Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதையும் மர்மம்; புரிந்தது கொஞ்சம் : மண்ணில் மாற்றம்; ஆய்வில் உறுதி : அடுக்குமாடியை இடித்து அகற்ற முடிவு

Print PDF

தினமலர் 08.04.2010

புதையும் மர்மம்; புரிந்தது கொஞ்சம் : மண்ணில் மாற்றம்; ஆய்வில் உறுதி : அடுக்குமாடியை இடித்து அகற்ற முடிவு

கோவை: கோவையில் மண்ணில் புதைந்து வரும் கட்டடம் பற்றி நேற்று நடத்திய ஆய்வில், அஸ்திவாரத்துக்கு அடியில் உள்ள மண்ணில் மாற்றம் இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் கட்டடம் புதைவதன் மர்மம் விலகியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் கட்டடத்தை முழுமையாக இடித்து விட்டு, இதே வளாகத்தில் வேறு புதிய குடியிருப்பு கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. குளக்கரையோரங்களில் குடியிருந்தவர்களுக்கு மாற்று குடியிருப்பு வழங்கும் நோக்கத்துடன், கோவை அம்மன்குளத்தில் 936 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. ஜவகர்லால் நேரு தேசிய நகர் புனரமைப்புத் திட்ட நிதியை பயன்படுத்தி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் இந்த வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. பெரும்பகுதி பணி முடிந்தநிலையில், மொத்தம் உள்ள 16 கட்டடங்களில் ஒரு கட்டடம் மட்டும் மண்ணில் புதைய துவங்கியது. சிறுகச்சிறுக, சாய்ந்த கட்டடம் 56 செ.மீ., வரை சாய்ந்திருந்த போது, பின்புறம் இரும்புக் குழாய்களால் முட்டுக் கொடுத்து, சாய்வதை பொறியாளர்கள் தடுத்து நிறுத்தினர். அடுத்தபடியாக, கட்டடத்தின் எடையை குறைக்க, பக்கவாட்டு சுவர்களில் இருந்த செங்கற்களை இடிக்கும் பணி நடக்கிறது. அதன் மூலம், புதையும் கட்டடம், அருகில் இருக்கும் மற்ற கட்டடம் மீது சாய்ந்து விடாமல் தடுக்கப்பட்டுள்ளது. தற்போது, புதைந்த கட்டடம் அருகில் ஆழ்துளையிட்டு மண் சேகரிக்கும் பணி (போர்வெல் இன்வெஸ்டிகேஷன்) நடக்கிறது. நேற்று முன்தினம் மாலையில் துவங்கிய இப்பணி, நேற்றும் தொடர்ந்தது. இப்பணிகளை கோவை அரசு தொழில் நுட்பக் கல்லூரி சிவில் இன்ஜினியரிங் துறை உதவி பேராசிரியர் அருமைராஜ் நேற்று பார்வையிட்டார். குழாய் வடிவில் இறுகிய நிலையில் சேகரிக்கப்பட்ட சாம்பிள்களை அளந்து குறிப்பு எடுத்துக் கொண்டார்.

அவர் கூறியதாவது: ஏற்கனவே ஆறு மீட்டர் ஆழத்தில் அஸ்திவாரம் தோண்டப்பட்டுள்ளது. அஸ்திவார மட்டத்தில், 'கான்கர்' எனும் கடின தன்மையுள்ள மண் உள்ளது. இது கட்டுமானத்துக்கு ஏற்றது. கட்டடம் புதைவதற்கு இந்த மண் காரணமாக இருக்க வாய்ப்பில்லை. ஆகவே அதன் அடியில் மேலும் 20 அடிகள் வரை தோண்ட முடிவு செய்துள்ளோம். இதுவரை மேலும் 7.2 மீட்டர் தோண்டி மண் சேகரிக்கப்பட்டுள்ளது. அஸ்திவார மட்ட மண்ணை விட அடியில் வேறு விதமான இளகிய மண் இருந்தால் தான் கட்டடம் புதைவதற்கு வாய்ப்பு உள்ளது. இப்போது புதிதாக எடுக்கப்பட்ட மண்ணில் சிறு மாற்றம் உள்ளது தெரிய வந்துள்ளது.

அதன் அடியில் உள்ள மண் அடுக்குகளிலும், 'இதே போன்ற மாற்றம் உள்ளதா' என்பதை கண்டறிய வேண்டும். மேலும் துளையிடும் போதுதான் இது தெரிய வரும். 'ஸ்டேண்டர்டு பெனட்ரேஷன் டெஸ்ட்' (எஸ்.பி.டி.,) முறையில் துளையிடப்படுவதால் கட்டடத்துக்கு பாதிப்பு வராது. கட்டடத்தை சுற்றிலும் நான்கு இடங்களில் மண் சேகரிக்கப்படும். ஆழம் செல்லச்செல்ல துளையிடுவது கடினமாக உள்ளதால், பணிகள் மெதுவாக நடக்கின்றன. ஜி.சி.டி., கல்லூரி ஆய்வகத்தில் மண் மாதிரிகளை சோதித்து பார்த்தபின் மண்ணில் ஏற்பட்ட மாற்றத்தின் தன்மை உறுதி செய்யப்படும். இவ்வாறு அருமைராஜ் கூறினார்.

ஆய்வு பணிகளில், ஜி.சி.டி., கல்லூரியில் எம்.., சிவில் இன்ஜினியரிங் படிக்கும் 23 மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆய்வு பணியை பார்வையிட, சென்னையில் இருந்து குடிசை மாற்று வாரிய கண்காணிப்பு பொறியாளர் இளங்கோ நேற்று வந்திருந்தார். அவர் கூறியதாவது: கட்டட டிசைனின்படி தான் கட்டுமானம் நடந்தது. ஆனாலும் புதையும் மர்மம் புரியவில்லை. மண்ணின் ஆழமான பகுதியில் ஏதோ மாற்றம் உருவாகியிருக்க வேண்டும். இந்த மாற்றம், அருகில் உள்ள பிற கட்டடங்களை பாதிக்க வாய்ப்பில்லை.
மண்ணின் கீழ் ஏற்படும் மாற்றங்கள், தண்ணீரில் ஏற்படும் 'சுழல்' போல், ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தான் இருக்கும். ஆகவே பிற கட்டடங்கள் பற்றி கவலைப்படத் தேவையில்லை. மண் பரிசோதனையின் முடிவு எப்படிப்பட்டதாக இருந்தாலும், பாதிப்புக்கு உள்ளான கட்டடம் விரைவில் முழுமையாக இடித்து தரைமட்டமாக்கப்படும். இடிக்கும் போது ஏற்படும் அதிர்வு அருகில் உள்ள கட்டடத்தை பாதிக்காமல் இருக்க, கட்டடத்தின் மேல் பகுதியில் இருந்து சிறுகச்சிறுக இடிக்கப்படும். அந்த இடத்தில் வேறு கட்டடங்கள் கட்டப்பட மாட்டாது. இதே வளாகத்தில் உள்ள வேறு இடத்தில் புதிய கட்டடம் விரைவில் கட்டி முடிக்கப்படும்.இவ்வாறு இளங்கோ கூறினார்.

Last Updated on Thursday, 08 April 2010 06:34