Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வீட்டுவசதி வாரியம் மூலம் 4 லட்சம் வீடுகள் ஒதுக்கீடு: வாரியக் கண்காணிப்பு பொறியாளர் தகவல்

Print PDF

தினமணி 05.05.2010

வீட்டுவசதி வாரியம் மூலம் 4 லட்சம் வீடுகள் ஒதுக்கீடு: வாரியக் கண்காணிப்பு பொறியாளர் தகவல்

ஈரோடு, மே 4: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் 4 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு, பொதுமக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வீட்டுவசதி வாரியக் கண்காணிப்புப் பொறியாளர் எஸ்.எஸ்.நாராயணமூர்த்தி தெரிவித்தார்.

ஈரோடு பெரியார் நகர் பகுதியில் வீட்டுவசதி வாரியம் மூலம் 72 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இதில் 61 வீடுகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும். ஏற்கனவே இவ்வீடுகள்கோரி விண்ணப்பித்துள்ளோருக்கான ஒதுக்கீடு குலுக்கல் ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வீட்டுவசதி வாரியக் கண்காணிப்புப் பொறியாளர் எஸ்.எஸ்.நாராயணமூர்த்தி, செயற்பொறியாளர் எஸ்.விஜயகுமார், உதவி செயற்பொறியாளர் ஆர்.நடராஜன், ஈரோடு வருவாய்க் கோட்டாட்சியர் பெஞ்சமின்பாபு ஆகியோர் முன்னிலையில் குலுக்கல் நடைபெற்றது.

பின்னர் கண்காணிப்புப் பொறியாளர் நாராயணமூர்த்தி, நிருபர்களிடம் கூறியது: ÷பெரியார் நகரில் உயர்வருவாய் பிரிவினருக்காக கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு, ரூ.13.45 லட்சம் விற்பனைத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்ற குலுக்கலில் வீடு ஒதுக்கப் பெற்றவர்கள், ஓராண்டுக்குள் தொகை முழுவதையும் செலுத்த வேண்டும்.

தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 96 ஆயிரத்து 967 வீடுகள் கட்டப்பட்டு, பொதுமக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு அலுவலர்களுக்கான 26 ஆயிரம் வாடகை வீடுகளும் இதில் அடங்கும். தற்போது கோவை மாவட்டம், வெள்ளக்கிணறு பகுதியில் 98 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றுக்கான ஒதுக்கீடு குலுக்கல் புதன்கிழமை நடைபெற உள்ளது.

சென்னை அம்பத்தூர், முகப்பேர், சோளிங்கநல்லூரில் கட்டப்பட்ட வீடுகள், அண்மையில் பொதுமக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. மேலும் சோளிங்கநல்லூரில் 400 வீடுகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல் தாராபுரத்தில் 53 வீடுகள் கட்டத் திட்டம் தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குடிசை மாற்று வாரியத்துக்கான வீடுகளும் வீட்டுவசதி வாரியம் மூலம் தரமான முறையில் கட்டப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே வழங்கப்பட்ட வீடுகளில் உள்ள பழுதுகளைக் கண்டறிய, தொழில்நுட்ப வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தரும் அறிக்கையின்படி, பழைய வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகளைக் கட்டுவது, பழுதுகளைச் சீரமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெறும்.

அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்ற வீடுகளைக் கட்டுவதற்கான பணிகளில் வீட்டுவசதி வாரியம் ஈடுபட்டுள்ளது. சோளிங்கநல்லூரில் 400 வீடுகளும், அம்பத்தூரில் 608 வீடுகளும் குறைந்த வருவாய் பிரிவினருக்காக கட்டப்பட்டு வருகின்றன.

வீட்டுவசதி வாரிய வீடுகள் கட்டுவதற்காக பெறப்பட்ட நிலங்களை, மீண்டும் உரிமையாளர்களிடம் திருப்பித்தர தேவையில்லை. ஏனெனில் இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் தெளிவான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில்தான், இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படுகிறது என்றார்.