Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரயில் நிலையத்திற்கு தேவையான நிலத்தை வழங்க தூத்துக்குடி மாநகராட்சி முடிவு

Print PDF

தினமணி    28.05.2010

ரயில் நிலையத்திற்கு தேவையான நிலத்தை வழங்க தூத்துக்குடி மாநகராட்சி முடிவு

தூத்துக்குடி, மே 27: தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தை புதிய பஸ் நிலையம் அருகே இடமாற்றம் செய்ய தேவையான நிலத்தை ரயில்வே நிர்வாகத்திற்கு வழங்க தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஈடாக மேலூர் ரயில் நிலையத்தில் உள்ள இடத்தினை பெற்றுக்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற அவசர மற்றும் சாதாரணக் கூட்டம் புதன்கிழமை மேயர் இரா. கஸ்தூரி தங்கம் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் பெ. குபேந்திரன், துணை மேயர் ஜே. தொம்மை ஜேசுவடியான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தை தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் எதிரில் உழவர் சந்தைக்கு தெற்கு பகுதிக்கு மாற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்காக அந்த பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 3241.5 சதுர மீட்டர் இடத்தை ரயில்வே நிர்வாகத்திற்கு இடமாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியர் மூலம் கோரப்பட்டிருந்தது. பொதுமக்கள் நலன் கருதி இந்த இடத்தினை ரயில்வே நிர்வாகத்திற்கு வழங்க தூத்துக்குடி மாநகராட்சி ஏற்கெனவே முடிவு செய்திருந்தது. மாநகராட்சிக்கு பாத்தியப்பட்ட இந்த 3241.5 சதுர மீட்டர் இடத்தின் மதிப்பு ரூ. 1,48,29,863 ஆகும். இந்த தொகையை ரயில்வே நிர்வாகம் தரவேண்டும் அல்லது கிரையத் தொகைக்கு ஈடாக ரயில்வே நிர்வாகத்தின் இடத்தினை வழங்க சம்மதம் தெரிவிக்குமாறு ரயில்வே நிர்வாகத்திடம் மாநகராட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதையடுத்து, கிரையத் தொகைக்கு ஈடாக ஆண்டாள் தெரு மேலூர் ரயில் நிலைய பிளாட்பாரம் அமைந்துள்ள இடத்தினை மாநகராட்சி நிர்வாகத்திற்கு வழங்க ரயில்வே நிர்வாகம் சம்மதம் தெரிவித்திருந்தது.

அந்த பகுதியில் 1 சதுர மீட்டருக்கு மதிப்பு ரூ. 3780 ஆக உள்ளது. அதன்படி மாநகராட்சி நிலம் 3241.5 சதுர மீட்டருக்கு ஆண்டாள் தெருவில் 3923.5 சதூர மீட்டர் பரப்பளவுள்ள இடத்தை ரயில்வே நிர்வாகத்திடம் இருந்து பெறுவது என புதன்கிழமை நடைபெற்ற மாநகராட்சி அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநகராட்சிக்கு சொந்தமான 3241.5 சதுர மீட்டர் நிலத்தை ரயில்வே நிர்வாகத்திற்கு நில உரிமை மாற்றம் செய்வது தொடர்பாகவும், ரயில்வே நிர்வாகம் மாநகராட்சிக்கு வழங்கப்படவுள்ள 3923.5 சதுர மீட்டர் பரப்பளவுள்ள இடத்தினை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் அரசின் பரிசீலனைக்கும், தக்க உத்தரவுக்கும் நகராட்சி நிர்வாக இயக்குநர் மூலமாக கருத்துரு அனுப்புவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.