Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குன்னூர் பேருந்து நிலைய விரிவாக்கத்துக்கு ரூ.11 கோடியில் திட்டம்

Print PDF

தினமணி 04.01.2010

குன்னூர் பேருந்து நிலைய விரிவாக்கத்துக்கு ரூ.11 கோடியில் திட்டம்

உதகை ஜன.3: குன்னூர் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய ரூ.11 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போதுள்ள பேருந்து நிலையத்தையொட்டியுள்ள தீயணைப்பு நிலையத்தை வண்டிச்சோலை பகுதிக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உதகைக்கு அடுத்தாற்போல பெரிய நகரம் குன்னூராகும். ஏராளாமான கிராமப் பகுதிகளை உள்ளடக்கியுள்ள குன்னூர் பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. குன்னூரில் உள்ள பேருந்து நிலையம் சிறிய பேருந்து நிலையமாகும்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 15 பேருந்துகளை மட்டுமே நிறுத்துவதற்கு இட வசதி உள்ளது. ஆனால் இப்பேருந்து நிலையத்திற்கு தினந்தோறும் 70 அரசு பேருந்துகளும், 33 தனியார் மினி பேருந்துகளும் வந்து செல்கின்றன.

இதனால் இட நெருக்கடி ஏற்பட்டு போக்குவரத்து நெரிசலாவதோடு, பொதுமக்களும், பயணிகளும் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். அத்துடன் குறித்த நேரத்திற்கு பேருந்துகள் வராதது, போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்வது ஆகியவையும் தினந்தோறும் நடைபெறும் நிகழ்வுகளாகும்.

எனவே, குன்னூர் பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தினால்தான் இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியுமென்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், இதற்கு தடையாக இருப்பது இப்பேருந்து நிலையத்தையொட்டியுள்ள தீயணைப்பு நிலையம்தான்.

எனவே, தீயணைப்பு நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்றிவிட்டு பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு நிலையத்தை உதகை-குன்னூர் சாலையில் மாற்ற திட்டமிடப்பட்டது. ஆனால், அங்கு போதிய இடவசதி இல்லாததால் அங்கு செல்ல முடியாது என தீயணைப்புத்துறையினர் மறுத்து விட்டனர்.

இப்பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வந்ததால் பேருந்து நிலைய விரிவாக்கமும் சிக்கலிலேயே இருந்தது. ஆனால், தற்போது இதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக குன்னூர் நகர்மன்ற தலைவர் ராமசாமி தெரிவித்ததாவது:

குன்னூரில் பேருந்து நிலையத்தையொட்டியுள்ள தீயணைப்பு நிலையத்தை வண்டிசோலை பகுதிக்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சமுதாயக் கூடம் அருகே தீயணைப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது.

இப்பகுதியில் போதிய இட வசதியோடு, தண்ணீர் வசதியும், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. இதையடுத்து குன்னூர் பேருந்து நிலையம் விரிவாக்கப்படும். இதற்காக ரூ.11 கோடி செலவில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

இதற்காக அரசின் அனுமதியை கோரும் தீர்மானமும் நகர்மன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு கிடைத்ததும் பணிகள் உடனடியாக தொடங்கப்படும்.

இப்பேருந்து நிலையத்தில் பயணிகல் இருக்கை வசதி, குடிநீர், கழிப்பிடம், வணிக வளாகம், பேருந்துகளை நிறுத்துவதற்கான கூடுதல் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்படும் என்றார்.

Last Updated on Monday, 04 January 2010 08:59