Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருக்காட்டுப்பள்ளி பேருந்து நிலையத்தைச் சீரமைக்க ரூ. 15 லட்சம் நிதி

Print PDF

தினமணி 16.12.2009

திருக்காட்டுப்பள்ளி பேருந்து நிலையத்தைச் சீரமைக்க ரூ. 15 லட்சம் நிதி

திருக்காட்டுப்பள்ளி,டிச. 15: திருக்காட்டுப்பள்ளி பேருந்து நிலையம் திருவையாறு சட்டப்பேரவை உறுப்பினர் நிதி ரூ. 15 லட்சத்தில் இருந்து சீரமைக்கப்படும் என்றார் பேரூராட்சித் தலைவர் கோகிலா சிங்காரவேலு.

திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சிக் குழுக் கூட்டம் தலைவர் கோகிலா சிங்காரவேலு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு செயல் அலுவலர் கலைச்செல்வன், தலைமைக் கணக்கர் த. குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பேரூராட்சிக்குழுத் தலைவர் கோகிலா சிங்காரவேலு பேசியது:

திருக்காட்டுப்பள்ளி பேருந்து நிலையத்தைச் சீரமைக்க ரூ. 15 லட்சத்தை திருவையாறு சட்டப்பேரவை உறுப்பினர் துரை. சந்திரசேகரன், தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலமாக வழங்கியுள்ளார். அவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படும். மேலும் திருக்காட்டுப்பள்ளி தேரோடும் வீதி, வடக்குவீதி, கீழவீதி ஆகியவற்றைச் சீரமைக்க ரூ. 10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

தொடர்ந்து நடைபெற்ற விவாதம்:

ரதி (மார்க்சிஸ்ட் கம்யூ.): எனது பகுதியில் கொசுத் தொல்லை அதிகளவில் உள்ளது. ஆகவே கொசு மருந்து அடிக்க வேண்டும்.

கலைச்செல்வன் (செயல் அலுவலர்): தற்பொழுது மழை பெய்துவருவதால் 15 வார்டுகளிலும் கொசு மருந்து அடிக்கும் நடவடிக்கை இன்று முதல் தொடங்கப்படும்.

கதிரேசன் (திமுக) : அய்யனார் கோயில் வளாகத்தைச் சீரமைக்க வேண்டும். பலமுறை கூறியும் நடவடிக்கை இல்லை. கோகிலா சிங்காரவேலு : கோயில் வளாகம் சீரமைக்கப்படும்.

தன்ராஜ் (அதிமுக): எனது பகுதியான ஒன்பத்துவேலியில் 2 பொதுக் கழிப்பறைகள் உள்ளன. இங்கு சுகாதாரச் சீர்கேட்டைச் சரிசெய்ய வேண்டும். இதுகுறித்து பணியாளர்கள் கண்டு கொள்ளவில்லை. இதற்கு பேரூராட்சி செயல் அலுவலர், பணியாளர் இந்திரஜித் என்பவரை அழைத்து, ஏன் இந்தப் பகுதியில் உள்ள பொதுக் கழிப்பறைக்கு தண்ணீர் வருவதில்லை. பணிகள் செய்யப்படவில்லையா எனக் கேட்டபோது பணிகள் செய்யப்பட்டன என்றார் இந்திரஜித். தன்ராஜ் (அதிமுக) : அவர் கூறுவது தவறு. பொதுக் கழிப்பறைகளில் தண்ணீர் வருவதில்லை. அசுத்தமாகவும் உள்ளது. நான் கூறியது பொய் என்றால், எனது பகுதிக்கு வந்து ஆய்வு செய்யலாம்.

இதையடுத்து கூட்டம் முடிந்ததும் ஒன்பத்துவேலியில் உள்ள 2 கழிவறைகளை பேரூராட்சி செயல் அலுவலர், தலைவர் உள்ளிட்டோர் சென்று ஆய்வு செய்தபோது, கழிவறையில் தண்ணீர் வசதி இருந்தது. ஆனால் சுகாதாரம் இல்லை. "கழிவறையைப் பயன்படுத்துவோர் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே சுகாதாரம் இருக்கும்' என்றார் தலைவர்.