Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தமிழகத்தில் முதல்முறையாக போடியில் வங்கிக் கடனுதவியுடன் குடிசை மேம்பாட்டுத் திட்டம் அமல்

Print PDF

தினமணி 23.12.2009

தமிழகத்தில் முதல்முறையாக போடியில் வங்கிக் கடனுதவியுடன் குடிசை மேம்பாட்டுத் திட்டம் அமல்

போடி, டிச.22: தமிழகத்தில் முதல் முறையாக போடியில் வங்கிக் கடனுதவியுடன் குடிசை மேம்பாட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

போடியில் குடிசைப் பகுதிகள் அதிகம் உள்ள 11 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒருங்கிணைந்த குடிசை மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பில் வீடுகட்ட நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்தத் தொகையில் ரூ.72 ஆயிரம் அரசு மானியமாக வழங்கப்படுகிறது. மீதித் தொகையைப் பயனாளிகள் செலுத்த வேண்டும்.

இந்த மானியத் தொகை கட்டடம் கட்டப்படும் நிலையைப் பொறுத்து 4 தவணைகளாக வழங்கப்படுகிறது. சில பயனாளிகளுக்கு தவணைத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நகர்மன்றக் கூடத்தில் நடைபெற்றது. தலைவர் ரதியா பானு தலைமை வகித்தார். கமிஷனர் சரவணக்குமார் முன்னிலை வகித்தார்.

இத்திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.18 ஆயிரம் வீதம் தவணைத் தொகையும், ஒரு பயனாளிக்கு ரூ.16 ஆயிரத்து 500 தவணைத் தொகையும், சென்ட்ரல் வங்கி மூலம் கடனுதவியாக 19 பயனாளிகளுக்கு ரூ.20 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 4 லட்சத்து 50 ஆயிரத்து 500-க்கான காசோலைகளை எஸ்.லட்சுமணன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் சங்கர், நகர திமுக செயலாளர் ரமேஷ், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

இத்திட்டம் குறித்து தினமணிக்கு அளித்த பேட்டியில் கமிஷனர் சரவணக்குமார் கூறியதாவது:

குடிசை வீடுகளில் வாழ்ந்து வரும் மக்களுக்கு இது பயனுள்ள திட்டமாகும். பயனாளி குறைந்தபட்டம் ரூ.35 ஆயிரம் வழங்கினால், அரசு மானியமாக ரூ.72 ஆயிரம் வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் போடி நகராட்சியில் 326 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

மேலும் அரசு நிர்ணயித்துள்ள ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பிற்கு மேல் அதிக மதிப்பில் வீடு கட்டுவதற்கு மிகக் குறைந்த வட்டியில் வங்கிக் கடன் பெற நகராட்சி நிர்வாகம் உதவுகிறது. இதற்காக ரூ.20 ஆயிரம் வரை வங்கிக் கடன் பெற்றுத் தரப்படுகிறது. இதனால் பல பயனாளிகள் தங்கள் குடிசை வீடுகளை மாற்றி அமைக்க முன் வருகின்றனர். இவ்வாறு அரசு மானியத்துடன் வங்கிக் கடனும் பெற்று வீடு கட்ட உதவுவது தமிழகத்தில் போடி நகராட்சியில்தான் முதல் முறை என்றார்.