Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

எழும்பிய அடுக்குமாடி; உத்தரவிற்குப்பின் இடிப்பு : கோவை அம்மன்குளத்தில் இரண்டாவது சோகம்

Print PDF

தினமலர் 20.04.2010

எழும்பிய அடுக்குமாடி; உத்தரவிற்குப்பின் இடிப்பு : கோவை அம்மன்குளத்தில் இரண்டாவது சோகம்

கோவை: அரசு உத்தரவிற்குப் பின்பு இடிக்கும் பணி துவங்கப்படும் என்று குடிசைமாற்று வாரிய பொறியாளர் கோபி கூறினார். கோவை அம்மன்குளம் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் 48 வீடுகள் கொண்ட 2 (பி) பிளாக் கட்டடம் கடந்த ஏப்ரல் 3 ம் தேதி மண்ணில் புதைந்தது. ஆய்வு செய்த அரசின் ஆய்வுக் குழுவினர் மற்றும் குடிசைமாற்று வாரியப் பொறியாளர்கள், பூமிக்குள் ஆறரை அடி வரைக்கும் மண்கெட்டித்தன்மையாக உள்ளது. அதற்கு மேல் மண் இளகிய தன்மையாக இருப்பதால், கட்டடத்தின் எடையை மண்ணால் தாங்க முடியாமல் மண்ணுக்குள் புதைந்தது, என்றனர். இச்சூழலில் நேற்று முன் தினம் 24 வீடுகள் கொண்ட மூன்றடுக்கு கொண்ட, 4(பி) பிளாக்கின் வட பகுதியில் 25 செ.மீ ஆழத்திற்கு கட்டடம் மண்ணிற்குள் புதைந்தது. மேலும் கட்டடம் மண்ணிற்குள் புதையாமல் இருப்பதற்காக, இரும்பு பைப்புகளை கொண்டு முட்டு கொடுத்து தடுத்து நிறுத்தும் பணி உடனடியாக மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் நேற்று மேலும் 5 செ.மீ., ஆழத்திற்கு கட்டடம் மண்ணிற்குள் புதைந்தது தெரியவந்தது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை, அடுக்குமாடி கட்டடம் புதையும் வேகத்தை நவீன கருவி மூலம் அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர்.குடிசை மாற்று வாரிய நிர்வாக பொறியாளர் கோபி கூறியதாவது: கட்டடம் பூமியினுள் புதைந்து வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதைந்த கட்டடத்தில் உள்ள அறைகளில் மற்ற கட்டடங்களுக்கு தேவையான இரும்பு, நிலவு, ஜன்னல் உள்ளிட்ட இரும்பு தளவாடங்கள் வைக்கப்பட்டிருந்தன.இதன் காரணமாக கட்டடத்தின் எடை அதிகமாகி புதைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், இரும்பு நிலவுகள், ஜன்னல்கள் உள்ளிட்ட இரும்புப் பொருட்களை மற்ற இடங்களுக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்க இன்ஜினியர்கள் தொழிலாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். அஸ்திவாரத்தை உறுதிப்படுத்த மாற்றுத்தொழில்நுட்பம் குறித்து பன்னாட்டு நிறுவனங்களுடனும், உள்ளூரிலும் கைதேர்ந்த பொறியாளரிடமும் பேசி வருகிறோம்.இந்நிலையில் ஏற்கனவே மண்ணிற்குள் புதைந்த ஒரு கட்டடத்தை இடித்தது போல தற்போது புதைந்து வரும் இந்த கட்டடத்தையும் இடித்து அப்புறப்படுத்த அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். அரசு அனுமதியளித்தால் கட்டடம் இடித்து அப்புறப்படுத்தும் பணி துவங்கும்.கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டடத்தில் தொழில்நுட்ப குறைபாடுகள் இருக்கிறதா, மண்ணிற்கு கெட்டித்தன்மை இல்லையா என்பது குறித்தெல்லாம் கேள்விகளை கேட்க வேண்டாம்.அரசின் திட்டங்கள் மக்களுக்கு போய் சேர வேண்டும் என்று உயரிய நோக்கில் நாங்கள் பணிபுரிந்து வருகிறோம். எதிர்பாராமல் ஏற்படும் இது போன்ற இழப்பீடுகளை மன உறுதியுடன் தாங்கிக்கொள்ள வேண்டும். இதை பெரிது படுத்துவதோ, குற்றம் சுமத்தி பேசுவதாலோ எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. அடுத்து அரசு என்ன செய்யச் சொல்கிறதோ அதை செய்யத் தயாராக இருக்கிறோம், என்றார

Last Updated on Tuesday, 20 April 2010 06:04