Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பஸ்களுக்கு சாலையில் தனிவழித் தடம்

Print PDF

தினமணி 4.11.2009

பஸ்களுக்கு சாலையில் தனிவழித் தடம்

சென்னை, நவ. 3: சென்னை நகரில் இயக்கப்படும் பஸ்களுக்கு சாலையில் தனிவழித் தடத்தை ஏற்படுத்த போக்குவரத்துத் துறை திட்டமிட்டு வருகிறது.

பெருகி வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வழிமுறையின் ஒருபகுதியாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை நகரில் 2,815மாநகர பஸ்கள் 500-க்கும் மேற்பட்ட வழித் தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், லட்சக்கணக்கில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சாலையில் செல்கின்றன.

வாகனங்களின் பெருக்கம் ஒருபுறம் அதிகரிக்க, போக்குவரத்து நெரிசல் மறுபுறம் கூடிக் கொண்டே செல்கிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

துணை முதல்வர் தலைமையில்...: போக்குவரத்து நெரிசலைக் குறைக்கத் தேவையான ஆலோசனைகளை வழங்க துணை முதல்வர் மு..ஸ்டாலின் தலைமையில் அண்மையில் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது.

நெரிசலைக் குறைக்கும் வகையிலான ஆலோசனைகளை அறிக்கையாக அளிக்கும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

சாலையில் தனிவழித் தடம்...இந்த நிலையில், சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றனர்.

இதுகுறித்து, அந்தத் துறையின் உயரதிகாரி ஒருவர் கூறியது:

""சென்னை மாநகர சாலைகளில் போக்குவரத்து நெரிசலை அதிகம் ஏற்படுத்தும் வாகனங்கள் எவை? என்று அறுதியிட்டுக் கூறமுடியாது. மாநகர பஸ்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிறுத்தங்களில் நிற்பதில்லை என புகார்கள் வருகின்றன. இதற்குக் காரணம், நிறுத்தங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள்தான். இதனால், சாலையின் நடு மற்றும் வலதுபுறப் பகுதிகளில் பஸ்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. மாநகர பஸ்கள் அனைத்தும் சாலையின் இடதுபுறம் செல்லும் வகையில் அதற்கென தனி வழித்தடம் ஏற்படுத்த போக்குவரத்துத் துறை திட்டமிட்டு வருகிறது. நகரின் பிரதான சாலையில் சோதனை அடிப்படையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது'' என்றார்.

அண்ணா சாலையில்...அண்ணா சாலையில் டி.வி.எஸ். பஸ் நிலையம் முதல் ஸ்பென்சர் சந்திப்பு வரை சாலையில் மூன்று வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இரு சக்கர, மூன்று சக்கர வாகனங்களுக்கு முறையே தனித்தனி வழித் தடங்களும், பஸ் போக்குவரத்துக்கு தனி வழித்தடமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்பென்சர் சந்திப்புக்குப் பிறகு மூன்றுவழித் தடம் அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பஸ்களுக்கென சாலையில் தனி வழித் தடத்தை அமைப்பதற்கான திட்டங்களை தயாரிக்கும் பணியில் போக்குவரத்துத் துறை ஈடுபட்டுள்ளது.

Last Updated on Wednesday, 04 November 2009 06:12