Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

3 ஆயிரம் குடிசை வீடுகளை சீராக்க மாநகராட்சியில் புதிய திட்டம்

Print PDF
தினகரன் 18.10.2010 3 ஆயிரம் குடிசை வீடுகளை சீராக்க மாநகராட்சியில் புதிய திட்டம்

கோவை, அக்.18:கோவை மாநகராட்சியில் பழுதடைந்த 3 ஆயிரம் குடிசை வீடுகளை சீராக்க புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில், குடிசை பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 12,630 குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற முடிவு எடுக்கப்பட்டது. குடிசை பகுதியில் பட்டா உள்ள வீடுகள் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற முடியும் என அறிவிக்கப்பட்டது. 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட குடிசைகள், பட்டா இல்லாமல் புறம்போக்கில் இருப்பதாகவும் தெரியவந்தது.

குடிசைப்பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிசைகள் பழுதடைந்த நிலையில் இருப்பதாகவும், இந்த வீடுகளுக்கு பட்டா இருப்பதாகவும் தெரியவந்தது. ஆனால், மாநகராட்சியில் குடிசைகளுக்கு பதிலாக கான்கிரீட் வீடு கட்ட மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. குடிசைகளை பழுதுபார்க்க எவ்வித திட்டமும் இல்லை என அறிவிக்கப்பட்டது. குடிசைகளை கான்கிரீட் கட்டடமாக்க, குடிசைவாசிகள், 1.60 லட்ச ரூபாய் தொகை செலவிடவேண்டும். இதற் கான தொகை தங்களிடம் கிடையாது. மொத்த தொகையில் 85 சதவீத தொகை, 4 தவணைகளில் மாநகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது. இருப்பினும் பயனாளிகள் கான்கிரீட் வீடு கட்ட அதிக ஆர்வம் காட்டவில்லை.

இந்நிலையில், பழுதடைந்த வீடுகளை சீரமைக்க மநகராட்சி நிர்வாகம் உதவி செய்யவேண்டும் என குடிசைவாசிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை நிராகரித்தால், கோவை மாநகராட்சியில், 40 சதவீதம் குடிசைகள், தொடர்ந்து குடிசைகளாகவே இருக்கும். கான்கிரீட் வீடுகளாக மாறாது. குடிசைகளின் அடிப்படை கட்டமைப்பை மாற்ற முடியாது என மாநகராட்சி நிர்வாகம் கருதியது. இதைதொடர்ந்து குடிசைகளை சீரமைத்து, கான்கிரீட் மேற்கூரை அமைக்க தனி திட்டம் தயாரிக்கப்பட்டது. முதல் கட்டமாக, கோவை நகரில் 173 குடிசைப்பகுதியில், 3 ஆயிரம் குடிசைகளை சீரமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேற்கூரை, பில்லர், கட்டுமான சுவர்களை சீரமைக்க அனுமதி வழங்கப்படும். குடிசை மேம்பாட்டு திட்டத்தில் ஏற்கனவே 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தேவையான அளவு தொகையை குடிசை சீரமைப்பிற்கு பயன்படுத்த மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இது தவிர, குடிசைகளில் கழிப்பிடம் கட்டும் திட்டமும் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. பராமரிப்பு, சீரமைப்பு பணிக்கு செலவிடப்படும் மொத்த தொகையில் பயனாளிகள் தங்கள் பங்களிப்பாக 10 சதவீத தொகை செலுத்தினால் போதும். பட்டா உள்ள குடிசைகள் மட்டுமே இந்த திட்டம் பயன்பெறும். அடுத்த மாதத்திலிருந்து இந்த திட்டத்தை மாநகர் முழுவதும் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.