Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

ஓசூர் நகராட்சியில் நவீன பேருந்து நிலையம் பயணிகள் பயன்பாட்டிற்கு திறப்பு

Print PDF

தினகரன் 06.08.2010

ஓசூர் நகராட்சியில் நவீன பேருந்து நிலையம் பயணிகள் பயன்பாட்டிற்கு திறப்பு

ஓசூர், ஆக.6: ஓசூரில் ரூ.11 கோடியில் கட்டப்பட்டுள்ள அதிநவீன பேருந்து நிலையம் பயணிகள் பயன்பாட்டுக்கு நேற்று திறக்கப்பட்டது. ஓசூர் நகராட்சியில், ரூ.11 கோடியில் கட்டப்பட்டுள்ள அதிநவீன பேருந்து நிலையம் கடந்த 2007 ஆகஸ்ட் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு, கடந்த மாதம் 18ம் தேதி துணை முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நவீன பேருந்து நிலையத்தில் 64 வணிக வளாகக்கடைகள், 2 ஹோட்டல்கள், பேருந்து அலுவலகங்கள் ஆகியவை உள்ளன. இந்நிலையில் இந்த அதிநவீன பேருந்து நிலையம் மக்கள் மற்றும் பயணிகள் பயன்பாட்டுக்காக நேற்று திறக்கப்பட்டது.

இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் ஓசூர் நகர்மன்றத்தலைவர் சத்யா, துணைத்தலைவர் மாதேஸ்வரன், கவுன்சிலர்கள் நாகராஜ், குமார், ஜெய் ஆனந்த், அனுசுயா, லோகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேருந்து நிலையத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள பயணிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று நகர்மன்றத் தலைவர் சத்யா கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், பேருந்து நிலையம் முன் தள்ளுவண்டி கடைகள், சாலையோர கடைகள் அமைக்காமல் இருக்க மக்களை கேட்டுக்கொண்டார்.

 

குன்னூர் பஸ் நிலையத்தில் இண்டர்லாக் கற்கள் பொருத்தப்படும் நகராட்சி தலைவர் உறுதி

Print PDF

தினகரன் 04.08.2010

குன்னூர் பஸ் நிலையத்தில் இண்டர்லாக் கற்கள் பொருத்தப்படும் நகராட்சி தலைவர் உறுதி

குன்னூர், ஆக.4: குன்னூர் பஸ் நிலையத்தில் ரூ.36 லட்சம் செலவில் இண்டர்லாக் கற்கள் பதிக்கப்படும் என்று நகராட்சி தலைவர் உறுதியளித்துள்ளார்.

குன்னூர் பஸ் நிலையம் மிகவும் குறுகியதாக இருப்பதால் வாகன ஓட்டிகள், பயணிகள் அவதியுற்று வருகின்றனர். கோத்தகிரி செல்லும் பிரதான சாலையாக இருப்பதால் வாகன நெரிசல் தவிர்க்க முடியாததாகி உள்ளது. நெரிசலை தவிர்க்க போலீசார் தற்போது பல்வேறு ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், தற்போது ஓரளவு வாகன நெரிசல் குறைந்துள்ளது. குன்னூர் பஸ் நிலைய சாலை கடந்த சில ஆண்டுக்கு முன் பராமரிக்கப்பட்டது. அதன் பின்னர் கண்டு கொள்ளப்படவில்லை.

இதனால் தற்போது இந்த சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. ஏற்கனவே போடப்பட்ட கான்கிரீட் கம்பிகள் சாலையின் நடுவே ஆங்காங்கே காணப்படுகிறது. இவற்றில் தெரியாமல் காலை வைத்து பாதசாரிகள் ரத்த காயத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். அதுபோல் இப்பகுதியில் இயங்கும் வாகனங்கள் டயரை கிழித்து கொள்கின்றன. மழை காலத்தில் இந்த குழிகளில் மழை நீர் குளம் போல் தேங்குவதால் வாகன விபத்துகளும் தவிர்க்க முடியாததாகி வருகிறது. எனவே போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டது. இதையடுத்து சாலையை செப்பனிட நகராட்சி நிர்வாகம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து குன்னூர் நகராட்சி தலைவர் ராமசாமி கூறும் போது, பஸ் நிலைய பகுதியில் முழுமையாக ரூ.36 லட்சம் செலவில் இண்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்டு பராமரிக்க நகராட்சி முடிவு செய்துள்ளது. இப்பணிகள் இன்னும் 2 வாரத்தில் துவங்கும். அதன் பின்னர் இப்பகுதியை நகராட்சி முறையாக பராமரித்து சேதம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

 

திறப்பு விழா முடிந்தும் பயன்பாட்டுக்கு வராத பஸ் நிலையம்!

Print PDF

தினமணி 02.08.2010

திறப்பு விழா முடிந்தும் பயன்பாட்டுக்கு வராத பஸ் நிலையம்!

ஒசூர், ஆக. 1: ஒசூர் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழா முடிந்தும் பயன்பாட்டுக்கு வராததால் நகர மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ரூ.11 கோடியில் கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையத்தை ஜூலை 18-ம் தேதி துணை முதல்வர் மு..ஸ்டாலின் திறந்துவைத்தார். ஜூலை 25-ம் தேதி முதல் பஸ்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பஸ் நிலையத்தில் சுங்கக் கட்டணம், இரு சக்கர வாகனம் நிறுத்துமிடம், கழிவறை ஆகியவற்றுக்கான ஏலம் நிறைவு பெற்றவுடன், ஆகஸ்ட் 1 முதல் பஸ்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜூலை 28-ம் தேதி நடைபெற்ற ஏலத்தை ரத்து செய்து, மறு ஏலம் நடத்துவது என்று ஒசூர் நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனால், ஆக. 1-ம் தேதி பஸ்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. திறப்பு விழா முடிந்து பல நாள்களாகியும், புதிய பஸ் நிலையம் இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஒசூர் நகர்மன்றத் தலைவர் எஸ்.. சத்யாவிடம் கேட்ட போது, பஸ் நிலையம் ஆக. 5-ம் தேதி பயன்பாட்டுக்கு வரும் என்றார்.

 


Page 24 of 57