Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாதாள சாக்கடை திட்டம் குடிசைப் பகுதிகளில் வசிப்போர் பணம் கட்டத் தேவையில்லை

Print PDF

தினமணி 01.04.2010

பாதாள சாக்கடை திட்டம் குடிசைப் பகுதிகளில் வசிப்போர் பணம் கட்டத் தேவையில்லை

விழுப்புரம், மார்ச் 31: விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட குடிசைப் பகுதிகளில் வசிப்போர் பாதாள சாக்கடை திட்டத்திற்கு பணம் கட்டத் தேவையில்லை, குடிநீர் இணைப்பும் வீடுகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று நகர்மன்றத் தலைவர் ஆர்.ஜனகராஜ் தெரிவித்தார்.

÷விழுப்புரம் நகர்மன்றக் கூட்டம் தலைவர் ஆர்.ஜனகராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் 45 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

÷உறுப்பினர் பாபு: புதிதாக கட்டப்பட்டு வரும் எரிவாயு தகனமேடை பகுதியில் செப்டிக் டேங்க், சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். இல்லையெனில் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்.

÷உறுப்பினர் கணேஷ் சக்திவேல்: இத் திட்டத்துக்கான செலவு எவ்வளவு?

நகர்மன்றத் தலைவர்: இதன் திட்டச் செலவில் ரூ.56 லட்சம் தான் நகராட்சி வழங்குகிறது. மீதியை ரோட்டரி சங்கம் வழங்கியுள்ளது. ரூ. 30 லட்சத்தில் தகன எரிமேடை எந்திரம் வாங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை அனைவரும் சென்று பார்வையிடலாம்.

÷மதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்த உறுப்பினர் செல்வராஜ்: பென்னாகரம் இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்றதற்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.

÷அதிமுக உறுப்பினர் மல்லிகா: அதிமுக ஆதரவில் ஜெயித்த நீங்கள் முதலில் கவுன்சிலர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு நன்றி தெரிவித்துக் கொள்ளுங்கள்.

÷மல்லிகாவுக்கு ஆதரவாக அதிமுக உறுப்பினர்கள் பேசியதால் கூச்சல் குழப்பம் நிலவியது.

÷அப்போது தலைவர் ஜனகராஜ்: அவர்கள் அங்கு நல்லது செய்தார்கள் வெற்றிபெற்றார்கள், இங்கு நல்லதை செய்து நாம் வெற்றிபெறும் வழியை பார்ப்போம்.

÷ரகுபதி: நகராட்சி சமுதாயக்கூடத்தால் எந்த வருமானமும் இல்லை, அதற்கு செலவு செய்வதைவிட, தனியாருக்கு ஒப்பந்தம் மூலம் விட்டுவிடலாம்.

தலைவர்: அப்படியே செய்யலாம்.

கலைவாணன்: நகரில் பிளாஸ்டிக் பொருள்களை தடைசெய்ய வேண்டும். அப்படி செய்தால்தான் பூமாதேவியின் சூடு தணியும். பஞ்சநாதன்: ஹோட்டல்கள், திருமண மண்டபங்களில் உள்ள கழிப்பறைகளை சுகாதார அலுவலர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

÷சுகாதார அலுவலர்: இன்னும் 3 நாள்களுக்குள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

÷ரகுபதி: நகரில் 200 முதல் 300 திருட்டு குடிநீர் இணைப்புகள் உள்ளன. அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

÷தலைவர்: (அலுவலர்களை நோக்கி) திருட்டு இணைப்புகள் மீது அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லா இடத்திலும் ஆய்வுசெய்து திருட்டு இணைப்புகளை துண்டிக்க வேண்டும். இதில் எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது. மேலும் நகரில் உள்ள 14 குடிசைப் பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்டத்துக்கென ரூ.2.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் அப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இத் திட்டத்துக்காக பணம் கட்டத்தேவையில்லை, அதேபோல் குடிநீர் இணைப்பும் இந்த வீடுகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.