Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திறப்பு விழா நடந்து 6 மாதத்தில் ‘பார்க்கிங்’ ஆனது பஸ் நிலையம்

Print PDF

தினகரன்         30.11.2010

திறப்பு விழா நடந்து 6 மாதத்தில் பார்க்கிங்ஆனது பஸ் நிலையம்

கும்மிடிப்பூண்டி, நவ.30: கும்மிடிப்பூண்டி பஜாரில் இருந்து தினமும் பொன்னேரி, சென்னை, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, ஆரம்பாக்கம், சத்தியவேடுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.

மேலும், சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி வழியாக திருப்பதி உட்பட பல ஊர்களுக்கு பஸ்கள் வந்து செல்கின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், நோயாளிகள், தினக்கூலி தொழிலாளர் என பல்வேறு தரப்பட்டவர்கள், கும்மிடிப்பூண்டி, சுண்ணாம்புகுளம், அண்ணாமலைச்சேரி, ஓமசமுத்திரம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை பகுதிகளிலிருந்து வந்து செல்கின்றனர்.

வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசலும், பஸ்சில் பயணம் செய்ய வருபவர்கள், சாலையில் குறுக்காக ஓடுவதால் விபத்துக்களும் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில், பேரூராட்சி நிர்வாகம் சார்பில், ரூ30 லட்சம் செலவில் அங்கு பஸ் நிலையம் ஓராண்டுக்கு முன்பு கட்டப்பட்டது. பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டன. 10 கடைகளும் கட்டப்பட்டுள்ளன.

6 மாதத்துக்கு முன்பு திறப்பு விழா நடந்தது. ஆனால், பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் சென்று வர நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பஜார் சாலையில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன பஸ்கள். இதனால், பஸ் நிலையத்துக்குள் தனியார் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிவிட்டது.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், "கும்மிடிப்பூண்டி பஜார் அருகே பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த ஆண்டு பஸ் நிலையம் கட்டப்பட்டது. ஆனால், அங்கு பஸ் சென்றுவர நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் தனியார் வாகனங்களை அப்புறப்படுத்தி, அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் பஸ் நிலையத்துக்குள் வந்து செல்ல பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் பேரூராட்சிக்கு வருவாய் கிடைக்கும்" என்றனர்.