Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிசையில்லா மாநிலமாக மாற்ற ரூ. 1,800 கோடி ஒதுக்கீடு

Print PDF

தினமணி 12.04.2010

குடிசையில்லா மாநிலமாக மாற்ற ரூ. 1,800 கோடி ஒதுக்கீடு

பரமக்குடி, ஏப்.11: தமிழகத்தை குடியில்லா மாநிலமாக மாற்றுவதற்க ரூ. 1,800 கோடி நித ஒதுக்கப்பட்டு, அதற்கான கணக்கெடுப்புப் பணி நடைபெற்றுவருவதாக, குடிசைமாற்று வாரியத்துறை அமைச்சர் சுப.தங்கவேலன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் ஒன்றியம், பாண்டியூர் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசுகையில் அவர் இதைத் தெரிவித்தார். கூட்டத்துக்கு கலைஞர் பகுத்தறிவுப் பாசறை ஒன்றியத் தலைவர் க.சமயமுத்து தலைமை வகித்தார்.

மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சுப..சம்பத், மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் அ.வே.அரவரசன், ஒன்றிய துணைச் செயலாளர் சன்.ராமபாண்டியன், கிளைச் செயலாளர் ஆர்.மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். நயினார்கோவில் ஒன்றியச் செயலாளர் சுப..திவாகரன் வரவேற்றார். கூட்டத்தில் அமைச்சர் மேலும் பேசியது: திமுக அரசு தேர்தலில் சொல்லிய வாக்குறுதிகளையும் சொல்லாத பல நல்ல திட்டங்களையும் மக்கள் பயன்பெறும் வகையில் நிறைவேற்றிவருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏழை மாணவர்களும் பயன்பெறும் வகையில் சித்தார்கோட்டையில் பொறியியல் கல்லூரி கட்டப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில் மழை காலங்களில் ஏற்படும் காட்டாறு வெல்லம் கடலில் கலந்து வீணாவதைத் தடுக்கும் வகையில் 18 கோடியில் கஞ்சம்பட்டரை பகுதியில் அணை கட்டுவதற்கு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டத்தில் பல நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர் நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. ஏர்வாடி, நயினார்கோவில், ஆரம்பக்கோட்டை ஆகிய ஊர்களில் 30 படுக்கைகள் கொண்ட நவீன மருத்துவ வசதிகளுடன் ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டப்பட்டு செயல்பட்டுவருகின்றன. ராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துவமனையில் தலா ரூ. 2 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.மாவட்டம் முழுவதும் புதிய சாலைகள் போடப்பட்டும், புதிய பேருந்து வழித்தடங்கள் ஏற்படுத்தி பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் புதிதாக 3 ஆயிரம் பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டு, 541 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் ஐந்தாண்டுகளுக்குள் தூர்வாரப்படாத அனைத்து கண்மாய்களும் இந்த ஆண்டுக்குள் தூர்வார திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

குடும்பத்தில் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு அரசே அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டுள்ளது. தற்போது இந்த அரசுக்கு மின்பற்றாக்குறை பெறும் சவாலாக உள்ளது. அதைப் போக்கும் வகையில் தூத்துக்குடி, கல்பாக்கம் ஆகிய இடங்களில் நிலக்கரி மூலமாக அனல் மின்சாரம் கூடுதலாக கிடைக்கத் திட்டமிடப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அமைச்சர். கூட்டத்தில், நயினார்கோவில் ஒன்றியங்களைச் சேர்ந்த மாற்றுக்கட்சியினர் 175 பேர் அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

Last Updated on Monday, 12 April 2010 09:39