Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அடுத்த 3 ஆண்டுகளில் கூரை வீடுகள் இல்லாத தமிழகம்: அமைச்சர் நேரு

Print PDF

தினமணி 13.01.2010

அடுத்த 3 ஆண்டுகளில் கூரை வீடுகள் இல்லாத தமிழகம்: அமைச்சர் நேரு

மணப்பாறை, ஜன. 12: ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தினால், தமிழகம் அடுத்த 3 ஆண்டுகளில் கூரை வீடுகள் இல்லாத மாநிலமாக மாறும் என்றார் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு.

மணப்பாறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதியோர் உதவித் தொகை வழங்கும் விழாவில் பங்கேற்று, 767 பேருக்கு உதவித் தொகைகளை வழங்கி, அமைச்சர் மேலும் பேசியது:

இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட்டத்தின் மூலம் அனைவருக்கும் வீடு வழங்க முடியாத நிலை உள்ளது. எனவே, ஒருவருக்கு ரூ. 60,000 வீதம் 21 லட்சம் குடும்பங்களுக்கு ரூ. 1,800 கோடி மதிப்பில் கலைஞர் வீட்டு வசதித் திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் கூரை வீடுகள் இல்லாத தமிழகம் என்ற நிலை உருவாகும். தற்போது, 500 பேர் உள்ள கிராமங்களுக்கும் இணைப்புச் சாலை வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நலனை கருத்தில்கொண்டு, திமுக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்த அரசுக்கு மக்கள் துணை நிற்க வேண்டும் என்றார் அமைச்சர் நேரு.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையா தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் தட்சிணாமூர்த்தி, வட்டாட்சியர் லீலாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் க. பொன்னுசாமி, ஒன்றியக் குழுத் தலைவர்கள் செ. பன்னீர்செல்வம், கலைச்செல்வி நாகராசன், ராஜலட்சுமி வெங்கடேசன், தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர்.ஏ. ராமசாமி, நகரச் செயலர் கீதா ஆ. மைக்கேல்ராஜ், ஒன்றியச் செயலர்கள் மொண்டிப்பட்டி எஸ். நாகராசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Last Updated on Wednesday, 13 January 2010 09:29