Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஒதுக்கீடு செய்யப்படாத 7 ஆயிரம் மனைகள்: குடிசை மாற்று வாரியத்துக்கு ரூ. 5.59 கோடி வருவாய் இழப்பு

Print PDF

தினமணி     25.05.2010

ஒதுக்கீடு செய்யப்படாத 7 ஆயிரம் மனைகள்: குடிசை மாற்று வாரியத்துக்கு ரூ. 5.59 கோடி வருவாய் இழப்பு

சென்னை, மே 24: சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் மூலம் உருவாக்கப்பட்ட 7 ஆயிரம் வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளன. இதன் மூலம் வாரியத்துக்கு ரூ 5.59 கோடி வருவாய் இழப்பு ஏற்படுவது தெரிய வந்துள்ளது.

÷தமிழகத்தில் சாலையோரங்கள், ஆற்றோரங்களில் குடிசைகள் கட்டி தங்கி இருப்போருக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டியும், சில இடங்களில் அதற்கான மனைகளை வழங்கியும் அவர்களுக்கான இருப்பிடத் தேவையை பூர்த்தி செய்ய தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது.

÷குறிப்பாக மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு உட்பட்ட இடங்களில் குடிசைப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு உரிய அடிப்படை வசதிகளுடன் வீடுகள் கட்டித் தரும் பணிக்காக தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் 1970-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

÷இதுவரை பல்வேறு இடங்களில் குடிசைப் பகுதிகளில் குடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு குடிசைப் பகுதி மாற்று வாரியம் மூலம் வீட்டுவசதிகள் கிடைத்துள்ளன. இருப்பினும், இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட மனைகளுக்காக நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்திய பலரும் தங்களுக்கான விóற்பனைப் பத்திரம் கிடைக்கவில்லை என புகார் தெரிவித்து வருகின்றனர்.

÷புதிதாக உருவாக்கப்படும் மனைகளுக்கு உரிய விலையை ஒதுக்கீடு செய்யும்போது இறுதி செய்யாமல், உத்தேச மதிப்பீட்டின் அடிப்படையில் தவணைத் தொகைகளை வசூலிப்பதுதான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

÷இது ஒருபுறம் இருந்தாலும், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் பல்வேறு புதிய திட்டங்கள் மூலம் மனைகளை உருவாக்குவது, அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவது ஆகியவற்றைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

÷இதில் சென்னையில் ஆற்றோரங்கள், சாலையோரங்களில் தங்கிவிட்ட மக்களுக்கு குடியிருப்புகளைக் கட்டுவதற்காக சென்னை நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் -1 சில ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டது. இதில் ரூ. 4 கோடி மதிப்பில் சுமார் 24 ஆயிரம் குடும்பங்களுக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதனைத் தொடர்ந்து சென்னை நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்-2-ல் ரூ. 20 கோடி மதிப்பில் சுமார் 60 ஆயிரம் குடும்பங்களுக்கான குடியிருப்புகள், மனைகள் உருவாக்கப்பட்டன.

÷இதேபோல, தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டது. இதில் ரூ. 32 கோடியில், சுமார் 76 ஆயிரம் குடும்பங்களுக்கான குடியிருப்புகள் மனைகள் உருவாக்கப்பட்டன.

÷இவ்வாறு உருவாக்கப்பட்டதில் பெரும்பாலான மனைகள் அவ்வப்போது ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தன.

÷இந்த ஒதுக்கீடு செய்யும் பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் எவ்விதக் காரணமும் இன்றி திடீரென நிறுத்தப்பட்டன. இதனால், கட்டி முடிக்கப்பட்ட வீடுகளும், மனைகளும் உரிய நபர்களுக்குக் கிடைக்காமல் பாழாகும் நிலைக்கு தள்ளப்பட்டன.

÷குடியிருப்புகள், மனைகள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் முறையாக நடைபெறாததால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சுமார் 7 ஆயிரத்துக்கும் அதிகமான மனைகள் அப்படியே வைக்கப்பட்டுள்ளது இப்போது தெரிய வந்துள்ளது.

÷தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலாக குடிசைப் பகுதி மாற்று வாரிய அதிகாரிகள் அளித்த ஆவணங்கள் மூலம் இத் தகவல் வெளியாகியுள்ளது.

÷இவ்வாறு, 7 ஆயிரத்துக்கும் அதிகமான மனைகள் ஒதுக்கீடு செய்யப்படாததால் வாரியத்துக்கு இதுவரை ரூ. 5.59 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த மனைகளை உரிய நபர்களுக்கு ஒதுக்கீடு செய்து வருவாய் இழப்பை நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் தணிக்கைப் பிரிவினர் நிர்வாகப் பிரிவுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.