Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வீட்டு வசதி திட்டத்துக்காக புதுச்சேரி அரசுக்கு தேசிய விருது

Print PDF

தினமணி 24.04.2010

வீட்டு வசதி திட்டத்துக்காக புதுச்சேரி அரசுக்கு தேசிய விருது

புதுச்சேரி, ஏப். 23: நாட்டிலேயே சிறந்த முறையில் வீட்டு வசதி திட்டத்தை நிறைவேற்றுவதற்காக புதுச்சேரி அரசுக்கு தேசிய அளவிலான விருது கிடைத்துள்ளது.

இது குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் வி. வைத்திலிங்கம் வெளியிட்ட அறிவிப்பு:

மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் வறுமை ஒழிப்பு அமைச்சகத்தின் நிறுவனமான ஹட்கோ இந்திய அளவில் சிறந்த முறையில் வீட்டு வசதி மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்களைச் செயல்படுத்தும் அரசு துறையைத் தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.

இதன் அடிப்படையில் இந்திய அளவில் புதுச்சேரி அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த விருதை வரும் 26-ம் தேதி புதுதில்லியில் வீட்டு வசதி மற்றும் வறுமை ஒழிப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் குமாரி செல்ஜா வழங்குகிறார் என்றார்.

எந்த அடிப்படையில் தேர்வு புதுச்சேரி எந்த அடிப்படையில் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று ஹட்கோ அதிகாரிகள் கூறியது:

நாட்டில் பல்வேறு மாநில அரசுகளும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கு வீட்டு வசதி திட்டத்தை நிறைவேற்றினாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது புதுச்சேரி ஆதிதிராவிட நலத்துறை செயல்படுத்தும் திட்டம் சிறப்பானது.

குறிப்பாக ஒவ்வொரு வீடும் ரூ.5.3 லட்சத்தில் கட்டப்படுகிறது. இதைத் தவிர இந்த வீடுகளில் படுக்கை அறை, கூடம், சமையல் கூடம், கழிப்பறை வசதி உள்ளிட்ட ஓர் இல்லத்துக்குத் தேவையான எல்லா வசதிகளும் இருக்கும்.

படிக்கட்டு வசதியும் இருக்கும். மேல்மாடி கட்டுவதற்கு உரிய அளவில் கடைக்கால் வசதியும் இருக்கும். இதைத் தவிர மேம்படுத்தப்பட்ட சாலை வசதி, கழிவுநீர் வெளியேறும் வசதி, அதைத் தவிர மக்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளுக்காக தனியாக இடம் போன்றவையும் வீட்டு வசதித் திட்டத்தில் வருகிறது.

ஒவ்வொரு வீட்டுக்கும் 600 சதுர அடி ஒதுக்கப்பட்டு அதில் 346 சதுர அடியில் கட்டடம் கட்டிக் கொடுக்கப்படுகிறது. இது முழுவதும் இலவசம். இத் திட்டத்தின் கீழ் 2008-ம் ஆண்டு ரூ.130 கோடியில் 3 ஆயிரம் வீடுகள் கட்டப்பட உள்ளன. இதில் ரூ.51 கோடி மத்திய அரசின் மானியம். மீதி ஹட்கோ நிறுவனத்தின் கடனுதவி.

2009-ம் ஆண்டில் ரூ.145.75 கோடியில் 4 ஆயிரம் வீடுகளும் ஆக மொத்தம் 12 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்க ஆதிதிராவிட நலத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது முழுவதும் ஹட்கோவின் கடனுதவி. இந்த வீடுகள் கட்டும் பணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. வீடுகள் கட்டும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

சிறப்பான திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இந்த விருது கிடைத்துள்ளது. புதுச்சேரிக்கு மே 1-ம் தேதி வருகை தரும் மக்களவைத் தலைவர் மீராகுமார் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைப்பார் என்று தெரிகிறது.