Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குன்னூர் பஸ் நிலையத்தில் இண்டர்லாக் கற்கள் பொருத்தப்படும் நகராட்சி தலைவர் உறுதி

Print PDF

தினகரன் 04.08.2010

குன்னூர் பஸ் நிலையத்தில் இண்டர்லாக் கற்கள் பொருத்தப்படும் நகராட்சி தலைவர் உறுதி

குன்னூர், ஆக.4: குன்னூர் பஸ் நிலையத்தில் ரூ.36 லட்சம் செலவில் இண்டர்லாக் கற்கள் பதிக்கப்படும் என்று நகராட்சி தலைவர் உறுதியளித்துள்ளார்.

குன்னூர் பஸ் நிலையம் மிகவும் குறுகியதாக இருப்பதால் வாகன ஓட்டிகள், பயணிகள் அவதியுற்று வருகின்றனர். கோத்தகிரி செல்லும் பிரதான சாலையாக இருப்பதால் வாகன நெரிசல் தவிர்க்க முடியாததாகி உள்ளது. நெரிசலை தவிர்க்க போலீசார் தற்போது பல்வேறு ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், தற்போது ஓரளவு வாகன நெரிசல் குறைந்துள்ளது. குன்னூர் பஸ் நிலைய சாலை கடந்த சில ஆண்டுக்கு முன் பராமரிக்கப்பட்டது. அதன் பின்னர் கண்டு கொள்ளப்படவில்லை.

இதனால் தற்போது இந்த சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. ஏற்கனவே போடப்பட்ட கான்கிரீட் கம்பிகள் சாலையின் நடுவே ஆங்காங்கே காணப்படுகிறது. இவற்றில் தெரியாமல் காலை வைத்து பாதசாரிகள் ரத்த காயத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். அதுபோல் இப்பகுதியில் இயங்கும் வாகனங்கள் டயரை கிழித்து கொள்கின்றன. மழை காலத்தில் இந்த குழிகளில் மழை நீர் குளம் போல் தேங்குவதால் வாகன விபத்துகளும் தவிர்க்க முடியாததாகி வருகிறது. எனவே போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டது. இதையடுத்து சாலையை செப்பனிட நகராட்சி நிர்வாகம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து குன்னூர் நகராட்சி தலைவர் ராமசாமி கூறும் போது, பஸ் நிலைய பகுதியில் முழுமையாக ரூ.36 லட்சம் செலவில் இண்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்டு பராமரிக்க நகராட்சி முடிவு செய்துள்ளது. இப்பணிகள் இன்னும் 2 வாரத்தில் துவங்கும். அதன் பின்னர் இப்பகுதியை நகராட்சி முறையாக பராமரித்து சேதம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கும் என்றார்.