Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கலைஞர் வீட்டு வசதித்திட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகளிலும் குடிசைகள் கணக்கெடுப்பு

Print PDF

தினகரன் 06.09.2010

கலைஞர் வீட்டு வசதித்திட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகளிலும் குடிசைகள் கணக்கெடுப்பு

வேலூர், செப்.6: காட்பாடி ஊராட்சி ஒன்றியம் லத்தேரி, கரசமங்கலம் ஊராட்சிகளில் இலவச சமையல் காஸ் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடந்தது. கரசமங்கலத்தில் நடந்த விழாவுக்கு ஒன்றியக்குழு தலைவர் பிரமிளா தயாநிதி தலைமை தாங்கினார்.

மாவட்ட கவுன்சிலர் ஏ.பி.நந்தகுமார், தாசில்தார் ரேணு, வட்ட வழங்கல் அலுவலர் அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் 528 பயனாளிகளுக்கு இலவச சமையல் காஸ் அடுப்பு, முதியோர் உதவித்தொகை, 48 பெண்களுக்கு திருமண நிதியுதவி, திருநங்கைகள் 2 பேருக்கு தையல் இயந்திரம் என மொத்தம்

ரூ12 லட்சத்து 12 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:

தற்போது கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் நகராட்சி, மாநகராட்சி எல்லைக்குள் உள்ள குடிசைகளுக்கு கிடையாது என்று உள்ளது. இதற்காக துணை முதல்வர் ஸ்டாலினிடம் பேசியுள்ளேன். இப்போது மாநகராட்சி, நகராட்சி எல்லைகளிலும் குடிசைகள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது.

ஆகவே, மாநகராட்சி எல்லையில் சேருவதால் நமக்கு வீடு கிடைக்காது என்று யாரும் எண்ண வேண்டாம். அதேபோல் ஊராட்சி மன்றத் தலைவர்களும் நமது ஊர்தான் மாநகராட்சியில் சேருகிறதே என்று எந்த பணியும் செய்யாமல் இருக்கக்கூடாது.

காட்பாடி ஒன்றியம் நிச்சயம் மாநகராட்சி எல்லைக்குள் வராது. எனவே, ஊராட்சி தலைவர்கள் தங்கள் பகுதிகளில் தெரு விளக்கு, குடிநீர் வசதி, சாலை வசதி போன்ற பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டும். இதை அடுத்த வாரம் முதல் தினமும் 5 ஊராட்சிகள் வீதம் கண்காணிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக எம்எல்ஏ காந்தி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஷீலாராஜன், தாராபடவேடு நகராட்சித் தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, முன்னாள் எம்பி முகமது சகி, வட்டார கல்விக்குழு தலைவர் தயாநிதி உட்பட பலர் வாழ்த்தி பேசினர். ஊராட்சி துணைத் தலைவர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.