Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சேலம் மாநகராட்சி வாகனங்களில் ஜி.பி.ஆர்.எஸ்., பொருத்த ஏற்பாடு

Print PDF

தினமலர்           25.11.2010

சேலம் மாநகராட்சி வாகனங்களில் ஜி.பி.ஆர்.எஸ்., பொருத்த ஏற்பாடு

சேலம்: சேலம் மாநகராட்சியில் ஜி.பி.ஆர்.எஸ்., நவீன தொழில்நுட்பத்தின் மூலம் வாகனங்கள் செல்லும் தூரம் உள்ளிட்ட விவரங்களை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சியில் டிராக்டர் 46, பென்சன் லாரி இரண்டு, டிப்பர் லாரி 1, மினி லாரி ஐந்து, டெம்பர் பிளேஷன் ஆறு, தண்ணீர் லாரி ஆறு, கார் மற்றும் ஜீப் 17, வேன் இரண்டு, ஜே.சி.பி., இரண்டு, டோசர் நான்கு, சலேஜ் டேங்கர் நான்கு, ஃபாகிங் வண்டி மூன்று, ஸ்வராஜ் மஸ்தா 11, லாரி ஐந்து உள்பட 112 வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது.

மாநகராட்சியின் 21 வார்டு துப்புரவு பணி ரமணாரெட்டி என்ற தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் 40 க்கும் மேற்பட்ட வாகனங்களில் குப்பைகளை அள்ளி வருகிறது. மாநகராட்சிக்கு சொந்தமான வாகனங்களை தவிர கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தனியார் டிராக்டர்கள் வாடகைக்கு எடுக்கப்படுகிறது.
மாநகராட்சிக்கு சொந்தமான வாகனங்களுக்கு அடிக்கப்படும் பெட்ரோல், டீஸல் உள்ளிட்ட விவரங்கள் "லாக்' புத்தகத்தில் முறையாக பதிவு செய்யப்படும். தவிர, குப்பை அள்ளும் வாகனங்கள், டிராக்டர்கள் ஆகியவை சென்ற தூரம் குறித்த விவரமும் பதிவு செய்யப்படும்.சேலம் மாநகராட்சியில் குறிப்பிட்ட நடை(டிரிப்) மட்டும் குப்பைகளை அள்ளிவிட்டு, கூடுதல் நடை ஓட்டியதாக பல டிரைவர்கள் கணக்கு காட்டி வருகின்றனர். சில ஆண்டுக்கு முன், குடிநீர் டிராக்டர்களை கூடுதல் நடை ஓட்டியதாக பொய் கணக்கு காட்டியது பற்றி மாநகராட்சி தணிக்கை துறையில் சுட்டிக்காட்டப்பட்டது. தினமும் மாநகராட்சிக்கு சொந்தமான வாகனங்கள் எங்கு செல்கிறது, அதன் பணி பயன்பாடு என்ன என்பது குறித்த விவரங்களை அறிய முடியாத சூழல் நிலவுகிறது. அதனால், மாநகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது. பல டிரைவர்கள் மெத்தனமாக பணியாற்றும் நிலையும் உள்ளது.

மாநகராட்சி வாகனங்களின் அன்றாட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை கண்காணிக்க ஜி.பி.ஆர்.எஸ்.,(ஜெனரல் பாக்கெட் ரேடியோ சர்வீஸ்) என்ற நவீன தொழில்நுட்பத்தை புகுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கருவியை வாகனங்களில் பொறுத்துவதன் மூலம் வாகனங்கள் எந்தெந்த பகுதிக்கு செல்கிறது என்ற விவரத்தை 100 சதவீதம் முழுமையாக கண்காணிக்க முடியும்.வாகனங்களுக்கு அடிக்கப்படும் பெட்ரோல், டீஸல் விவரங்கள், வாகனத்தை ஓட்டி செல்லும் டிரைவர், வாகனம் ஓட்டப்பட்ட நடை விவரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் முழுமையாக தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலம் தேவையில்லாத எரிபொருள் செலவு குறைவதுடன், பணிக்காலத்தில் டிரைவர்கள் ஏமாற்றுவதும் தவிர்க்கப்படும். ஜி.பி.ஆர்.எஸ்., கருவியை பயன்படுத்துவது குறித்து அதிகாரிகள் தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர். விரைவில் இத்திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.