Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஜலகண்டபுரம் பேரூராட்சி பேருந்து நிலையத்திற்கு எந்த தலைவர் பெயர் வைப்பது என அமைச்சர் முன்னிலையில் பேச்சுவார்த்தை

Print PDF

தினகரன் 30.06.2010

ஜலகண்டபுரம் பேரூராட்சி பேருந்து நிலையத்திற்கு எந்த தலைவர் பெயர் வைப்பது என அமைச்சர் முன்னிலையில் பேச்சுவார்த்தை

மேட்டூர், ஜூன் 30: ஜலகண்டபுரம் பேரூராட்சி பேருந்து நிலையத்திற்கு எந்த தலைவரின் பெயர் வைப்பது என்பது குறித்து வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் முன்னிலையில் இன்று பேச்சுவார்த்தை நடக்கிறது.

ஜலகண்டபுரம் பேரூராட்சி பேருந்து நிலையம் ரூ.28 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது. இம்மாதம் 15ம் தேதி, சிறப்பு தீர்மானத்தின் மூலம் பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையம் என பெயர் வைக்க மன்ற கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி பேருந்து நிலையத்தில் பேரறிஞர் அண்ணா பெயர் எழுதப்பட்டது.

இந்நிலையில் காங்கிரசார் காமராசரின் பெயர் வைக்கவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே, காமராஜரின் பெயர் வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும், அதன்படி காமராஜரின் பெயர் வைக்க வேண்டும் எனக்கூறி, ஜலகண்டபுரம் காங்கிரஸ் தலைவர் பூஞ்சோலை மற்றும் காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், இது தொடர்பாக நேற்று காலை காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் சுசீந்திரகுமார், நங்கவள்ளி வட்டார தலைவர் ஐயண்ணன், மாவட்ட கவுன்சிலர் சக்திவேல், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி குணசேகரன் மற்றும் காங்கிரசார், ஜலகண்டபுரம் பேருந்து நிலையத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலின் பேரில் அங்கு சென்ற காங். கட்சி மாவட்ட தலைவர் ஆர்.ஆர்.சேகரன், அமைச்சர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி, பேருந்து நிலையத்திற்கு எந்த தலைவர் பெயர் வைப்பது என முடிவு செய்யலாம் என்று அவர்களை சமாதானப்படுத்தினார்.

1975, 1991 ஆகிய ஆண்டுகளில் ஜலகண்டபுரம் பேருந்து நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயர் வைக்க தீர்மானம் கொண்டு வந்திருந்தாலும் தொடர் நடவடிக்கை இல்லாததால் அந்த கோரிக்கை மறைந்து போனது. 1996ல் காமராசர் நூற்றாண்டு வளைவு வைக்கவும், பேருந்து நிலையத்திற்கு காமராசர் பெயர் வைக்கவும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது நூற்றாண்டு நினைவு வளைவு வைக்க மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில், பேருந்து நிலையத்திற்கு பெயர் வைப்பது தொடர்பாக இன்று மாலை வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில், ஜலகண்டபுரம் பேரூராட்சி தலைவர் காசி மற்றும் திமுக நிர்வாகிகள், காங்கிரஸ் நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர்.

இன்று நடக்கிறது

ஜலகண்டபுரம் பேரூராட்சி பேருந்து நிலையத்திற்கு காமராசரின் பெயர் வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காங்கிரசார் பேரூந்து நிலையம் பகுதியில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.