Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பளபளக்கும் பஸ் ஸ்டாண்ட்; திறந்து வைத்தார் ஸ்டாலின் இன்று முதல் பஸ் இயக்க ஏற்பாடு

Print PDF

தினமலர்   16.06.2010

பளபளக்கும் பஸ் ஸ்டாண்ட்; திறந்து வைத்தார் ஸ்டாலின் இன்று முதல் பஸ் இயக்க ஏற்பாடு

கோவை : கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பளபளக்கும் பஸ் ஸ்டாண்டை துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.கோவை-மேட்டுப்பாளையம் சாலையில், மாநகராட்சி சார்பில் ஏழு கோடி ரூபாய் செலவில் புது பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் செல்லும் அனைத்து பஸ்களும் இன்று முதல் இங்கிருந்து இயக்கப்படவுள்ளன.

தினமும் 119 அரசு பஸ், 33 தனியார் பஸ், 22 டவுன் பஸ்கள் இங்கிருந்து இயக்கும் வகையில் பஸ் ஸ்டாண்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியாக ஏ.சி., வசதியுடன் கூடிய ஓய்வு அறை, டிரைவர்களுக்கான ஓய்வு அறை, குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கான தனி அறையுடன் புது பஸ்ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. 25 பஸ்கள், தரை தளத்தில் 64 டூ வீலர்கள், 20 ஆட்டோக்கள், முதல் தளத்தில் 18 கார்கள், 361 டூவீலர்கள் நிறுத்துவதற்கு இங்கு வசதி உள்ளது. தரை தளத்தில் பஸ் ஸ்டாண்டும், முதல் தளத்தில் "பார்க்கிங்' வசதிகளும் அமைந்திருப்பது இந்த பஸ் ஸ்டாண்டின் சிறப்பம்சம். டிக்கெட் ரிசர்வேசன் கவுன்டர், அலுவலக அறைகள் இரண்டு, பொருள் பாதுகாப்பு அறை, ரெஸ்டாரண்ட், மணிக்கூண்டு, பத்திரிகை, பால் விற்பனைக் கடைகள் ஆறு, மின் அறை ஆகியவை தரை தளத்தில் உள்ளன. துர்நாற்றம் ஏற்படுத்தாத, "ஓசோனேட்டடு' முறைப்படி நான்கு கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வேறெந்த பஸ் ஸ்டாண்டுக்கும் இல்லாத வகையில், "அல்பா பேனலிங்' முறையில் அமைக்கப்பட்டுள்ள முகப்புப் பகுதி, "கார்ப்பரேட்' நிறுவனங்களின் கட்டடம் போல வசீகரிக்கிறது. மின் சேமிப்பைக் கருத்தில்கொண்டு, 3.2 கிலோ வாட்ஸ் மின் உற்பத்தி செய்யும் காற்றாலை, சூரியஒளி சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. காவல் கட்டுப்பாட்டு அறை, சமூக விரோதிகள் நடமாட்டம் கண்காணிக்க காமிரா வசதி, பயணிகளுக்கான நவீன இருக்கை வசதி, வண்ண மீன் காட்சியகம், பளபளக்கும் தரை தளம் என நம்மூர் பஸ் ஸ்டாண்ட்களுக்குரிய எந்த அடையாளமும் இல்லாமல் இந்த புதிய பஸ் ஸ்டாண்ட் ஜொலிக்கிறது.

பஸ் ஸ்டாண்டை துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை 10 மணிக்கு திறந்து வைத்தார். அதன்பின், குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. பஸ்ஸ்டாண்டை பார்வையிட்ட துணை முதல்வர், சிறப்பாக இருப்பதாகப் பாராட்டுத் தெரிவித்தார். போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரு, ஊரக தொழில் துறை அமைச்சர் பழனிச்சாமி, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன், கதர்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மேயர் வெங்கடாசலம் ஆகியோர் உடனிருந்தனர்.நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலர் நிரஞ்சன் மார்டி, நகராட்சி நிர்வாக இயக்குனர் செந்தில்குமார், கலெக்டர் உமாநாத், மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, துணை மேயர் கார்த்திக், மண்டலத் தலைவர்கள் செல்வராஜ், பைந்தமிழ், சாமி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறுகையில்,""பஸ் ஸ்டாண்ட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 6 கோடியே 25 லட்ச ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 75 லட்ச ரூபாய் மதிப்பில், சுரங்க நடைபாதை அமைக்கப்படும். மேட்டுப்பாளையம் ரோடு அகலப்படுத்தும் பணி முடிந்த பின் இந்தப் பணி துவங்கும்,'' என்றார்.

""இந்த பஸ் ஸ்டாண்டுக்கு 50 கிலோ வாட்ஸ் மின்சாரம் தேவை; காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலமாக 3.2 கிலோ வாட்ஸ் மின்சாரம் தயாரிக்க முடியும். இதைக் கொண்டு தினமும் 80 விளக்குகளை எரிய வைக்க முடியும். பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பை தனியார் வசம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாளையிலிருந்து (ஜூன்16) இங்கிருந்து பஸ்கள் இயக்கப்படும். பஸ் ஸ்டாண்ட் முகப்பின் மேற்புறம் "தமிழ் வாழ்க' என்ற வாசகத்தை பெரிதாக வைக்க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அந்த பணி விரைவில் மேற்கொள்ளப்படும்,'' என்று கமிஷனர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்தார்.