Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகர்ப்புற குடிசைகள் மேம்பாட்டுக்கு ரூ.7.20 கோடியில் திட்டம்

Print PDF

தினமணி 01.04.2010

நகர்ப்புற குடிசைகள் மேம்பாட்டுக்கு ரூ.7.20 கோடியில் திட்டம்

வேலூர், மாரச் 31: வேலூர் மாநகராட்சி எல்லைக்குள் உள்ள குடிசைகள் மேம்பாட்டுக்காக ரூ.7.20 கோடியில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி அறிவித்துள்ளது.

வேலூர் மாநகராட்சியில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாநகராட்சி எல்லைக்குள்பட்ட கன்சால்பேட்டை, டாக்டர் அம்பேத்கர் நகர், சீனிவாசன் நகர், முத்து மண்டபம், அருகந்தம்பூண்டி, நைனியப்பன் தெரு, ஆரோக்கிய மாதா கோயில், உத்திரமாதா கோயில், சித்தார்த்தர் தெரு ஆகிய பகுதிகளில் மொத்தம் 399 குடிசை வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், கான்கிரீட் வீடுகள் கட்டித்தர ரூ.4.26 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, தெருவிளக்கு, வடிகால், புதைசாக்கடை, சுகாதார வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க ரூ.2.94 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வீடுகள் கட்ட வழங்கப்படும் தலா ரூ.1.07 லட்சத்தில், ரூ.90,000 மானியமாகும். இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

எரிவாயு தகன மேடை

மாநகராட்சி பகுதியில் உள்ள பாலாறு, அம்மணாங்குட்டை, வேலப்பாடி, கஸ்பா மயானங்களில் தலா ரூ.25 லட்சத்துக்கு சுற்றுச்சுவர், கழிப்பிட, மின்விளக்கு, குடிநீர் வசதிகள், காரிய மண்டபம், தியான மண்டபம், காவலர் அறை போன்றவசதிகளை மேம்படுத்த ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மேலும், பாலாறு மயானத்தில் ரூ.46 லட்சத்தில் எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதில் அரசு மானியம் ரூ.20 லட்சம். மீதி ரூ.26 லட்சம் மாநகராட்சி நிதியிலிருந்து செலவிடப்பட்டு, பணிகள் முடியும் நிலையில் உள்ளன. மேலும், பூங்காக்கள், நடைபாதைகள், புல்தரைகள், மின்வசதிகள் என ரூ.20 லட்சத்தில் பணிகள் நடைபெறுகின்றன. விரைவில் இப்பணிகள் முடிக்கப்படும். இவற்றை பராமரிக்க ரோட்டரி சங்கத்தினருக்கு மன்றம் அனுமதி அளித்துள்ளது.

காணார் நீரோடை சீரமைப்பு

வேலூர் மாநகராட்சியின் மையப்பகுதியில் 4 கிளை வாய்க்கால்களோடு காணார் ஓடை செல்கிறது. ஓட்டேரி ஏரியிலிருந்து வெளியேறும் தண்ணீர் மற்றும் நகர் பகுதியிலிருந்து வெளியேறும் மழை நீர் இந்த கால்வாயில் சென்று, பாலாற்றில் சேருகிறது. இக்கால்வாய்களைச் சீரமைக்க கடந்த ஆண்டு ரூ.1.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, காமராஜர் நகர் முதல் ஆபீஸர்ஸ் லைன் வரை 1,200 மீ. தூரத்துக்கு பணிகள் முடிந்துள்ளது.

தற்போது 2-ம் கட்டமாக 650 மீ. நீளத்திற்கு கால்வாயைச் சீரமைக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சிக்கு புதிய கட்டடம்

வேலூர் மாநகராட்சிக்கு ரூ.4.98 கோடியில் புதிய கட்டடம் கட்டும் பணி டிட்டர்லைன் பகுதியில் நடைபெறுகிறது. தற்போது 2-ம் தளம் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. வரும் ஜூன் மாதத்தில் இப் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கட்டடத்தின் முகப்புத் தோற்றம், உள்கட்டமைப்பு பணிகள் வரும் நிதியாண்டில் ரூ.2 கோடியில் மேற்கொள்ளப்படும்.

ரூ.9.50 லட்சத்தில் நூலகம்

மாநகராட்சி கல்வி நிதி ரூ.9.50 லட்சத்தில், உயர்கல்வி மாணவர்களுக்கான புதிய நூலகம் கட்டப்படும். உயர்கல்வி விவரங்களை ஏழை மாணவர்கள் அறிந்துகொள்ள ஏதுவாக புத்தகங்கள், கணினி வசதிகள் அமைக்கப்படும்.