Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிசைப் பகுதி மற்றும் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம்: பட்டா கிடைக்காததால் திரும்பிப் போகும் நிதி!

Print PDF

தினமணி 09.06.2010

குடிசைப் பகுதி மற்றும் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம்: பட்டா கிடைக்காததால் திரும்பிப் போகும் நிதி!

புதுக்கோட்டை: மத்திய அரசின் ஒருங்கிணைந்த குடிசைப் பகுதி மற்றும் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை நகராட்சியில் பெறப்பட்ட நிதி, குடிமனைப் பட்டா கிடைக்காததால், திருப்பி அனுப்பும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

நகர்ப் புறங்களில் வறுமைக்கோட்டு கீழ் வசிக்கும் ஏழைகளின் குடிசைப் பகுதிகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தை மத்திய அரசு நாடு முழுதும் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன்மூலம் ஒரு பயனாளிக்கு 100 சத மானியத்தில் ரூ.72 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படுகிறது. அதில் மத்திய அரசு 90 சதமும், மாநில அரசு 10 சதமும் பங்களிப்பு செய்கின்றன.

பயன்பெறத் தகுதி மற்றும் நிபந்தனைகள்:

முறையான பட்டாவுடன், குடிசை வீட்டில் வசிப்பவராகவும், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். மேலும், வசிக்கும் பகுதி அங்கீகரிக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்படாத குடிசைப் பகுதியாகவும் இருந்தால் மட்டுமே இந்தத் திட்டத்தில் பயன்பெற முடியும்.

இந்நிலையில், புதுக்கோட்டை நகராட்சிப் பகுதியில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், 14 குடியிருப்புப் பகுதிகளைக் கண்டறிந்து, அதில் 2030 பயனாளிகளைத் தேர்வு செய்து மத்திய அரசுக்கு பட்டியல் அனுப்பிவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த 2007-ம் ஆண்டு குடிசை மேம்பாட்டுக்காக ரூ.16.24 கோடி, உள்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்காக ரூ.8.50 கோடி உள்பட மொத்தம் ரூ.24.74 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியது.

நகராட்சி நிர்வாக ஆணையம் மூலம் முதல் தவணையாக ரூ.11.46 கோடி நிதி ஒதுக்கீட்டில் ரூ.8 கோடி பெறப்பட்டது.

2030 பயனாளிகளில், அரசின் நிபந்தனைகளுக்கு உள்பட்டு 625 பயனாளிகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்குப் பணி ஆணை அளிக்கப்பட்டு, 432 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. 193 வீடுகள் கட்டி முடிக்கப்படவில்லை.

மீதமுள்ள 1405 பயனாளிகளில், வருவாய்த் துறையினரால் 9(2) எனும் பட்டா அளிக்க முன் தகுதி கடிதம் பெற்ற 1110 பேருக்கு பட்டா கிடைக்காததால், இவர்கள் அனைவரும் இந்தத் திட்டத்தில் பயன்பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும், 195 பேர் கல்குவாரி புறம்போக்கு, 42 பேர் வாடகைக் குடியிருப்பு, 35 பேர் சாலை புறம்போக்கு, தனிப் பட்டா இன்றி கூட்டுப் பட்டாவில் வசிப்போர் 23 எனக் கண்டறியப்பட்டதால், இவர்களும் இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற முடியாமல் போனது.

2007-ம் ஆண்டு அனுமதிக்கப்பட்ட இந்தத் திட்டம் சுமார் 3 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைக்கு மாறாக பட்டா இல்லாத வீடுகளுக்கு 6 மாத காலத்துக்குள் பட்டா அனுமதி பெற்று பணி தொடங்கப்பட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், தேர்வு பட்டியலில் உள்ள 60 சதத்தினருக்கு பட்டா கிடைக்காததால், இந்தத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும், முதல்கட்ட நிதி ஒதுக்கீட்டில் 70 சதம் செலவழித்தால்தான் இரண்டாம் கட்ட நிதி ஒதுக்கீடு பெற முடியும் என்ற நிலையில், 1405 வீடுகளுக்கு பட்டா இல்லாததால், முதல் தவணையில் பெறப்பட்ட நிதியில் ரூ1.12 கோடியை அரசுக்கு திருப்பி அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இரண்டாம் தவணையைப் பெற வாய்ப்பில்லாமல் போனது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.பி. முத்துக்குமரன் கூறியது:

அரசு புறம்போக்கு நிலத்தில் 10 ஆண்டுகள், 5 ஆண்டுகள் குடியிருந்தால் பட்டா அளிக்கலாம் என்ற நிலையை 3 ஆண்டுகள் குடியிருந்தால் போதும் என தமிழக அரசு தளர்த்தியுள்ளது. ஆனால், அனைவருக்கும் குடிமனைப் பட்டா அளிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் நோக்கம் நிறைவேறத் தடையாக இருப்பது வருவாய்த் துறையினரால்தான். இதைக் கண்டித்து எங்கள் இயக்கம் விரைவில் போராட்டம் நடத்தும் என்றார் அவர்.