Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சேலத்தில் ரூ.1 கோடி அபராதம் வசூல்

Print PDF
தினமலர்      24.12.2010

சேலத்தில் ரூ.1 கோடி அபராதம் வசூல்


சேலம்: ""தமிழக அளவில் போக்குவரத்து விதி மீறிய வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து, சேலம் போலீஸார் ஒரு கோடி ரூபாய் அபராதம் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளனர்,'' என, போலீஸ் கமிஷனர் சுனில்குமார் சிங் தெரிவித்தார். அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சேலம் மாநகரில் கடந்த பத்து ஆண்டுகளை காட்டிலும், மக்கள் தொகை அதிகரித்துள்ளது. அப்போது, போக்குவரத்து பிரிவில் பணியாற்றிய 100 போலீஸாரே, இப்போதும் பணியாற்றி வருகின்றனர். வாகன பெருக்கம் மற்றும் ஜன தொகை அதிகரித்துள்ள நிலையில், குறைந்தளவு போக்குவரத்து போலீஸார் மூலம் முழு அளவில் போக்குவரத்து விபத்து மற்றும் குற்றங்களை தடுப்பது எளிதான காரியம் அல்ல. சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில், "ஸ்பாட் ஃபைன்' சிஸ்டம் அமலில் உள்ளது. இந்த, "ஸ்பாட் ஃபைன்' சிஸ்டம் மூலம் போக்குவரத்து விதி முறை மீறும் வாகனங்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, போலீஸார் அபாராதம் விதிக்க முடியும். ஆனால், சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட மாநகரங்களில், "ஸ்பாட் ஃபைன்' சிஸ்டம் இல்லாததால், தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்கு பதிவு செய்து, வாகன ஓட்டிகளுக்கு, "சம்மன் சர்வ்' செய்து, நீதி மன்றம் மூலம் அபாராதம் விதித்து, வசூல் செய்வதில் பல்வேறு நடைமுறைகளை கடை பிடிக்க வேண்டியுள்ளது. பெங்களூரு, சென்னை நகரங்களில் (டி.ஆர்.எம்.எஸ்.,) டிரான்ஸ்போர்ட் ரெகுலேஷன் மானிட்டரிங் சிஸ்டம் அமலில் உள்ளது. இதன் மூலம், "கன்ட்ரோல் ரூம்'மில் நான்கு போலீஸார் அமர்ந்து கொண்டு, நகரின் அனைத்து பகுதியிலும் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா மூலம் வாகன விதி முறை மீறல்களை கண்காணித்து, அபராதம் விதிக்க முடியும். குறைவான போக்குவரத்து போலீஸாரை கொண்டு, தொழில்நுட்ப அடிப்படையில் போக்குவரத்து விதி முறை மீறலை தடுக்க முடியும். சேலம் மாநகரத்தில் 2010 ஜனவரி முதல் டிசம்பர் 22ம் தேதி வரை போக்குவரத்து விதி மீறியதாக 73 ஆயிரத்து 161 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், "ஹெல்மெட்' அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள் மீது மட்டும் 25 ஆயிரத்து 325 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அளவில் போக்குவரத்து விதி மீறிய வழக்குகளில் சேலம் மாநகர போலீஸ் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக அபாரதம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளனர். போக்குவரத்து விதி முறை மீறிய வழக்குகளில் சிக்கியவர்களிடம் இருந்து ஒரு கோடியே 20 லட்சத்து 83 ஆயிரத்து 115 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகர பகுதியில் கள்ளச்சாராயம் என்பது கிடையாது. மாநகர எல்லைக்கு அப்பால் உள்ள மாவட்ட பகுதியில் இருந்து கள்ளச்சாராய வியாபாரிகள் நகருக்குள் ஊடுருவி சாராயம் விற்பனை செய்கின்றனர். சாராயம் விற்பனை செய்பவர்களை போலீஸார் கண்காணித்து நடவடிக்கை எடுப்பார், என்றார்.

கண்டு கொள்ளாத மாநகராட்சி போலீஸ் கமிஷனர் எரிச்சல் : மாநகர போலீஸ் கமிஷனர் சுனில்குமார் சிங் கூறும் போது, ""போக்குவரத்து விதி முறை மீறல், விபத்து சம்பவங்களை முழு அளவில் கட்டுப்படுத்த வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். மாநகர போலீஸ் துறை மூலம் மட்டுமே போக்குவரத்து குற்றங்களை தடுத்துவிட முடியாது. மாநகராட்சி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இணைந்து செயல்பட முன் வர வேண்டும். சேலத்தை பொருத்த வரை சாலை வசதி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சாலை வசதி மேம்படுத்த வேண்டியது மாநகராட்சி தான். ஒரு ஆண்டுக்கு முன் மாநகர பகுதியில் மெயின் ரோடுடன் இணையும் 250 குறுக்கு சாலைகளை போலீஸார் கண்டறிந்து, அந்த இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டி மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், இதுவரை ஒரு இடத்தில் கூட வேகத்தடை அமைக்கப்படவில்லை. சேலத்தில் உள்ள 3.5 லட்சம் வாகனங்களுக்கு தேவையான சாலை வசதி, இல்லாத நிலையில் போக்குவரத்து விதி மீறல், விபத்துக்களை தடுப்பது என்பது மிகவும் சிரமம்,'' என்றார்.