Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பூமிக்குள் புதைந்த அடுக்குமாடிக் குடியிருப்புகள்: விசாரணைக் கமிஷன் அமைக்க சிபிஐ கோரிக்கை

Print PDF

தினமணி 21.04.2010

பூமிக்குள் புதைந்த அடுக்குமாடிக் குடியிருப்புகள்: விசாரணைக் கமிஷன் அமைக்க சிபிஐ கோரிக்கை

கோவை, ஏப்.18: கோவையில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் பூமிக்குள் புதைந்தது தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டுமென, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

அக் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ஆறுமுகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கோவை ராமநாதபுரம் அம்மன் குளத்தில் ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் 16 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றில் 48 வீடுகளைக் கொண்ட ஒரு அடுக்குமாடி ஏப்.4}ம் தேதி பூமிக்குள் புதைந்தது. இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு, சரியான இடத்தில் மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியது. இந்நிலையில், மீண்டும் அதே இடத்தில் மற்றொரு கட்டடம் செங்குத்தாகப் பிளந்து, ஒருபுறம் சாய்ந்துள்ளது.

இதனால், இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியேற இருப்போர் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. அஸ்திவாரத்துக்கு மண் எடுக்கப்பட்ட இடத்தில் இன்னும் ஈரமாக இருப்பதாகவும், தண்ணீர்க் கசிவு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே இச் சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷனை தமிழக அரசு அமைத்து உண்மை நிலவரத்தைக் கண்டறிய வேண்டும். அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டடங்கள் கட்ட அம்மன் குளம் தகுதியான இடம் இல்லை என்பதால் மாற்று இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

மேலும் கோவை உக்கடம் கழிவுநீர் பண்ணையில் கட்டப்படும் அடுக்குமாடிக் குடியிருப்பையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார் அவர்.

சம்பவ இடத்தை எம்.ஆறுமுகம், மாநகராட்சி கல்வி குழுத் தலைவர் ஆர்.கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

Last Updated on Wednesday, 21 April 2010 11:03