Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாட்டுத்தாவணிக்கு ஆம்னி பஸ்களை மாற்ற நடவடிக்கை: மேயர், மாநகராட்சி கமிஷனர் தகவல்

Print PDF

தினமலர் 03.02.2010

மாட்டுத்தாவணிக்கு ஆம்னி பஸ்களை மாற்ற நடவடிக்கை: மேயர், மாநகராட்சி கமிஷனர் தகவல்

மதுரை: ""மதுரை மாட்டுத்தாவணிக்கு ஆம்னி பஸ்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்'' என மேயர் தேன்மொழி, மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் கூறினர்.

நேற்று நிருபர்களிடம் அவர்கள் கூறியதாவது: மதுரையில் 22 ஆயிரம் குடிசை வீடுகளை மானியத்துடன் கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பட்டா இடத்தில் வசிக்கும் அனைத்து குடிசைவாசிகளுக்கும் காங்கிரீட் வீடுகள் கிடைக்கும். புறம்போக்கு, ரயில் பாதை ஓரங்களில் குடியிருக்கும் குடிசைவாசிகளுக்கு அதே இடத்தில் கட்ட உதவி தரப்பட மாட்டாது. மாற்று இடம் தர தயாராக இருக்கிறோம். இதற்காக ராஜாக்கூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப் படுகின்றன. மாட்டுத்தாவணியில் 10 ஏக்கர் பரப்பளவில் லாரி ஸ்டாண்ட் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு பாதியை ஆம்னி பஸ் ஸ்டாண்ட் ஆக மாற்றுவது பற்றி பரிசீலிக்கப்படும். அவர்கள், மொத்தமாக வந்தால் புக்கிங் ஆபீஸ்கள் கட்டித் தருவது பற்றி ஆலோசிக்கப்படும். மேலூர் ரோட்டில் நெரிசலை குறைக்க, புதிய சென்ட்ரல் மார்க்கெட் நுழைவு வாயில், லேக் ரோட்டில் அமைக்கப்படும். பிப்ரவரி மாத இறுதிக்குள் பணிகள் முடிந்து, மார்க்கெட் செயல்படத் துவங்கும். பெரும்பாலான வியாபாரிகள், இங்கு வர சம்மதித்துள்ளனர். கடைகள் இடம் மாறியதும், தற்போதுள்ள சென்ட்ரல் மார்க்கெட் இடிக்கப்படும். அந்த இடத்தில் ஐந்து கோடி ரூபாய் செலவில் பல மாடி கார் பார்க்கிங் அமைக்க, மத்திய சுற்றுலா துறை நிதி தரும் என எதிர்பார்க்கிறோம்.

சமீபத்தில் திறக்கப்பட்ட இலவச கழிப்பறைகளை நாங்கள் நேரில் ஆய்வு செய்தோம். அவை நன்கு பராமரிக்கப்படுகின்றன. மக்களிடம் வரவேற்பு இருக்கிறது. பஸ் ஸ்டாண்டுகளில் உள்ள கழிப்பறைகள், 24 மணி நேரமும் இயங்கும். மற்றவை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். போலி பென்ஷன்தாரர் பெயரில் மோசடி செய்யப்பட்ட 75 லட்சம் ரூபாயில் 10 லட்சம் ரூபாய் வசூலாகி விட்டது. ஆறாவது சம்பள கமிஷன் நிலுவையை வழங்கும்போது, மீதி தொகையும் பிடித்தம் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்

Last Updated on Wednesday, 03 February 2010 07:48