Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வாலாஜாவில் புதிய பஸ்நிலையம் இந்த ஆண்டு திட்டம் நிறைவேறும் எம்எல்ஏ., காந்தி உறுதி

Print PDF

தினமலர் 07.01.2010

வாலாஜாவில் புதிய பஸ்நிலையம் இந்த ஆண்டு திட்டம் நிறைவேறும் எம்எல்ஏ., காந்தி உறுதி

வாலாஜாபேட்டை:"வாலாஜாபேட்டை நகரத்துக்கு புதிய பஸ்நிலையம் அமைக்கும் திட்டம் இந்த ஆண்டு நிறைவேறும்' என எம்எல்ஏ., காந்தி உறுதியளித்தார். வாலாஜாபேட்டை நகராட்சியில் 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட நவீன ஆட்டிறைச்சி கூடம், 2 லட்சம் ரூபாய் செலவிலான கூடுதல் கட்டடம் திறப்பு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும்பொருட்டு போலீஸ் மற்றும் வியாபாரிகளுடன் இணைந்து நிறுவப்பட்டு வரும் இரும்பு தடுப்புவேலி (பேரிகார்டு) தொடக்கம், ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ், பிரசவித்த பெண்கள் 30 பேருக்கு தலா 600 ரூபாய் வீதம் நிதியுதவி வழங்குதல், 30 பள்ளி மாணவர்களுக்கு கண்ணொளி திட்டத்தின் கீழ், இலவச கண் கண்ணாடி வழங்குதல், விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு சாதனங்கள் வழங்குதல் ஆகியவற்றுக்கான விழா நடந்தது.

நிகழ்ச்சிக்கு, சேர்மன் நித்தியானந்தம் தலைமை வகித்தார். தணை தலைவர் வள்ளியம்மாள் முன்னிலை வகித்தார். கமிஷனர் பாரிஜாதம் வரவேற்றார். புதிய கட்டடங்களை திறந்து வைத்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் எம்எல்ஏ., காந்தி பேசியதாவது:இந்த நகரம் ஒரு நல்ல நகரம். அண்மைக்காலமாக ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலால் நிகழும் விபத்துக்களை தவிர்க்கும்பொருட்டு, ஒருவழிப்பாதை ஆக்கும் முயற்சி மேற்கொண்டோம். அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையொட்டி, அவர்கள் சொல்லும் காரணம் சரியானதாக இருந்ததால் அது சாத்தியமில்லை என்று அந்த திட்டம் கைவிடப்பட்டது.

பிறகு ஆக்கிரமிப்புகள் அகற்றி, நடைபாதைகள் அமைத்து பேரிகார்டு நிறுவலாம் என இன்ஸ்பெக்டர் சீத்தாராம் கூறியதையடுத்து, அந்த திட்டம் பொதுமக்கள், வியாபாரிகள், அனைத்து கட்சியினர் ஒத்துழைப்போடு செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் இப்போது நடந்து வருகிறது.இதற்காக இப்பகுதி மக்கள் வழங்கிய நன்கொடை பட்டியலை பார்த்து ஆச்சரியப்பட்டேன். இவ்வளவு பண உதவி செய்யும் வியாபாரிகள், கல்வி நிறுவனத்தினரை பாராட்டுகிறேன்.

பணம் இருக்கும் எல்லோருக்கும் மனம் இருக்காது. இங்கு இருப்பவர்களுக்கு மனம் நிறைய உள்ளது. நாம் நல்லது செய்கிறோம் என்றால், மக்களும் தானாக வந்து நன்கொடை வழங்குவார்கள். அப்படித்தான் இந்த "பேரிகார்டு' திட்டத்தை வரவேற்று நன்கொடை வாரி வழங்குகிறார்கள். இந்த பணி முடிந்து மக்கள் நடந்து செல்ல நடைபாதை அமைத்த பிறகு மற்ற நகரத்துக்கு முன்மாதிரியாக வாலாஜா அமையும்.

இந்நகரத்துக்கு புதிய பஸ்நிலையம் இந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டு விடும். அதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. அரசும் பணம் ஒதுக்க தயாராக உள்ளது. மேலும், பாதாள சாக்கடை திட்டமும் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது. நாம் செய்வதை மக்கள் நன்றாக கவனித்து வருகிறார்கள். மக்கள் பணியை செய்யாதவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிடவே முடியாது. இன்னும் 20 ஆண்டுகள் கழித்தால் எம்எல்ஏ., "சீட்' கேட்கவே யாரும் வரமாட்டார்கள். அந்த அளவுக்கு மக்கள் கவனித்து வருகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், நகராட்சிகளின் மண்டல இயக்குனர் பாலசுப்பிரமணியம், இன்ஸ்பெக்டர் சீத்தாராம், சுகாதார துறை துணை இயக்குனர் சுரேஷ், கவுன்சிலர்கள் சரவணன், அக்பர்ஷரீப், ரமேஷ், சாதிக்பாஷா உட்பட பலர் பேசினர்.விழாவில், பேரிகார்டு அமைக்க நிதியுதவி அளித்தவர்களில் பஜார் வியாபாரிகள் சங்க தலைவர் பரமசிவம், கவுரவ தலைவர் பீஷ்மாச்சாரி, செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் முருகன், ஜெயின் தங்கமாளிகை அதிபர் சஜன்ராஜ் ஜெயின், குளோப் டைல்ஸ் அதிபர் அக்பர்ஷரீப் உட்பட பங்கேற்ற அனைவருக்கும் எம்எல்ஏ., காந்தி சால்வை அணிவித்து பாராட்டி கவுரவித்தார். நகராட்சி பொறியாளர் ஆனந்தஜோதி நன்றி கூறினார்.

Last Updated on Thursday, 07 January 2010 06:38