Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாவட்டம் தோறும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு இடம் தேர்வு ரூ.300 கோடியில் கட்டப்படுகிறது

Print PDF

தினகரன் 27.07.2010

மாவட்டம் தோறும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு இடம் தேர்வு ரூ.300 கோடியில் கட்டப்படுகிறது

திருச்சி, ஜூலை 27: தமிழகத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்ட மாவட்டந்தோறும் இடம் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடியில் மட்டும் இடம் முடிவாகியுள்ளது.

ஏரி, ஆறு, குளம், வாய்க்கால், சாலையோரம் போன்ற ஆட்சேபனைக்குரிய, அரசுக்கு சொந்தமான இடங்களில் குடியிருப்போருக்கு, அரசு சார்பில் மாற்று இடங்களில் குடியிருப்பு ஏற்படுத்தி தரும் பணியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் 2010&2015 வரையிலான காலத்தில் தமிழகத்தில் ரூ.300 கோடி மதிப்பில் அடுக்கு மாடி குடியிருப்புகளை ஏற்படுத்த 13வது நிதிக்குழு முடிவு செய்து நிதி ஒதுக்கியுள்ளது.

இதையடுத்து தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை அமைப்பதற்கான முதற்கட்ட பணி தற்போது துவங்கியுள்ளது. திருச்சி கோட்டத்திலுள்ள திருச்சி, புதுக் கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள குடிசை குடியிருப்பு விபரம், அதற்கு மாற்றாக தேவைப்படும் குடியிருப்புகளின் எண்ணிக்கை போன்ற விபரங்கள் சேகரிப்பு மற்றும் குடியிருப்பு கட்டுவதற்கான இடம் தேர்வு பணியை அந்தந்த மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மச்சுவாடி என்ற பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்து, அதுபற்றிய விபரத்தை அம்மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திடம் அளித்துள்ளது.

மற்ற மாவட்டங்களில் இப்பணி தீவிரமாக நடக்கிறது. ஓரிரு வாரத்தில் பணி முடிந்து விடும் என்று தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.