Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிசைகளை மாற்றி வீடு கட்டிக் கொள்ள ரூ. 17.81 கோடி ஒதுக்கீடு: மேயர்

Print PDF

தினமணி 29.12.2009

குடிசைகளை மாற்றி வீடு கட்டிக் கொள்ள ரூ. 17.81 கோடி ஒதுக்கீடு: மேயர்

சென்னை மாநகரை குடிசை இல்லா நகராக்கும் வகையில் குடிசைகளை மாற்றி வீடுகள் கட்டுவதற்கான ஆணையை பயனாளிகளுக்கு திங்கள்கிழமை வழங்கினார் மேயர்.

சென்னை, டிச. 28: சென்னையில் உள்ள குடிசைகளை மாற்றி வீடு கட்டிக் கொள்வதற்கு 370 பயனாளிகளுக்கு ரூ. 17.81 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ஜவாஹர்லால் நேரு தேசிய புனரமைப்பு திட்டத்தின்கீழ் வீடு கட்டும் பணி செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பயனாளிகளை தேர்வு செய்து ஒதுக்கீடு ஆணைகள் வழங்குதல் மற்றும் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் புகைப்படம் எடுக்கும் பணி சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள அரிமா சங்க பள்ளியில் திங்கள்கிழமை (டிச. 28) நடந்தது. விழாவில் கலந்து கொண்ட மேயர் மா. சுப்பிரணியன் பேசியது:

சென்னை நகரில் குடிசைப் பகுதியில் வசிக்கும் மக்கள் புதிய குடியிருப்புகள் கட்டிக்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. குடிசை இல்லாத சென்னையை உருவாக்கும் வகையில் சென்னையில் 44 குடிசைப் பகுதிகளில் பயனாளிகள் பங்களிப்புடன் கூடிய புதிய வீடுகள் கட்டித்தர 17.10.2007 அன்று நடந்த மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. மேலும் 236 குடிசைப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் இந்த கூட்டம் அனுமதியளித்திருந்தது. குடியிருப்பு கட்டும் திட்டத்தை பொறுத்தவரை ஒவ்வொரு வீடும் 330 சதுர அடி பரப்பளவில் ரூ. 1.30 லட்சம் மதிப்பீட்டில், 1370 வீடுகள் ரூ. 17.81 கோடியில் கட்டித்தரப்பட உள்ளன.

ஒவ்வொரு வீட்டுக்கும் ஆகும் ரூ.1.30 லட்சம் செலவில் 10 சதவீத பங்கான ரூ. 13 ஆயிரத்தை பயனாளிகள் ஏற்க வேண்டும். 50 சதவீத பங்கான ரூ. 65 ஆயிரத்தை மத்திய அரசும், 40 சதவீத பங்கான ரூ. 52 ஆயிரத்தை தமிழக அரசும் மானியமாக வழங்கும்.

இந்த திட்டத்தின்படி வீடுகள் கட்ட, பயனாளிகள் இடத்துக்கான பத்திரம் மற்றும் பட்டா வைத்திருக்க வேண்டும். மேலும் அவர்கள் அந்த பகுதியில் குறைந்தது ஐந்து ஆண்டுகள் குடியிருந்திருக்க வேண்டும். இத்திட்டத்தில் 734 நபர்களுக்கு வீடுகள் கட்ட ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்படுகிறது.

பயனாளிகள் குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல் மற்றும் குறைந்தபட்சம் 300 சதுரஅடி கட்டடம் கட்ட தேவையான மனை அளவுடன் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

இவைகள் உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு மண்டலக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும். அதைத் தொடர்ந்து மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படும்.

கட்டடப் பணியை நான்கு கட்டமாக ஆய்வு செய்து பயனாளிகளுக்கு முழுத் தொகையும் வழங்கப்படும் என்றார் மேயர்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் தாமோதரன், மண்டல அலுவலர் பிரேம்நாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.