Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அம்மன்குளத்தில் மேலும் 4 கட்டடங்களுக்கு ஆபத்து : புதைவதற்கு காரணம் இளகிய மண் தான் நிபுணர் குழு இறுதி அறிக்கையில் தகவல்

Print PDF

தினமலர் 24.04.2010

அம்மன்குளத்தில் மேலும் 4 கட்டடங்களுக்கு ஆபத்து : புதைவதற்கு காரணம் இளகிய மண் தான் நிபுணர் குழு இறுதி அறிக்கையில் தகவல்

அம்மன்குளம் அம்மன்குளத்தில் கட்டிய அடுக்குமாடி கட்டடங்கள் புதைவதற்கு, அஸ்திவாரத்தின் அடிப்பகுதியில் இருக்கும் இளகிய மண் தான் காரணம் என ஆய்வில் தெரியவந்துள் ளது. ஏற்கனவே புதைந்த இரு கட்டடங்களை தவிர, மேலும் மூன்று முதல் நான்கு கட்டடங்களின் அடியில் இளகிய மண் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கோவை அம்மன் குளத்தில் குடிசை மாற்று வாரியம் கட்டிய அடுக்குமாடிகளில், இரு கட்டடங்கள் மண்ணில் புதைந்துள்ளன. முதலில் புதைந்த கட்டடம் இடிக்கப் பட்டு வரும் நிலையில், இரண்டாவதாக ஒரு கட்டடமும் மண்ணில் புதைய துவங்கியது. கட்டடம் மண்ணில் புதைவதற்கான காரணம் பற்றி அறிய கோவை அரசு தொழில் நுட்பக் கல்லூரி

பேராசிரியர் அருமை ராஜ், சென்னை பல்கலை பேராசிரியர் சாந்தகுமார், கோவை பி.எஸ்.ஜி., தொழில் நுட்ப கல்லூரி பேராசிரியர் பழனிக்குமார் அடங்கிய நிபுணர் குழு ஏற்படுத்தப் பட்டது. இக்குழுவினர் ஆய்வில், அஸ்திவாரத்தின் கீழ் உள்ள மண், இளகிய தன்மை கொண்டதாக இருந்ததே காரணம் என தெரிய வந்தது. இந்நிலையில், சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் காந்தி, சென்னை பல்கலை பேராசிரியர் சாந்தகுமார் ஆகியோர் நேற்று அம்மன்குளம் கட்டடங்களை நேரில் ஆய்வு செய்தனர். இடிக்கப்படும் கட்டடத்தின் பின்புறம் 12 அடி ஆழ குழியில் இறங்கி, கடப்பாறையால் மண்ணை குத்தி சோதித்தனர். ஏற்கனவே கட்டடத்தின் கீழிருந்து சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளையும் ஆய்வு செய்தனர். இறுகிய உருளைகளாக மாறியிருந்த மண் மாதிரிகளை தண்ணீரில் மூழ்க வைத்து, அதன் உறுதி தன்மையை பரிசோதித்தனர். அஸ்திவாரம் தோண்டுவது முதல் தற்போது நடக்கும் கட்டுமானப் பணிகள் வரை, அனைத்து பணிகளின் புகைப்படங்களையும் வரவழைத்து பார்த்தனர். அஸ்திவாரத்தின் ஆழம், பயன்படுத்தப்பட்ட கலவை விகிதம் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் கேட்டறிந்தனர்.

குழுவினர் சமர்ப்பித்த இறுதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அம்மன் குளம் பகுதியில் மொத் தம் 25 போர்வெல்கள் போட்டு, மண் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதில், தற்போது புதைந்து வரும் இரு கட்டடங்களை தவிர, மேலும் மூன்று முதல் நான்கு கட்டடங்களின் அடியில் உள்ள மண் அடுக்குகளும் இள கிய தன்மையுடன் இருக்கலாம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அஸ்திவாரத்தின் அடியில் இளகிய மண் இருப்பதே கட்டடங்கள் புதைய காரணம். இரண்டாவதாக புதைந்து வரும் கட்டடத்தில் விரிசல் எதுவும் இல்லை.

இந்த கட்டடத்துடன், புதைய வாய்ப்புள்ள மேலும் மூன்று முதல் 4 கட்டடங்களை, 'ஜெட் கிரவுட்டிங்' டெக்னிக் பயன்படுத்தி பலப்படுத்தலாம். இந்த முறையின்படி, இக்கட்டடங்களின் ஒவ்வொரு 'காலம்' வழியாக, அஸ்திவாரத்தின் ஆழம் வரை துளையிட்டு, கெமிக்கல், சிமென்ட் கலவை மேலிருந்து உயர்ந்த அழுத்தத்தில் பீய்ச்சியடிக்கப்படும். கட்டடத்தின் அடியில் உள்ள இளகிய மண், இதன் மூலம் உறுதிப் படுத்தப்படும். மண்ணின் இடையே சிறு இடைவெளி இருந்தாலும், இந்த கலவை அதை இணைத்து மூடி விடும். அதன் பின் கட்டடங்களுக்கு எந்தவித ஆபத்தும் வராது. இதைத்தவிர பிற குடியிருப்புகள் நல்ல நிலையில்தான் உள்ளதால், அங்கு 'கிரவுட்டிங்' தொழில்நுட்பம் தேவைப்படாது.

Last Updated on Saturday, 24 April 2010 05:53