Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

அம்மன்குளம் அடுக்குமாடி குடியிருப்பு பற்றிய வெள்ளை அறிக்கை தேவை

Print PDF

தினமணி 26.04.2010

அம்மன்குளம் அடுக்குமாடி குடியிருப்பு பற்றிய வெள்ளை அறிக்கை தேவை

கோவை, ஏப். 25: கோவை-அம்மன்குளம் அடுக்குமாடி குடியிருப்பு சரிந்த சம்பவம் தொடர்பாக மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று, கொங்குநாடு மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

÷இது குறித்து கட்சியின் கோவை மாநகர் மாவட்ட அமைப்பாளர் ஜி.கே.நாகராஜ் அண்மையில் விடுத்த அறிக்கை:

÷தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில், அம்மன்குளத்தில் ஏழைகளுக்காக கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டடத்தின் இரு பிரிவுகள் ஒரு புறமாக பூமிக்குள் புதைந்து சரிந்தன.

÷இந்த கட்டடம் கட்டப்பட்ட இடம் அடுக்குமாடி கட்டடம் கட்டுவதற்கான இடம் அல்ல. சரியான, தெளிவான ஆய்வுக்குப்பின் இக்கட்டடம் கட்டப்படவில்லை. இதற்கு உறுதுணையாக இருந்த அரசு ஆய்வாளர்கள், அரசு அதிகாரிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

÷இப்பகுதியில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடிக் குடியிருப்பை முழுமையாக இடிக்க வேண்டும். இக்குடியிருப்பு தொடர்பாக மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இல்லையெனில் விரைவில் போராட்டம் நடத்தப்படும், என்று தெரிவித்துள்ளார்.

 

புதைந்த கட்டடங்கள்: நிபுணர் குழு ஆய்வு

Print PDF

தினமணி 24.04.2010

புதைந்த கட்டடங்கள்: நிபுணர் குழு ஆய்வு

கோவை, ஏப்.23: கோவையில் பூமிக்குள் புதைந்த அடுக்குமாடிக் கட்டடங்களை நிபுணர் குழு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தது.

ராமநாதபுரம் அம்மன்குளத்தில் குடிசை மாற்றுவாரியத்தின் சார்பில் 16 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. அதிகவேகமாக கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்தபோது ஒரு அடுக்குமாடி 56 செ.மீ. வரை பூமிக்குள் புதைந்தது. இதனால், அந்தக் கட்டடம் பின்புறமாக சாய்ந்தது. இச் சம்பவம், ஏப்.4}ம் தேதி நடந்தது. தமிழக அரசின் உத்தரவின்பேரில் அந்தக் கட்டடத்தை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந் நிலையில், மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பகுதி 25 செ.மீ. வரை பூமிக்குள் புதைந்தது. அந்தக் கட்டடம் மேலும் புதையாமல் தடுக்க முட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது. கட்டடங்களின் உறுதி மற்றும் மண்ணின் தன்மை குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை தமிழக அரசு நியமித்தது. இந்தக் குழுவில் குடிசை மாற்றுவாரிய ஆலோசகர் ஏ.ஆர்.சாந்தகுமாரும், சென்னை ஐஐடி பேராசிரியர் எஸ்.ஆர்.காந்தியும் இடம்பெற்றுள்ளனர்.

இதற்கிடையே அடுக்குமாடிக் கட்டடங்கள் அமைந்துள்ள இடத்துக்கு அருகே ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு 16 அடி ஆழத்துக்கு குழியை தோண்டி, மண் மாதிரிகளை எடுக்கும் பணி நடைபெற்றது. ஏற்கெனவே ஆழ்துளையிட்டு எடுக்கப்பட்ட மண் மாதிரிகள் ஜிசிடி கல்லூரி ஆய்வகத்தில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது. ஆய்வு முடிவு இன்னும் வெளியாகவில்லை.

இந் நிலையில், அடுக்குமாடிக் குடியிருப்புகளின் உறுதித் தன்மை குறித்து நிபுணர் குழு ஆய்வு செய்தது. இந்தக் குழுவினர், பூமிக்குள் புதைந்த கட்டடங்களின் நிலை தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, குடிசை மாற்று வாரிய தலைமைப் பொறியாளர் சி.பழனிசாமி, நிர்வாக பொறியாளர் கோபி, கட்டட ஒப்பந்ததாரர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.

நிபுணர் குழுவிற்கு தலைமை வகித்த சாந்தகுமார் கூறியது:

கட்டட அஸ்திவாரத்தின் உறுதித் தன்மை குறித்து ஆராய்ந்தோம். மேலும், மண்ணின் தன்மை தொடர்பாகவும் ஆய்வு செய்து வருகிறோம். ஆழ்துளை மூலம் எடுக்கப்பட்ட மண் மாதிரி ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் விரைவில் வெளியாகும். இதன் அடிப்படையில் தமிழக அரசிடம் அறிக்கை அளிப்போம் என்றார்.

 

வீட்டு வசதி திட்டத்துக்காக புதுச்சேரி அரசுக்கு தேசிய விருது

Print PDF

தினமணி 24.04.2010

வீட்டு வசதி திட்டத்துக்காக புதுச்சேரி அரசுக்கு தேசிய விருது

புதுச்சேரி, ஏப். 23: நாட்டிலேயே சிறந்த முறையில் வீட்டு வசதி திட்டத்தை நிறைவேற்றுவதற்காக புதுச்சேரி அரசுக்கு தேசிய அளவிலான விருது கிடைத்துள்ளது.

இது குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் வி. வைத்திலிங்கம் வெளியிட்ட அறிவிப்பு:

மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் வறுமை ஒழிப்பு அமைச்சகத்தின் நிறுவனமான ஹட்கோ இந்திய அளவில் சிறந்த முறையில் வீட்டு வசதி மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்களைச் செயல்படுத்தும் அரசு துறையைத் தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.

இதன் அடிப்படையில் இந்திய அளவில் புதுச்சேரி அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த விருதை வரும் 26-ம் தேதி புதுதில்லியில் வீட்டு வசதி மற்றும் வறுமை ஒழிப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் குமாரி செல்ஜா வழங்குகிறார் என்றார்.

எந்த அடிப்படையில் தேர்வு புதுச்சேரி எந்த அடிப்படையில் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று ஹட்கோ அதிகாரிகள் கூறியது:

நாட்டில் பல்வேறு மாநில அரசுகளும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கு வீட்டு வசதி திட்டத்தை நிறைவேற்றினாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது புதுச்சேரி ