Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதிய பஸ் நிலையம் அமைக்க மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் தீவிரம்

Print PDF

தினமணி 16.02.2010

புதிய பஸ் நிலையம் அமைக்க மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் தீவிரம்

தேனி, பிப்.15: தேனியில் புதிய பஸ் நிலையம் அமைக்க மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாவட்டத் தலைமையிடமாக விளங்கும் தேனி நகரின் மையப் பகுதியில், சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் நகராட்சி பஸ் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து கேரளம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு அதிகளவில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

வணிக வளாகக் கடைகள், நடைமேடை ஆகியவை தவிர, இந்த பஸ் நிலையம் ஒரு ஏக்கர் பரப்பளவிலேயே செயல்படுகிறது. இதனால் விழாக் காலங்களிலும், பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலக வேலை நாள்களிலும் பயணிகள் கூட்டம் அதிகளவில் உள்ளதால், பஸ் நிலையத்தில் இடநெருக்கடி ஏற்படுகிறது. பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பெரியகுளம், கம்பம், மதுரை சாலைகளில் அதிகளவில் கடைகள், வாரச் சந்தை, தினசரி சந்தை ஆகியவை இருப்பதால் நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதையடுத்து, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் புதிய பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு, தேனி - பெரியகுளம் புறவழிச்சாலையில் சிட்கோ வடபுறம் உள்ள வனத்துறைக்கு சொந்தான 7.5 ஏக்கர் இடத்தை தேர்வு செய்தது.

இந்த இடத்திற்குப் பதிலாக வனத்துறைக்கு கடமலைக்குண்டு வனச்சரகப் பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் 15 ஏக்கர் மாற்று இடம் வழங்க, தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன் பேரில், நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையும் புதிய பஸ் நிலையம் அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

நகராட்சி நிர்வாகமும் வனத்துறைக்கு செலுத்த வேண்டிய இழப்பீட்டுத் தொகை ரூ.21 லட்சத்தை கருவூலம் மூலம் செலுத்தியுள்ளது. பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ள இடத்தை கையகப்படுத்த வாய்ப்பாக, வனத்துறை இடத்தைச் சுற்றி தூண்கள் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் புதிய பஸ் நிலையத்தின் அமைப்பு, வணிக வளாகம் மற்றும் தேவையான வசதிகள் செய்ய ரூ.26 கோடியில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உலக வங்கியில் கடனுதவி பெறுவதற்கு நகராட்சி நிர்வாகம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால் இந்த மதிப்பீட்டுத் தொகையை திருத்தம் செய்ய உலக வங்கி அறிவுரை வழங்கியுள்ளதையடுத்து, புதிதாக மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறன.

Last Updated on Tuesday, 16 February 2010 05:46