Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மேலூர் ரயில்வே ஸ்டேஷனை புதிய பஸ்ஸ்டாண்ட் அருகில் மாற்ற மாநகராட்சி கூட்டத்தில் அனுமதி

Print PDF

தினமலர்      28.05.2010

மேலூர் ரயில்வே ஸ்டேஷனை புதிய பஸ்ஸ்டாண்ட் அருகில் மாற்ற மாநகராட்சி கூட்டத்தில் அனுமதி

தூத்துக்குடி : தூத்துக்குடி மேலூர் ரயில்வே ஸ்டேசனை புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்திற்கு மாற்றம் செய்வதற்கு தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் மேயர் கஸ்தூரி தங்கம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாநகராட்சி எல்கைக்குட்பட்ட மேலூர் ரயில்வே ஸ்டேசனை புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மாற்றம் செய்து கொள்ள கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. ரயில்வே நிர்வாகம் தற்போது மேலூர் ரயில்வே ஸ்டேசன் 2 மற்றும் 3வது கேட் இடைப்பட்ட பகுதியிலுள்ள காரணத்தினால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே ரயில்வே நிர்வாகம் தற்போது மேற்கண்ட ரயில்வே நிலையத்தை புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் மாற்றம் செய்ய உத்தேசித்துள்ளது.

தற்போது உத்தேசிக்கப்பட்ட இடத்தில் மேலூர் ரயில்வே ஸ்டேசனை மாற்றினால் போக்குவரத்து நெரிசல் மிகவும் குறையும். எனவே ஆண்டாள் தெருவிலுள்ள மேலூர் ரயில்வே பிளாட்பாம் அமைந்துள்ள 3923.5 சதுரமீட்டர் பரப்பளவுள்ள ரயில்வே இடத்தினை மாநகராட்சிக்கு பெற்றுக் கொண்டு, புதிய பஸ் ஸ்டாண்ட் தெற்கு பகுதியுள்ள மாநகராட்சி சாலை இடமான 3241.5 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள இடத்தினை ரயில்வே நிர்வாகத்திற்கு நில உரிமை மாற்றம் செய்ய அரசின் சிறப்பு அனுமதி பெற்று ரயில்வே நிர்வாகத்திற்கு வழங்கலாம் என்று கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

தூத்துக்குடி பாளை ரோடு வட்டத்தெப்பம் குளியலறை அமைந்துள்ள இடத்தில் மாநகராட்சி வருவாயை பெருக்கும் நோக்கத்தில் வணிக வளாக கட்டடம் கட்ட தீர்மானித்துள்ளதால் மேற்படி குளியலறை ஏல இனத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மேற்படி இடத்தில் வணிக வளாகம் கட்டும் பட்சத்தில் கடந்த காலங்களில் மேற்படி குளியலறை மூலமாக வரப்பெற்ற வருவாயைவிட கூடுதல் வருவாய் கிடைக்கும் என மன்றம் கருதியதின் அடிப்படையில் புதிதாக வணிக வளாக கட்டடம் கட்டத் தீர்மானிக்கப்பட்டது. மேற்கண்ட இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து 23மீ நீளம் 5 மீ அகலம் கொண்ட இடத்தில் வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு சொந்தமான ரோச் பூங்காவில் உபயோகம் இல்லாமல் உள்ள கட்டடத்தில் ரோச் பார்க் வாக்கர்ஸ் கிளப் மூலமாக ஜிம் வைப்பதற்கு அனுமதி கோரப்பட்டிருந்தது. இதற்கு சில நிபந்தனைகளின் அடிப்படையில் அனுமதி வழங்கலாம் என்று கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.