Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிசைகளை கணக்கெடுக்கும் பணி விரைவில் துவக்கம்

Print PDF

தினமலர் 12.02.2010

குடிசைகளை கணக்கெடுக்கும் பணி விரைவில் துவக்கம்

கோவை : கோவை ஊரகப் பகுதிகளில் குடிசைகளைக் கணக்கெடுக்கும் பணி, மார்ச் மாதத்தில் நடக்கவுள்ளது.கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்த ஏழை மக்களின் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றித்தரும் "கலைஞர் வீட்டு வசதித்திட்டம்', வரும் நிதியாண்டில் துவங்கி 6 ஆண்டுகள் தொடரும் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்கான கணக்கெடுப்புப் பணி, தமிழகம் முழுவதும் விரைவில் நடக்கவுள்ளது.

கோவை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊரகப் பகுதிகளில் இந்த திட்டத்தைச் செயல்படுத்த, மாவட்ட நிர்வாகம் ஆயத்தமாகி வருகிறது. முதற்கட்டமாக, ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலிருந்தும் தலா ஒரு கிராம ஊராட்சியைத் தேர்வு செய்து, ஓலைக்குடிசைகள் கணக்கெடுக்கப்படும்.

இந்த குடிசைகளைக் கணக்கெடுக்கும் பணிக்கு, சிறப்புக்குழுவும் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த குழுவில், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி எழுத்தர், மக்கள் நலப்பணியாளர் ஆகியோர் இடம் பெறுவர். அரசால் அச்சிட்டு தரப்பட்டுள்ள படிவங்களில் மட்டுமே இதற்கான விபரம் சேகரிக்கப்படும்.

கணக்கெடுக்கும் பணி, முறையாக நடக்கிறதா என்பதைக் கண்காணிக்க துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களை அரசு நியமித்துள்ளது. மாதிரி ஊராட்சிகளில் ஓலைக்குடிசைகளைக் கணக்கெடுக்கும் பணி குறித்த பயிற்சிக் கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு தலைமை வகித்த கலெக்டர் உமாநாத், ""அடித்தட்டு மக்களின் சமூக மேம்பாட்டுக்காக அரசு செயல்படுத்தும் இந்த திட்டத்தைச் சிறப்பாக செயல் படுத்த வேண்டிய கடமை, அரசு அதிகாரிகளுக்கு உள்ளது.

எனவே, குடிசைகள் கணக்கெடுக்கும் பணியை பாரபட்சமின்றி மேற்கொள்ள வேண்டும்,'' என்றார். கணக்கெடுக்கும் பணி குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் மூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் லட்சுமிபதி ஆகியோர் விளக்கினர். கணக்கெடுக்கும் பணி, மார்ச் மாதத்தில் நடக்குமென்று பயிற்சிக் கூட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. பயிற்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Friday, 12 February 2010 06:47