Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வீடுகள்புதிய பயனாளிகள் பட்டியல் தயார்

Print PDF

தினமலர் 04.05.2010

குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வீடுகள்புதிய பயனாளிகள் பட்டியல் தயார்

சேலம்: சேலம் மாநகராட்சியில் குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய குடியிருப்பு வீடுகள் கட்டும் பணி முழுமையாக பூர்த்தி செய்வதற்கு புதிய பயனாளிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.கடந்த 2009ல் சேலம் மாநகராட்சியில் 19 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த குடிசைப்பகுதி குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய குடியிருப்பு வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டது.முதல் கட்டமாக 1,006 வீடுகள் 10 கோடியே 26 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்ட திட்டமிடப்பட்து. ஒவ்வொரு குடியிருப்பின் மதிப்பும் ஒரு லட்சத்து இரண்டாயிரம் ரூபாய்.ஓராண்டாக சேலம் மாநகராட்சி சார்பில் வார்டு வாரியாக குடியிருப்பு வீடுகள் அமைய உள்ள இடங்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டது.இரண்டாவது வார்டுக்குட்பட்ட சின்ன அம்மாப்பாளையத்தில் 172 வீடுகளும், 19வது வார்டுக்குட்பட்ட மாரியம்மன் கோவில் தெருவில் 109 வீடுகள், 14வது வார்டுக்குட்பட்ட கந்தம்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் 62 வீடுகள், 12வது வார்டுக்குட்பட்ட ஜான்சன்பேட்டை கிழக்கு தெருவில் 124 வீடுகள் உள்பட பல வார்டுகளில் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஓராண்டாக அப்பகுதியில் வசிப்பவர்களிடம் விண்ணப்பங்கள் வழங்கி, தகுதி அடிப்படையில் வீடுகள் கட்டும் பணியை துவங்கப்பட்டது. மாநகராட்சி சார்பில் அவர்களுக்கு மூன்று கட்டமாக மானிய தொகை வழங்கப்பட்டது.ஆனால், இரண்டாவது வார்டுக்குட்பட்ட சின்னம்மாபாளையத்தில் 37 பேரும், 19வது வார்டில் 63 பேரும், 24வது வார்டில் 22 பேரும், 12வது வார்டில் 72 பேரும், 13வது வார்டில் 94 பேரும், 47வது வார்டில் 78 பேர் ஆக 366 பேர் உரிய தகுதியின்மை மற்றும் தங்கள் குடும்ப சூழலை காரணம் காட்டி குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய வீடுகளை கட்டுவதற்கு தங்கள் விருப்பமின்மையை தெரிவித்தனர்.எனவே, குடிசை மேம்பாட்டு திட்டத்தை 100 சதவீதம் பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதை தவிர்க்கும் பொருட்டு சேலம் மாநகராட்சி சார்பில் 366 பயனாளிகளுக்கான புதிய பட்டியல் தயார் செய்யும் பணி துவங்கப்பட்டது.தற்போது, 25வது வார்டுக்குட்பட்ட கோரிக்காடு பகுதியில் 40 பயனாளிகள், 24வது வார்டு எம்.ஜி.ஆர்., நகரில் 56 பயனாளிகள், 19வது வார்டு அந்தோணிபுரம் ஓடை பகுதியில் 30 பயனாளிகள், ஐந்தாவது வார்டு அழகாபுரம் புதூரில் 26 பயனாளிகள், எட்டாவது வார்டு சின்ன திருப்பதி காந்தி நகர், அம்மன் நகரில் 49 பயனாளிகள், நான்காவது வார்டு தென் அழகாபுரத்தில் 48 பயனாளிகள், 36வது வார்டு நஞ்சம்பட்டியில் 60 பயனாளிகள், 11வது வார்டு வாசக சாலை தெருவில் மூன்று பயனாளிகள், 49, 50வது வார்டு கண்ணகி தெரு, அம்பேத்கர் தெருவில் 44 பயனாளிகள், 60வது வார்டு மதுரைவீரன் கோவில், சின்னையன் நகரில் 10 பயனாளிகள் என 366 பயனாளிகள் அடங்கிய பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

Last Updated on Tuesday, 04 May 2010 06:29