Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னையில் மினி பஸ்: 3 மாதத்தில் தொடக்கம்: அமைச்சர் கே.என். நேரு

Print PDF

தினமணி 05.05.2010

சென்னையில் மினி பஸ்: 3 மாதத்தில் தொடக்கம்: அமைச்சர் கே.என். நேரு

சென்னை, மே. 4: சென்னை நகரில் மினிபஸ்களை இயக்கும் திட்டம் 3 மாதங்களில் தொடங்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.

சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது, சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பது குறித்து திமுக உறுப்பினர் வி.எஸ்.பாபு எழுப்பிய கேள்விக்கும், அவரைத் தொடர்ந்து, செங்கோட்டையன் (அதிமுக), ஞானசேகரன் (காங்கிரஸ்), வேல்முருகன் (பாமக) ஆகியோர் எழுப்பிய துணைக் கேள்விகளுக்கும் அமைச்சர் கே.என்.நேரு அளித்த பதில்:

"சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு போக்குவரத்து போலீஸôர், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மாதந்தோறும் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆட்டோக்கள் உரிமத்துக்கான தடை நீக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ஷேர் ஆட்டோக்களுக்கு உரிமம் அளிப்பதற்கான உத்தேசம் ஏதும் அரசிடம் இல்லை. ஷேர் ஆட்டோக்களை அனுமதித்தால் போக்குவரத்துக் கழக பஸ்கள் பாதிக்கப்படும்.

மினி பஸ்கள்: சென்னையின் குறுகிய சந்துகளில் இருந்து பஸ் நிலையம் போன்ற முக்கிய இடங்களுக்குச் செல்ல மினி பஸ்கள் அரசு சார்பில் இயக்கப்படும். இந்தத் திட்டத்தை மூன்று மாதங்களுக்குள் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைப்பார். பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான ஆலோசனைகளை வழங்க, பெருநகர போக்குவரத்து ஆணையத்தை அமைக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக போக்குவரத்துத் துறை அமைச்சரும், தலைமைச் செயலாளர், மாநகர மேயர் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், காவல் துறை உயரதிகாரிகள் ஆகியோர் உறுப்பினர்களாகவும் இடம் பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க நடப்பு கூட்டத் தொடரில் மசோதா தாக்கல் செய்யப்படும். 16 ஆண்டு காலத்துக்குள் ரூ. 88 ஆயிரத்து 200 கோடி அளவுக்கான திட்டங்களை இந்தக் குழு உருவாக்கி செயல்படுத்தும்.

மேம்பாலங்கள்-மெட்ரோ ரயில்: சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இதுவரை 19 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. 25 இடங்களில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 45 கி.மீ. நீளத்துக்கு பெருநகர ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது.

தியாகராய நகரிலும் மற்றும் அரசு போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான இடங்களிலும் அடுக்குமாடி கார் நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட உள்ளன. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

விரைவு சாலை: தாம்பரம்-துறைமுகம் இடையே விரைவு சாலை அமைக்கும் பணிகள் முடிவடைந்தால், நகரின் பெரும்பகுதி நெரிசல் தவிர்க்கப்படும்.

போக்குவரத்து நெரிசல் குறித்து, தனது துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத் துறையினர், மாநகர காவல் துறை அதிகாரிகளுடன் மாதந்தோறும் துணை முதல்வர் ஆய்வு செய்து வருகிறார். ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ், பெருநகரத்தின் சாலைகளில் தனி பாதையை அமைக்க நிதி தரும் நிலை இருந்தும், சென்னை நகரில் அதைச் செயல்படுத்த முடியவில்லை. அகலமான சாலையான அண்ணா சாலையில் மட்டும் அந்தத் திட்டம் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது' என்றார் கே.என்.