Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

எப்போது வரும் பஸ் ஸ்டாண்ட்?:பணிகளை விரைவுப்படுத்த வலியுறுத்தல்

Print PDF

தினமலர் 01.10.2010

எப்போது வரும் பஸ் ஸ்டாண்ட்?:பணிகளை விரைவுப்படுத்த வலியுறுத்தல்

பந்தலூர்:"பந்தலூர் பஜாரில், பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணியை விரைவுப்படுத்த வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.நெல்லியாளம் நகராட்சியின் 15வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது பந்தலூர் பஜார். அரசு மேல்நிலை மற்றும் பெண்கள் உயர்நிலைப் பள்ளி, தாசில்தார் அலுவலகம், அரசு தலைமை மருத்துவமனை, வட்ட வழங்கல், நகராட்சி உட்பட பல அலுவலகங்கள் உள்ளன. பந்தலூர் தனி தாலுகாவாக மாறி 12 ஆண்டுகள் கடந்தும், பஸ் ஸ்டாண்டோ, அரசுப் போக்குவரத்து கழக கிளையோ அமைக்கப்படாத நிலையில், பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். நீண்டகால கோரிக்கைக்கு பின், பஜாரின் கீழ் பகுதியில் நிழற்கூரை அமைக்கப்பட்டது.

ஒரு பக்கம் மட்டுமே நிழற்கூரை உள்ளதால், கூடலூர், ஊட்டி உட்பட பகுதிகளுக்கு செல்லும் மக்கள், கடைகளோரம் நிற்க வேண்டியுள்ளது. மாலை நேரங்களில் கூட்ட நெரிசல் அதிகரிப்பதால், பலர், கூடுதல் கட்டணம் கொடுத்து தனியார் வாகனங்களில் பயணிக்க வேண்டியுள்ளது. கூடலூர் அரசுப் போக்குவரத்து கழகக் கிளை மற்றும் ஊட்டி கிளையிலிருந்து. உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் பஸ், சிறிது நேரம் மட்டுமே, இப்பகுதியில் நிறுத்தப்படுகிறது. எனவே, பந்தலூர் பகுதியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதால், நகராட்சி நிர்வாகம் சார்பில், வணிக வளாகத்துடன் கூடிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
பந்தலூர் மார்க்கெட் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இதில் ஆக்கிரமிப்பு கடைகள், தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான கட்டடம் உள்ளது. கட்டடங்களை அகற்ற, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததுடன், நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால், திட்டம் துவக்கப்பட்டு இரு ஆண்டுகள் கடந்தும், பஸ் ஸ்டாண்ட் அமைக்க நடவடிக்கை எடுக்காததால், பஸ் ஸ்டாண்ட் வருமா? என்ற சந்தேகம், மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

நகராட்சி மன்றத் தலைவர் காசிலிங்கத்திடம் கேட்டபோது, ""பஸ் ஸ்டாண்ட் அமைக்க, எம்.பி., எம்.எல்..,விடம் நிதி பெற்று தர, நகராட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது. தற்போது, நகராட்சி நிர்வாகமே 82 லட்சம் ஒதுக்கியுள்ளது. பணி துவங்குவதற்கான அனுமதி கிடைத்தவுடன், பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி துவக்கப்படும்; அதற்கான பூர்வாங்கப் பணிகள், நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என்றார்.

Last Updated on Friday, 01 October 2010 11:36