Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதையும் கட்டடங்களுக்கு புத்துயிர் அளிக்க மண் உறுதி தொழில்நுட்பம் நம்பகமானதா? : அறிக்கை சமர்ப்பிக்க அரசு உத்தரவு

Print PDF
தினமலர் 29.04.2010

புதையும் கட்டடங்களுக்கு புத்துயிர் அளிக்க மண் உறுதி தொழில்நுட்பம் நம்பகமானதா? : அறிக்கை சமர்ப்பிக்க அரசு உத்தரவு

கோவை: அம்மன்குளம் பகுதியில் புதைந்து வரும் இரண்டாவது கட்டடம் மற்றும் புதைய வாய்ப்புள்ள மேலும் நான்கு கட்டடங்களை உறுதிப்படுத்துவதற்கான விரிவான அறிக்கை தயாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக அனைத்து கட்டுமானப் பணிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.கோவை அம்மன் குளம் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் 936 அடுக்குமாடி குடியிருப்புகள் 16 கட்டடங்களாக கட்டப்பட்டு வருகின்றன. இதில் ஒரு கட்டடம் ஏப்., 3ம் தேதி மண்ணில் புதைந்ததை அடுத்து, அக்கட்டடத்தை முழுமையாக இடிக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 15 நாட்களில் அதே கட்டடத்தின் முன்புறம் உள்ள மற்றொரு கட்டடமும் 25 செ.மீ., மண்ணில் புதைந்தது. இதன் காரணமாக அக்கட்டடத்தின் நடுவே அமைக்கப்பட்டுள்ள விரிவாக்க இணைப்பு, இரண்டாக பிளந்தது. கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டு கட்டப்பட்டு வரும் குடியிருப்புகள் தவணை முறையில் மண்ணில் புதைந்து வருவது, அரசுக்கு பெருத்த தலைவலியை அளித்துள்ளது.கட்டடங்கள் புதைவதற்கான காரணத்தை கண்டறிய, சென்னை அண்ணா பல்கலை பேராசிரியர் சாந்தகுமார் மற்றும் சென்னை ஐ.டி.ஐ., சிவில் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் காந்தி ஆகியோர் அடங்கிய நிபுணர் குழுவை அரசு அமைத்தது. இக்குழுவினர் கடந்த வாரம் கட்டடங்களை பார்வையிட்டு, மண் பரிசோதனை செய்தனர்.


ஆய்வுக்குப் பின், கட்டடங்கள் புதைய அஸ்திவாரத்தின் அடியில் இளகிய மண் இருப்பதே காரணம் என்றும், இதே தன்மையுள்ள மண் மேலும் நான்கு கட்டடங்களின் அடியிலும் இருக்க வாய்ப்புள்ளதாகவும் அறிக்கை சமர்ப்பித்தனர். இந்த அறிக்கை தற்போது அரசின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
புதைந்து வரும் இரண்டாவது கட்டடம் மற்றும் புதைய வாய்ப்புள்ள நான்கு கட்டடங்களையும் இடிக்காமல், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மண்ணை உறுதிப்படுத்த முடியும் என, அறிக்கையில் நிபுணர் குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர். எனினும், கட்டடங்களை இடிப்பதா, உறுதிப்படுத்துவதா என்பது பற்றி அரசு இதுவரை தெளிவான முடிவுக்கு வரவில்லை.


கட்டடங்களை இடித்து புதிதாக கட்டுவதாக இருந்தால் அதற்கான செலவை யார் ஏற்பது, அஸ்திவார மண்ணை உறுதிப்படுத்தினாலும் அதில் குடியேற மக்கள் முன்வருவார்களா? என்ற குழப்பம் காரணமாக இறுதி முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே நிபுணர் குழு அறிக்கையின்படி கட்டடங்களை உறுதிப்படுத்த ஆகும் செலவு, கடைபிடிக்கப்படும் தொழில்நுட்பம் பற்றி விரிவான அறிக்கை (டி.பி.ஆர்.,) தயாரிக்கும்படி பொறியாளர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், இந்த அறிக்கையின்படிதான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொறியாளர்கள் சிலர் தெரிவித்தனர்.

இது பற்றி அவர்கள் மேலும் கூறுகையில், 'அம்மன் குளம் பகுதி நிலத்தின் அடியில் உள்ள ஒவ்வொரு மண்ணும் பல்வேறு குணங்களுடன் காணப்படுகிறது. சில இடங்களில் இளகிய நிலையில் காணப்படும் மண், அதன் அருகிலேயே மற்றொரு இடத்தில் உறுதியானதாக உள்ளது. ஆகவே புதையும் கட்டடங்களை இடிப்பதை விட, மண்ணை உறுதிப்படுத்தும் 'ஜெட் கிரவுட்டிங் தொழில் நுட்பம்' எளிதானது; நம்பகமானது.
'மண்ணின் தன்மைக்கு ஏற்ப, கிரவுட்டிங் தொழில் நுட்பத்துக்கு பயன்படுத்தப்படும் கலவை விகிதத்தில் மாற்றம் கொண்டு வரப்படும். எந்த இடத்துக்கு எந்த விதமான கலவை பயன்படுத்தலாம் என்பது குறித்து முடிவு செய்ய, தற்போது நிபுணர் குழுவினர், இளகிய மண்ணை சேகரித்து பரிசோதனை நடத்தி வருகின்றனர்.

'இப்புதிய தொழில் நுட்பத்தின் நம்பகத்தன்மை, கடைபிடிப்பதால் ஆகும் செலவு உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய விரிவான அறிக்கையை(டி.பி.ஆர்.,) தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. மண் பரிசோதனையின் இறுதி முடிவின் அடிப்படையில்தான் அரசுக்கு டி.பி.ஆர்., சமர்ப்பிக்க முடியும்.
'மேலும் நான்கு கட்டடங்களின் அடியிலும் இளகிய மண் இருப்பதாக நிபுணர் குழுவினர் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதால், அக்கட்டடங்களின் அடியில் இருந்தும் மண் சேகரிக்கப்பட்டு ஆய்வு நடந்து வருகிறது. ஆனால், இப்போதைக்கு அந்த நான்கு கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. அக்கட்டடங்கள் மண்ணில் புதைகிறதா என்பதை தினமும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்' என்றனர்.

பருவமழை துவங்கி விட்டால், பணிகளை முடிப்பதில் தொய்வு ஏற்படும்; ஏற்கனவே இளகிய தன்மையுள்ளதாக இப்பகுதி மண் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இப்பகுதியில் இரண்டு நாட்களுக்கு மேல் மழை நீர் தேங்கினால் மீதமுள்ள கட்டடங்களும் புதைய வாய்ப்புள்ளது. தற்போது இங்கு அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் கிளம்பிச் சென்று விட்டனர். முதலில் புதைந்த கட்டடம் மட்டும் படிப்படியாக இடிக்கப்பட்டு வருகிறது. அரசு தனது முடிவை அறிவித்தால் மட்டுமே மேற்கொண்டு பணிகளை தொடர முடியும் என்பதால், குடிசை மாற்று வாரிய பொறியாளர்கள் கவலையுடன் காத்திருக்கின்றனர்.

Last Updated on Thursday, 29 April 2010 05:58