Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.20 கோடியில் குடிசை பகுதி மேம்பாடு திட்டம் : நெல்லை மாநகராட்சியில் மாற்று பயனாளிகள் தேர்வு

Print PDF

தினமலர் 22.07.2010

ரூ.20 கோடியில் குடிசை பகுதி மேம்பாடு திட்டம் : நெல்லை மாநகராட்சியில் மாற்று பயனாளிகள் தேர்வு

திருநெல்வேலி : நெல்லை மாநகராட்சி பகுதியில் 20 கோடியில் குடிசை பகுதி மேம்பாட்டு திட்டம் அமலாக்கம் தொடர்பாக மண்டலம் வாரியாக மாற்று பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் மத்திய அரசின் ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசை பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குடிசை பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தி அவர்களுக்கு தேவையான குடியிருப்புகளை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட அங்கீகரிக்கப்பட்ட 69 குடிசை பகுதிகளில் 67 குடிசை பகுதிகளை மேம்பாடு செய்ய 20 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய ஒப்புதல் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டது.

இதனையடுத்து தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளில் சிலர் வேலை ஆணையை பெற்றும் பணியை குறிப்பிட்ட காலத்திற்குள் ஆரம்பிக்கவில்லை. எனவே, மாற்று பயனாளிகளை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டு ஏற்கனவே வழங்கிய வேலை ஆணையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மாநகராட்சி அங்கீகரிக்கப்பட்ட குடிசை பகுதிகளில் தகுதியுடைய மாற்று பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வேலை ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த மாற்று பயனாளிகளால் புதிய வீடு கட்டுதல் மற்றும் வீடு மேம்படுத்துதல் பணிகள் நடந்து அப்பயனாளிகளுக்கு தவணை முறையில் மானிய தொகைகளும் வழங்கப்படுகிறது.

தற்போது தச்சநல்லூர் மண்டலத்தில் 224 புதிய குடியிருப்புகள், 415 குடியிருப்பு அபிவிருத்தி, பாளை மண்டலத்தில் 218 புதிய குடியிருப்புகள், 507 குடியிருப்பு அபிவிருத்தி, மேலப்பாளையம் மண்டலத்தில் 10 புதிய குடியிருப்புகள், 109 குடியிருப்பு அபிவிருத்தி, நெல்லை மண்டலத்தில் 298 புதிய குடியிருப்புகள், 222 குடியிருப்பு அபிவிருத்தி செய்யப்படுகிறது. மொத்தம் 750 புதிய குடியிருப்புகள், 1,253 குடியிருப்பு அபிவிருத்தி பணிகள் செய்யப்படுகிறது.

மாநகராட்சிக்கு உட்ப்ட 67 அங்கீகரிக்கப்பட்ட குடிசை பகுதிகளில் புதிய வீடுகள் கட்டுவதற்கும், வீடுகளை மேம்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.