Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

10-ம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி, நகர்ப்புற மக்களுக்கு புதிய வீட்டு வசதித் திட்டம்

Print PDF

தினமணி 06.03.2010

10-ம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி, நகர்ப்புற மக்களுக்கு புதிய வீட்டு வசதித் திட்டம்

பெங்களூர், மார்ச் 5: 10-ம் வகுப்பு வரை அனைவருக்கும் கட்டாயக் கல்வி, நகர்ப் பகுதியில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்காக வீடு கட்டும் "நன்ன மனே' திட்டத்தை பட்ஜெட்டில் அறிவித்தார் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா.

2010-11-ம் ஆண்டிற்கான கர்நாடக பட்ஜெட்டை நிதித் துறை பொறுப்பை வகிக்கும் முதல்வர் எடியூரப்பா வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியது:

2009-ம் ஆண்டில் வறட்சி நிவாரணப் பணிக்காக அரசு ரூ.206 கோடி செலவிட்டது. வட கர்நாடகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டது. பொதுமக்களிடமிருந்து ரூ.317.9 கோடி நிவாரண நிதி திரட்டப்பட்டது. 75 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் மதிப்பில் 75 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெள்ள மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு ரூ.1457 கோடி அளித்தது. மாநில அரசு இதுவரை ரூ.1879 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையிலும் மாநில அரசின் நிதி நிலை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் திருப்திகரமாக உள்ளது. மாநில அரசின் வரி வருவாய் 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக உள்ளது. இது நாட்டிலேயே அதிகமானது. மற்ற மாநிலங்களில் சராசரி வரி வருவாய் 6 சதவிகிதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

விவசாயத் துறையில் 2-வது பசுமைப் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் வறண்ட பகுதிகளில் விவசாய நடவடிக்கையை அதிகப்படுத்தம் திட்டத்தை கடந்த ஆண்டு அரசு அறிவித்தது. அத்திட்டத்தை வெற்றியடைச் செய்ய நிலத்தடி நீர் சேகரிப்புத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. விவசாய விளை பொருள் விற்பனை சந்தைகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளது.

21-ம் நூற்றாண்டில் அனைவருக்கும் கல்வி என்று இல்லாமல் அனைவருக்கும் உயர் கல்வி அளிக்க அரசு உறுதி பூண்டுள்ளது. அதன்படி 2010-ம் ஆண்டில் அனைவருக்கும் 10-ம் வகுப்பு வரை கட்டாயக் கல்வித் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. எல்லா மாவட்டங்களிலும் மாதிரி பொது மாணவர் விடுதி கட்டப்படும்.

படித்த மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் திறமை பயிற்சி நிலையங்கள் மாநிலத்தில் அதிக அளவில் திறக்கப்படும். இந்த மையங்கள் மூலம் ஆண்டுக்கு 3 முதல் 5 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் தொழில் நகரம் அமைக்கப்படும். மாநிலத்தில் தற்போது 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

அடுத்த 3 ஆண்டுகளில் குறைந்தது 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

2009-10-ம் நிதி ஆண்டில் பல்வேறு வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் 5.35 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. கிராமப் புறங்களில் கட்டப்படும் வீடுகள் தற்போது ரூ.40 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்படுகின்றன. இனி இவை ரூ.60 ஆயிரம் செலவில் கட்டப்படும். இதில் ரூ.10 ஆயிரத்தை வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுவோர் கட்ட வேண்டும். இந்தத் தொகையை வங்கிகளில் இருந்து குறைந்த வட்டிக்கு கடனாகப் பெற அரசு நடவடிக்கை எடுக்கும். இந்தத்திட்டப்படி நடப்பு ஆண்டில் 1.5 லட்சம் வீடுகள் கட்டப்படும்.

நகர்ப்பகுதிகளில் 2010-11-ம் ஆண்டில் வாஜ்பாய் வீட்டு வசதித்திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் வீடுகள் கட்டப்படும். இந்த வீடுகள் ஒவ்வொன்றும் ரூ.1.25 லட்சம் செலவில் கட்டப்படும். இதற்கு வங்கிகள் கடனுதவி, அரசு மானியம் என எல்லா வசதிகளும் அளிக்கப்படும்.

