120 பணிக்கு ஆன்-லைன் மூலம் டெண்டர் கோரப்பட்டுள்ளன.அதில் ஒரு சில பணிகள் தற்போது முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் நடந்து வருகின்றன. ஆளுங்கட்சி பிரமுகர்களின் குறுக்கீட்டை தவிர்க்க 10 லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட பணிகள் தொடர்ந்து ஆன்-லைன் மூலம் டெண்டர் விடப்பட உள்ளன. அதன் மூலம் பல்வேறு பகுதிகளில் இருந்து தகுதி வாய்ந்த கட்டுமான நிறுவனங்கள் விண்ணப்பிக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சேலம் மாநகராட்சி கமிஷனர் பழனிசாமி கூறும்போது, ''சேலம் மாநகராட்சி பணிக்கான ஆன்-லைன் டெண்டருக்கு கட்டுமான நிறுவனங்களிடையே வரவேற்பு உள்ளது. குறுகிய காலத்தில் 120 பணிக்கு ஆன்-லைன் மூலம் டெண்ர் கோரப்பட்டுள்ளன. தமிழகத்திலேயே கோவை மாநகராட்சிக்கு அடுத்தபடியாக ஆன்-லைன் மூலம் அதிக பணிகள் மேற்கொள்ள டெண்டர் கோரப்பட்டுள்ளது சேலம் மாநகராட்சியில் தான். தொடர்ந்து பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரப்பட உள்ளன,'' என்றார்.

Last Updated on Tuesday, 13 April 2010 06:53