Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதிய மாமன்றத்துக்கு ரூ. ஒரு கோடி ஒதுக்கீடு குடிசைகளை மேம்படுத்த சிறப்பு நிதி

Print PDF
தினமணி 26.02.2010

புதிய மாமன்றத்துக்கு ரூ. ஒரு கோடி ஒதுக்கீடு குடிசைகளை மேம்படுத்த சிறப்பு நிதி

திருப்பூர், பிப்.25: திருப்பூர் மாநகராட்சி மன்றம் ரூ. ஒரு கோடியில் கட்டப்படும் என்று மேயர் க.செல்வராஜ் அறிவித்துள்ளார். திருப்பூர் நகரில் உள்ள குடிசைகளை மேம்படுத்த சிறப்பு நிதியாக ரூ.65 லட்சம் ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

திருப்பூர் மாநகராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் 2010-11ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசியது:

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெரும்பாலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பல பணிகள் நடைபெற்று வருகின்றன. நடப்பு நிதியாண்டில் ரூ.ஒரு கோடியில் புதிய மாமன்றக் கூடம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஜே.பி.நகர், மூர்த்திநகர், கவுண்டம்பாளையம் ஆகிய இடங்களில் ரூ.2.73 கோடியில் மழைநீர் வடிகால் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

புதிதாக பகிர்மான குடிநீர்க் குழாய்கள் அமைக்கவும், புதிய ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் கைப்பம்புகள் அமைக்கவும் ரூ.1.7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.1.8 கோடியில் தெருவிளக்குகள் அமைக்கப்படும். மின்மயானம் முதல் அணைக்காடு வரை நொய்யல் ஆற்றங்கரையில் ரூ.21 லட்சத்தில் தெருவிளக்குகள் அமைக்கப்படும்.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் 180 குப்பை சேகரிக்கும் தொட்டிகள் வாங்க ரூ.70 லட்சம் ஒதுக்கப்படும். ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் நடமாடும் கழிப்பறைகள் வாங்கப்படும். பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்களில் சர்வதேசத் தரத்தில் கழிவறை கட்ட ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் நகரில் குடிசைப்பகுதிகளில் வாழும் ஏழைகளுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ள மாநகராட்சி நிதியில் 20 சதவீதம் சிறப்புநிதியாக ஒதுக்கப்படும். இந்நிதியில் இருந்து குடிசைப்பகுதிகளில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.64 லட்சம் ஒதுக்கப்படும்.

பல்லடம் சாலையில் மாநகராட்சி துப்புரவாளர் காலனி அருகே சிறுபாலம் அமைத்தல், கே.வி.ஆர்.நகர் குடிசை பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுதல், சூசையாபுரம் மாநகராட்சி துப்புரவாளர் காலனியில் மறு தார்த்தளம் அமைத்தல், கே.வி.ஆர்.நகர் குடிசைப் பகுதியில் மாநகராட்சி துவக்கப் பள்ளிக்கு வடிகால் கட்டுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

பூலாவரி சுகுமாரன் நகர் குடிசைப் பகுதியில் குடிநீர்க் குழாய் அமைத்தல், காங்கேயம்பாளையம் புதூர்-1 குடிசைப் பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைத்து குடிநீர்த் தொட்டி கட்டுதல், அணைக்காடு பகுதியில் மழைநீர் வடிகால் கட்டுதல், எம்.எஸ்.நகர் பகுதியில் சுகாதார வளாகம் பராமரிப்புப் பணி செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

ஸ்பைடர் பழனிசாமி நகரில் சிறு பாலம் மற்றும் கான்கிரீட் தளம் அமைத்தல், கொங்குநகர் குடிசைப் பகுதியில் குடிநீர்க் குழாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை சீரமைக்க ரூ.25 கோடியில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்தும் வகையில் திட்ட அறிக்கை தயார் செய்ய, தனியார் தொழில்நுட்ப வல்லுனர்களை அரசு நியமித்துள்ளது. அறிக்கை கிடைத்ததும் ஜம்மனை ஓடை, சங்கிலிப்பள்ளம் ஓடை ஆகியவற்றை சுத்தம் செய்யவும், கரைகளை பலப்படுத்தவும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஈஸ்வரமூர்த்தி பூங்கா, நாராயணசாமி மனைப்பிரிவு பூங்கா, கல்லூரிச்சாலை பூங்கா, தாராபுரம் சாலை டி.எஸ்.கே. பூங்கா, பி.என்.சாலை குமரன் நினைவு பூங்கா, ராமேகவுண்டர் மனைப்பிரிவு பூங்கா ஆகியவை தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும், என்றார்.

Last Updated on Friday, 26 February 2010 09:25