Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்ட்ரல் மார்க்கெட்டை தொடர்ந்து லாரி நிலையம், ஆம்னி பஸ்கள் மாட்டுத்தாவணிக்கு மாற்றம்

Print PDF

தினகரன் 10.06.2010

சென்ட்ரல் மார்க்கெட்டை தொடர்ந்து லாரி நிலையம், ஆம்னி பஸ்கள் மாட்டுத்தாவணிக்கு மாற்றம்

மதுரை, ஜூன் 10: சென்ட்ரல் மார்க்கெட்டை தொடர்ந்து லாரி நிலையங்களும், ஆம்னி பஸ்களும் இடம் மாற்ற கலெக்டரும், மாநகராட்சியும் அனுமதி அளித்துள்ளன.

மதுரை நகருக்குள் போக்குவரத்து நெருக்கடி தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக சென்ட்ரல் மார்க் கெட், மாட்டுத் தாவணிக்கு மாற்றப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக லாரி நிலையங்களும், ஆம்னி பஸ்களும் இட மாற்றம் செய்யப்படுகின்றன. இதற்காக மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகில் 12 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதில் தலா 6 ஏக்கர் லாரி நிலையம், ஆம்னி பஸ்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

மதுரை நகருக்குள் அன்றாடம் ஓடும் ஆயிரம் சரக்கு லாரிகளில், 600 லாரிகள் வெளி மாநிலங்களில் இருந்து வருகின்றன. தவிர 500 மணல் லாரிகளும் ஓடுகின்றன. போக்குவரத்து நெருக்கடி தவிர்க்க, நகருக்குள் லாரிகள் நுழைய தடை விதிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.

வடக்கு மாசி வீதி, கீழமாரட் வீதி, முனிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 200 லாரி நிலையங்களை இடம் மாற்ற, மாட்டுத்தாவணியில் 100 லாரி நிலையங்களும், கோச்சடையில் 100 நிலையங்களும் அமைக்க மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.

பெரியார் பஸ்நிலையம் அருகே ஆம்னி பஸ்கள் இயக்கப்படுவதால் நகரின் மைய பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் நிலையத்திற்குள் நகர பஸ்கள் இயங்க முடியாத அளவுக்கு ஆம்னி பஸ்கள் நிறைந்துள்ளன.

இதனை இடம்மாற்ற மாட்டுத்தாவணியில் 75 ஆம்னி பஸ்கள் நிறுத்த இடம் ஒதுக்கப்படுகிறது. இதோடு அங்கு ஆம்னி பஸ் அலுவலகத்திற்கும் இடம் அளிக்கப்படுகிறது. இங்கிருந்து ஆம்னி பஸ்களும், லாரிகளும் பின் பகுதி வழியாக ரிங் ரோட்டில் இணைய புதிய சாலை அமைக்கப்படும். இதற்கு கலெக்டர் காமராஜ் அனுமதி அளித்துள்ளார். மதுரை லாரி உரிமையாளர் சங்க தலைவர் சாத்தையா, செயலாளர் சாகுல்அமீது, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் நேற்று மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து விரைவாக இடத்தை ஒதுக்கி தரும்படி கோரினர்.

மாநகராட்சி இடம் ஒதுக்கீடு

மாட்டுத்தாவணியிலும், கோச்சடையிலும் லாரி நிலையங்களுக்காக 1000 சதுர அடி மற்றும் 500 சதுர அடி வீதமும், மாட்டுத்தாவணியில் ஆம்னி பஸ் அலுவலகத்திற்கும் மாநகராட்சி இடம் ஒதுக்கி கொடுக்கிறது. இதற்காக மாநகராட்சிக்கு மாத வாடகை செலுத்த வேண்டும். அரசு விதிமுறைக்குட்பட்டு வாடகை நிர்ணயிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதில் அதன் உரிமையாளர்கள் சொந்த செலவில் கட்டிடம் கட்டிக் கொள்ள வேண்டும். விரைவில் கட்டுமான பணிகள் முடிவடைய வாய்ப்புள்ளது.