பெங்களூர் போன்ற பெரிய நகரங்கள், சிறிய நகரங்களில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தை அரசு இந்த ஆணóடு அறிமுகப்படுத்துகிறது "நன்ன மனே' என்று பெயரிடப்பட்டுள்ள அத்திட்டப்படி குறைந்த விலையில் நடுத்தர வர்க்கத்தினருக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.

2010-11-ம் ஆண்டில் ஊகரம் மற்றும் நகர்ப்புறங்களில் வீடுகள் கட்டிக் கொடுக்க ரூ.920 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. துவக்க மற்றும் நடுநிலைக் கல்விக்காக 2010-11-ம் ஆண்டில் கல்விக்கு ரூ.8,830 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்துக்கு இந்த ஆண்டு ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வியறிவு விகிதத்தை அதிகப்படுத்தும் நோக்கத்தோடு ராஷ்டீரிய மாத்யமிக சிக்ஷக அபியான் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் 545 உயர்நிலைப் பள்ளிகளில் ரூ.700 கோடி செலவில் அனைத்து வசதிகளும் இந்த நிதியாண்டில் செய்து கொடுக்கப்படும்.

பள்ளிகளுக்கு வகுப்பறைகள், கருவிகள், குடிநீர் வசதி மற்றும் கழிப்பறைகள் வசதி ஏற்படுத்திக் கொடுக்க ரூ.100 கோடி ஒதுக்கப்படுகிறது. அரசு பள்ளி ஆசிரியர்கள் பட்டப்படிப்பு கல்வி, முதுகலைக் கல்வி பயில அவர்களுக்கு உதவும் வகையில் பட்ஜெட்டில் ரூ.5 கோடி ஒதுக்கப்படுகிறது. கர்நாடகத்தில் தற்போது 12 சதவிகிதம் பேரே உயர் கல்வி பயிலுகிறார்கள். இதை 25 சதவிகிதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அண்மையில் அமைக்கப்பட்ட தும்கூர், தாவணகெரே பல்கலைக்கழகங்கள் மற்றும் பிஜாப்பூர் பெண்கள் பல்கலைக்கழங்களின் அடிப்படை வசதிக்காக ரூ.10 கோடி ஒதுக்கப்படுகிறது. அதுபோல் ஹம்பியில் உள்ள கன்னட பல்கலைக் கழகத்துக்கு ரூ.5 கோடி ஒதுக்கப்படுகிறது. அரசு பொறியியல் கல்லூரிகளில் அடிப்படை வசதிகளைப் பெருக்க ரூ.80 கோடி ஒதுக்கப்படுகிறது. அதுபோல் 10 பொறியியல் கல்லூரிகளுக்கும், 22 பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் கட்டடங்கள் கட்ட ரூ.76 கோடி ஒதுக்கப்படுகிறது. மாநிலத்தில் உள்ள 357 அரசு முதன் நிலைக் கல்லூரிகளில் 167 கல்லூரிகளில் மட்டுமே அறிவியல், மற்றும் வணிகவியல் பாடங்களைச் சொல்லிக் கொடுக்க வசதி உள்ளது. எனவே நடப்பு நிதியாண்டில் மேலும் 100 கல்லூரிகளில் அந்த வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

அரசுப் பள்ளி மாணவர்களின் ஆற்றலைப் பெருக்கி வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்யும் பயிற்சிக்காக ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பெல்லாரியில் விஜயநகர் பல்கலைக்கழகம் துவக்கப்படும். இதற்கு ரூ.10 கோடி ஒதுக்கப்படுகிறது. தார்வாட்டில் உள்ள கர்நாடக பல்கலைக் கழகத்தில் டி.என்.. பரிசோதனை நிலையம் அமைக்க ரூ.4 கோடி ஒதுக்கப்படுகிறது. பெங்களூரில் சமஸ்கிருத பல்கலைக்கழகம் அமைக்க ரூ.5 கோடியும், குல்பர்காவில் பாலி மொழி கல்விக்கு ரூ.1 கோடியும் ஒதுக்கப்படுகிறது என்றார் முதல்வர்.

Last Updated on Saturday, 06 March 2010 08:08