Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவையில் புதையும் கட்டடத்தை நிமிர்த்த முயற்சி : "ஜெட் கிரவுட்டிங்' பணி துவங்கியது

Print PDF

தினமலர்    24.05.2010

கோவையில் புதையும் கட்டடத்தை நிமிர்த்த முயற்சி : "ஜெட் கிரவுட்டிங்' பணி துவங்கியது

கோவை : கோவை அம்மன்குளம் பகுதியில் புதையும் கட்டடங்களை தடுக்கும், "ஜெட் கிரவுட்டிங்' தொழில்நுட்ப பணி துவங்கின.

கோவை அம்மன்குளம் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், 936 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி நடந்து வருகிறது. 15 ஏக்கர் பரப்பளவில் 16 பிளாக்குகள் கட்டப்படுகின்றன. 80 சதவீத கட்டுமானப் பணிகள் பூர்த்தியான நிலையில், அதில் ஒரு கட்டடம் மண்ணுக்குள் புதைய ஆரம்பித்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

தற்போது அக்கட்டடம் முக்கால்வாசி இடிக்கப்பட்டு விட்டது. அதே கட்டடத்தின் எதிர்புறம் உள்ள மற்றொரு கட்டடமும் 25 செ.மீ., மண்ணில் புதைந்தது. இதனால், இரு பிளாக்குகளையும் இணைக்கும் "எக்ஸ்பேன்ஷன் ஜாயின்ட்' இரண்டாக பிளந்தது. இதையடுத்து, அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. சென்னை அண்ணா பல்கலை பேராசிரியர் சாந்தகுமார், சென்னை ஐ..டி. பேராசிரியர் காந்தி, கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர் அருமைராஜ் ஆகியோர் கொண்ட நிபுணர் குழுவினர், புதையும் கட்டடங்களின் மண்ணை பரிசோதித்தனர்.

இதில், கட்டடங்களின் அஸ்திவாரத்தின் அடிப்பகுதியில் இளகிய மண் இருப்பதே கட்டடம் புதைய காரணம் என கண்டறியப்பட்டது. அத்துடன், மேலும் ஐந்து கட்டடங்களும் புதைய வாய்ப்புள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்தது. "கட்டடத்தின் அடியில் காணப்படும் இளகிய மண் இடைவெளிகளை உறுதிப்படுத்த "ஜெட் கிரவுட்டிங்' தொழில் நுட்பத்தை கையாளலாம்' என நிபுணர் குழுவினர் அரசுக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

இந்த பரிந்துரைக்கு அரசு ஒப்புதல் அளித்ததையடுத்து, ஜெட் கிரவுட்டிங் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. மொத்தம் நான்கு ஜெட் கிரவுட்டிங் கருவிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தண்ணீருடன் சிமென்ட் சேர்ந்த கலவையை கட்டடங்களின் அடியில் பீய்ச்சி அடிக்கும் இத்தொழில் நுட்பத்துக்கு தினமும் மூட்டை, மூட்டையாக சிமென்ட் செலவாகிறது. இத்துடன், கட்டப்பட்டுள்ள அனைத்துக் கட்டடங்களின் கீழ் தளங்களும் சிமென்ட் கான்கிரீட் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றன.

புதைய வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்ட கட்டடங்களின் கான்கிரீட் தூண்களின் ஓரங்கள் போர்வெல் மூலம் துளையிடப்படுகின்றன. அதன் வழியாக கட்டடத்தின் அடிப்பகுதியில் சிமென்ட் கலவை பீய்ச்சி அடிக்கப்படுகிறது. இப்பணி நடக்கும்போது கலவை பாய்ச்சப்படும் அழுத்தம் கணக்கிடப்படுகிறது. அழுத்தம் குறைந்தால், மேலும் அதிக சிமென்ட் கலவை ஊற்றப்படுகிறது. அழுத்தம் அதிகமானால், கட்டடத்தின் அடியில் இளகிய மண் இல்லை என்பதை புரிந்து கொண்டு சிமென்ட் கலவை ஊற்றுவது நிறுத்தப்படுகிறது.

ஜெட் கிரவுட்டிங் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படும் ஒரு கட்டடத்துக்கு மட்டும் 40 மூட்டை சிமென்ட் செலவாகியுள்ளது கண்டு பொறியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்தளவுக்கு கட்டடத்தின் அடியில் இளகிய மண் இடைவெளிகள் அதிகமாக இருந்துள்ளன.

பொறியாளர்கள் கூறுகையில்,"ஜெட் கிரவுட்டிங் பணிகள் முடிந்த கட்டடத்துக்கு எந்தவித ஆபத்தும் நேராது. கட்டடத்தின் அடியில் செலுத்தப்படும் சிமென்ட் கலவை, நாளடைவில் நன்கு இறுகி பாறை போல் "செட்' ஆகி விடும்,' என்றனர்.