Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதைந்த கட்டடங்கள்: நிபுணர் குழு ஆய்வு

Print PDF

தினமணி 24.04.2010

புதைந்த கட்டடங்கள்: நிபுணர் குழு ஆய்வு

கோவை, ஏப்.23: கோவையில் பூமிக்குள் புதைந்த அடுக்குமாடிக் கட்டடங்களை நிபுணர் குழு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தது.

ராமநாதபுரம் அம்மன்குளத்தில் குடிசை மாற்றுவாரியத்தின் சார்பில் 16 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. அதிகவேகமாக கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்தபோது ஒரு அடுக்குமாடி 56 செ.மீ. வரை பூமிக்குள் புதைந்தது. இதனால், அந்தக் கட்டடம் பின்புறமாக சாய்ந்தது. இச் சம்பவம், ஏப்.4}ம் தேதி நடந்தது. தமிழக அரசின் உத்தரவின்பேரில் அந்தக் கட்டடத்தை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந் நிலையில், மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பகுதி 25 செ.மீ. வரை பூமிக்குள் புதைந்தது. அந்தக் கட்டடம் மேலும் புதையாமல் தடுக்க முட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது. கட்டடங்களின் உறுதி மற்றும் மண்ணின் தன்மை குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை தமிழக அரசு நியமித்தது. இந்தக் குழுவில் குடிசை மாற்றுவாரிய ஆலோசகர் ஏ.ஆர்.சாந்தகுமாரும், சென்னை ஐஐடி பேராசிரியர் எஸ்.ஆர்.காந்தியும் இடம்பெற்றுள்ளனர்.

இதற்கிடையே அடுக்குமாடிக் கட்டடங்கள் அமைந்துள்ள இடத்துக்கு அருகே ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு 16 அடி ஆழத்துக்கு குழியை தோண்டி, மண் மாதிரிகளை எடுக்கும் பணி நடைபெற்றது. ஏற்கெனவே ஆழ்துளையிட்டு எடுக்கப்பட்ட மண் மாதிரிகள் ஜிசிடி கல்லூரி ஆய்வகத்தில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது. ஆய்வு முடிவு இன்னும் வெளியாகவில்லை.

இந் நிலையில், அடுக்குமாடிக் குடியிருப்புகளின் உறுதித் தன்மை குறித்து நிபுணர் குழு ஆய்வு செய்தது. இந்தக் குழுவினர், பூமிக்குள் புதைந்த கட்டடங்களின் நிலை தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, குடிசை மாற்று வாரிய தலைமைப் பொறியாளர் சி.பழனிசாமி, நிர்வாக பொறியாளர் கோபி, கட்டட ஒப்பந்ததாரர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.

நிபுணர் குழுவிற்கு தலைமை வகித்த சாந்தகுமார் கூறியது:

கட்டட அஸ்திவாரத்தின் உறுதித் தன்மை குறித்து ஆராய்ந்தோம். மேலும், மண்ணின் தன்மை தொடர்பாகவும் ஆய்வு செய்து வருகிறோம். ஆழ்துளை மூலம் எடுக்கப்பட்ட மண் மாதிரி ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் விரைவில் வெளியாகும். இதன் அடிப்படையில் தமிழக அரசிடம் அறிக்கை அளிப்போம் என்றார்.