Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.29 கோடி அடுக்கு மாடி கட்டடம் இடிப்புக்கு யார் காரணம்?

Print PDF

தினமலர் 20.04.2010

ரூ.29 கோடி அடுக்கு மாடி கட்டடம் இடிப்புக்கு யார் காரணம்?

கோவை அம்மன்குளத்தில் 29 கோடி ரூபாய் மதிப்பில் கட்டிய வீடுகளை இடிக்க வேண்டிய சூழ்நிலைக்கு காரணமானவர்களை விசாரிக்க வேண்டும். அதற்கு உடந்தையாக இருந்தவர்களையும் விசாரணைக்கு உற்படுத்த வேண்டும். வீடுகள் கட்ட அனுமதித்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, விரிவான விசாரணை நடத்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் 3,840 வீடுகளை தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கட்டி வருகிறது. நீர்நிலை புறம்போக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிசைகளில் வசிப்பவர்களுக்கு இந்த வீடுகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பயனாளிகளை மாநகராட்சி நிர்வாகமே தேர்வு செய்ய உள்ளது. இந்த இடத்தில் வீடு கட்டலாம் என்று முடிவு செய்ததும், கோவை மாநகராட்சி நிர்வாகமே. ஆனால், வீடுகளை கட்டும் பணி மட்டும் குடிசைமாற்று வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதே திட்டத்தில், மேலும் 9,000 வீடுகளை உக்கடம் உட்பட வேறு இடங்களில் கட்ட மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. குடிசை மாற்று வாரியம் கட்டும் வீடுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, மொத்தம் 118 கோடி ரூபாய். இதில், 50 சதவீதத் தொகை, மத்திய அரசின் மானியம்; அதாவது, 59 கோடி ரூபாய் நிதி, நேரடியாக மத்திய அரசு தந்துள்ளது.

இந்த நிதியைப் பயன்படுத்தும் முன், சரியான இடத்தைத் தேர்வு செய்து, அங்கு மண் ஆய்வு செய்து, எவ்வளவு மாடிகள் கட்டலாம் என்பதை மிகத் தெளிவாக உறுதிப்படுத்தி இருக்க வேண்டியது, மாநகராட்சி நிர்வாகத்தின் கடமை. அதைக் கண்காணித்து, தொழில்நுட்ப ரீதியாக ஆய்வுகளை மேற்கொண்டு, அதன் பின் நிர்வாக ஒப்புதலை வழங்கியிருக்க வேண்டியது, தமிழக அரசின் நகராட்சி மற்றும் நிர்வாக வழங்கல் துறையின் பொறுப்பு. ஆனால், 'கமிஷன்' என்ற ஒரே காரணத்துக்காக எல்லோருமே பொறுப்பற்று நடந்திருப்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத் திட்டத்துக்கான மதிப்பீடு தயாரிக்கும் போதே, 20 சதவீதம் வரை கூடுதல் தொகை வைத்தே மதிப்பீடு தயாரிக்கப்படுவதாக அப்போதே குற்றச்சாட்டு எழுந்தது. இந்த தொகையில், 10 முதல் 15 சதவீதம் வரை, அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு கமிஷனாகச் சென்றிருக்கிறது.

இந்த கமிஷனை விரைவாகப் பெற வேண்டும் என்பதற்காகவே, அரசியல்வாதிகள் அவசர கதியில் தீர்மானம் நிறைவேற்ற, அதிகாரிகளும் நிர்வாக ஒப்புதலை வாரி வழங்கி விட்டனர். அமைச்சர்கள், மேலதிகாரிகளுக்கு இதில் முக்கிய பங்கு இருப்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த கட்டடங்களைக் கட்ட இடம் தேர்வு செய்து, டெண்டர் விட்டு, கமிஷன் பார்த்த முக்கிய அதிகாரிகள் பலரும் இங்கிருந்து 'எஸ்கேப்' ஆகி விட்டனர். இதனால், கோவை மக்களுக்கு நேரடியாகப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் கோவையில் உள்ள அரசியல்வாதிகள் மட்டுமே. குறிப்பாக, தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு இந்த பொறுப்பு அதிகமுள்ளது. ஏனெனில், இது அவரது தொகுதி. இடத்தைத் தேர்வு செய்தது, கட்டடம் கட்டுவது, மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது, டெண்டர் விட்டது உட்பட எல்லாமே அமைச்சருக்குத்தெரியாமல் நடக்கவில்லை. மத்திய அரசின் திட்டம் என்பதால், இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மேயர் உள்ளிட்ட காங்கிரசார் மார் தட்டிக் கொள்ளவும் மறக்கவில்லை. இவர்கள் எல்லோரும், புதையும் கட்டடங்களுக்கு என்ன விளக்கம் தருவார்கள் என்பதே கேள்வி. ஏனெனில், 29 கோடி ரூபாய் மதிப்பில் கட்டிய வீடுகளை இடிப்பதைத்தவிர வேறு வழில்லை.அஸ்திவாரத்தைப் பலப்படுத்தப்போவதாக குடிசை மாற்று வாரியப் பொறியாளர்கள் சொன்னாலும், உயிரைப் பணயம் வைத்து யாரும் அங்கு குடியேறத் தயாரில்லை. இதனால், இத்தனை கோடிப் பணமும் நிச்சயமாக வீண்தான். இந்த இழப்பை யாரிடம் வசூலிப்பது என்று மக்கள் கேட்கின்றனர். இது ஓர் உதாரணம் மட்டுமே. ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத் திட்டத்தில், எல்லாத் திட்டங்களிலும் கமிஷன் விளையாடி, அரைகுறைத் தரத்தில்தான் பணிகள் நடக்கின்றன என்பதே உண்மை. இதனால், இந்த திட்டங்களால் எதிர்காலத்தில் பலன்களை விட பாதிப்புகள் அதிகமாகுமோ என்ற அச்சமும் மக்களிடம் உள்ளது. மத்திய அரசின் நேரடிப் பங்களிப்புள்ள இந்த திட்டத்தில் முறையான மண் பரிசோதனை, ஆய்வு செய்யாமல் இவ்வளவு பெரிய கட்டடங்களை அனுமதித்தது பற்றி விரிவான விசாரணை நடத்த வேண்டியது அவசியம். அது சி.பி.., விசாரணையாக இருந்தாலும் நல்லதே.வெளியே வருமா உண்மை?அம்மன் குளம், உக்கடம் ஆகிய இடங்களில், பல அடுக்கு மாடிக் கட்டடம் கட்டும் முன்பாக, மண் பரிசோதனை நடத்தி, 'உகந்த இடம்' என்று அறிக்கை வந்த பின்பே, அங்கு கட்டடம் கட்ட முடிவு செய்ததாகக் கூறுகின்றனர் மாநகராட்சி மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள். ஆனால், இப்போது 'இளகிய தன்மை'யுள்ள மண் இருப்பதாகக் கூறுகின்றனர்.முதலில் அங்கு மண் பரிசோதனை செய்யப்பட்டது உண்மையா, பரிசோதனையில் 'உகந்தஇடம்' என்று சொல்லப்பட்டதா, அந்த அறிக்கை கொடுத்த நிறுவனத்தின் நம்பகத்தன்மை என்ன என்பதெல்லாம் மக்களின் கேள்வி. இதை தெளிவுபடுத்த 'மண் ஆய்வு' அறிக்கையை பகிரங்கமாக வெளியிட வேண்டியது அரசின் தார்மீக கடமை.

Last Updated on Tuesday, 20 April 2010 06:16