Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

இப்பவோ? எப்பவோ?இழுக்கிறது புது பஸ் ஸ்டாண்ட் பணி: விரைவில் முடிக்க மாநகராட்சி தீவிரம்!

Print PDF

தினமலர் 29.03.2010

இப்பவோ? எப்பவோ?இழுக்கிறது புது பஸ் ஸ்டாண்ட் பணி: விரைவில் முடிக்க மாநகராட்சி தீவிரம்!

மேட்டுப்பாளையம் ரோடு பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப் பணிகளை துரிதப் படுத்த மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. கோவையிலிருந்து ஊட்டி, குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் செல்லும் பஸ்கள், காந்திபுரம் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டுக்கு வருவதால் நகருக்குள் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், தேவையற்ற காலவிரயமும் ஏற்படுகிறது.

இதைத் தவிர்க்கும் பொருட்டு, மேட்டுப்பாளையம் ரோட்டில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட மாநகராட்சி கவுன்சிலில், கடந்த 2007 நவம்பரில் ஒப்புதல் வழங்கப்பட்டது. நவீன முறையில் இந்த பஸ் ஸ்டாண்டைக் கட்டுவதற்கு, 7 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. பஸ் ஸ்டாண்ட் வடிவமைக்கும் பணியை, 'வில்பர்ஸ்மித்' நிறுவனம் மேற் கொண்டது. கட்டுமானப் பணிகளை திருப்பூரைச் சேர்ந்த 'புவனா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்' என்ற நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதற்கான 'ஒர்க்ஆர்டர்', 2008 மே 28ல் வழங்கப்பட்டது. பணியை முடிக்க ஓராண்டு கால அவகாசம் வழங்கப்பட்டது. இதன்படி, 2009 மே மாதத்தில் பணி முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இன்று வரை இந்த பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி இழுத்துக்கொண்டிருக்கிறது. இதற்கு, பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. வேலையாள் பற்றாக்குறை, கம்பிகளின் திடீர் விலையேற்றம், தொடர் மழை என பல காரணங்கள் கூறப்பட்டாலும், பஸ் ஸ்டாண்ட் வடிவமைப்பில் மாநகராட்சி அதிகாரிகள் செய்த குளறுபடிகளே காரணமென்று அ.தி.மு.., தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

மொத்தம் 3 ஏக்கர் பரப்பில் அமையும் இந்த பஸ் ஸ்டாண்ட்டில் 25 பஸ்களை ஒரே நேரத்தில் நிறுத்த முடியும். தரை தளத்தில் அலுவலகம்,டிக்கெட் கவுன்டர், ரெஸ்டாரண்ட், பொருள் பாதுகாப்பு அறை, ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி ஏ.சி., வெயிட்டிங் ரூம் என ஏராளமான அறைகள் கட்டப்படுகின்றன. இவற்றைத்தவிர்த்து, 4 இடங்களில் நவீன முறையிலான கழிப்பிடங்கள் இங்கு அமைக்கபடவுள்ளன. தரைதளத்தில் ஆட்டோ ஸ்டாண்ட் அமைக்க தனியாக இடம் ஒதுக்கப்படுகிறது. முதல் தளத்தில் 18 கார்கள், 361 டூ வீலர்களை நிறுத்த 'பார்க்கிங்' அமைக்கப்படுகிறது. தரை தளத்திலிருந்து செல்ல லிப்ட் வசதி, ஊனமுற்றோர் நடக்க சாய்வுதளம் என ஏராளமான வசதிகளுடன் இந்த பஸ் ஸ்டாண்ட் கட்டப்படுகிறது. இவற்றுடன், மேட்டுப்பாளையம் ரோட்டைக் கடக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கவும் சேர்த்தே நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், அதற்கான அனுமதியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழங்கவில்லை. தற்போது அந்த ரோடு, 50 கோடி ரூபாய் மதிப்பில் அகலப்படுத்தும் பணி துவங்கவுள்ளது. அந்த பணி முடித்தபின், நடைபாதை மேம்பாலம் அமைத்துக்கொள்ள ஆணையம் ஒப்புக்கொண்டுள்ளது. இதன் காரணமாக, பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி, ஐந்தரை கோடி ரூபாய் மதிப்பில் முடிவடையவுள்ளது. ஏற்கனவே, 10 மாதங்கள் தாமதமாக நடந்து வரும் இந்த பணியில், இன்று வரையிலும் பெரிய வேகம் இல்லை. இன்னும் முடிய வேண்டிய பணிகள் எக்கச்சக்கமாக உள்ளன. இவ்வளவு காலமாக இந்தப் பணி தாமதமாகி வருவது பற்றி அக்கறை காட்டாத மாநகராட்சி நிர்வாகம், பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணியை விரைவாக முடிக்க திடீரென தீவிரம் காட்டி வருகிறது.

கோவை மாநகராட்சி பொறியாளர் கருணாகரன் தலைமையில் பொறியாளர்கள் அடிக்கடி ஆய்வு செய்து வருகின்றனர். கூடுதல் பணியாளர்களை வைத்து பணிகளை விரைவாக மேற்கொள்ள அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பஸ் ஸ்டாண்ட் வடிவமைப்பில் வேறு மாற்றம் இருக்காது என்றும் அவர்கள் உறுதியளித்தனர். மாநகராட்சிப் பொறியாளர் கருணாகரன் கூறுகையில், ''நிச்சயமாக ஏப்ரல் 15க்குள் பணிகளை முடித்து விடுவோம். அதில் எந்தத் தடங்கலும் இல்லை,'' என்றார். நிர்வாகப் பொறியாளர் கணேஷ்வரனும் இதே உறுதியை அளித்தார். உறுதியளித்தபடி ஏப்ரலில் முடியுமா என்பது ஏப்ரல் முடிந்த பின்பே தெரியும்.

கூரை வேண்டாமா?: பஸ் ஸ்டாண்டின் உட்பகுதியில் சுற்றுச்சுவரை ஒட்டி, சுவரோரப் பூங்கா அமைக்கப்படுகிறது. கார்பனை உட்கொள்ளும் செடிகள், கொரியப்புற்கள், 4 வேப்ப மரங்கள் போன்றவை வளர்க்கப்படவுள்ளன. ஆனால், கார்கள் மற்றும் டூ வீலர் களுக்கு கூரையில்லை; கொட்டும் மழையில் நனைந்து, மொட்டை வெயிலில் அவை காய வேண்டும். இதற்கு ஒரு கூரை அமைத்தால், மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டதைப் போலவே பஸ் ஸ்டாண்ட், நவீனமாய், பயனுள்ளதாய் இருப்பது நிச்சயம்.

-நமது நிருபர்-

Last Updated on Monday, 29 March 2010 06:28