Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வீட்டு வசதி வாரிய வீடுகள்: புதுப்பிக்கும் பணி தீவிரம்

Print PDF

தினமலர் 05.05.2010

வீட்டு வசதி வாரிய வீடுகள்: புதுப்பிக்கும் பணி தீவிரம்

ஈரோடு: ''பழுதான வீடுகளை தொழில் நுட்ப வல்லுநர்கள் மூலம் புதுப்பிக்கும் பணி நடக்கிறது,'' என வீட்டு வசதி வாரிய மேற்பார்வை பொறியாளர் நாராயணமூர்த்தி கூறினார்.வீட்டு வசதி வாரியம் சார்பில் ஈரோடு பெரியார் நகரில் 72 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. குலுக்கல் முறையில் வீடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீட்டு வசதி வாரிய மேற்பொறியாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது:வீட்டு வசதி வாரியம் சார்பில் இதுவரை மூன்று லட்சத்து 96 ஆயிரத்து 967 வீடுகள் கட்டப்பட்டு, மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு மட்டும் 26 ஆயிரம் குடியிருப்புகள் அடங்கும். கோவை வெள்ளகிணறு பகுதியில் 98 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதற்கு குலுக்கல் நிகழ்ச்சி நாளை (இன்று) நடக்கிறது. சென்னை அம்பத்தூர், முகப்பேர், சோளிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் குடியிருப்புகள் மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சோளிங்கநல்லூரில் 400 வீடுகள், தாராபுரத்தில் 53 வீடுகள் கட்டும் திட்ட வரைவு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பு ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு அவர்கள் விரும்பும் வங்கிகளில் கடன் வசதி செய்து தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 'ஒரு திட்டத்துக்காக எடுக்கப்பட்ட நிலங்களை திரும்ப ஒப்படைக்க தேவையில்லை' என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், வீட்டு வசதி வாரிய நிலம் பெறப்படுவதில் பிரச்னை எதுவும் இல்லை. குடிசை மாற்று வாரியத்துக்காக, வீட்டு வசதி வாரியம் சார்பில் வீடுகள் கட்டித் தரப்படுகிறது. பழுதான வீடுகளை தொழில் நுட்ப வல்லுனர்கள் மூலம் புதுப்பிக்கும் பணி நடக்கிறது.

அனைத்து வருவாய் பிரிவினரும் வீடுகள் வாங்கும் வகையில் சோளிங்கநல்லூரில் 400 வீடுகள், அம்பத்தூரில் 608 வீடுகள் கட்டப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஈரோடு பெரியார் நகரில் கட்டப்பட்ட 72 வீடுகளில் 11 வீடுகள் அரசு ஊழியர்களுக்கும், மற்றவர்களுக்கு 61 வீடுகளும் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஒரு வீடு 13 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. ஈரோடு செயற்பொறியாளர் விஜயகுமார் மற்றும் வீட்டு வசதி வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Last Updated on Wednesday, 05 May 2010 06:27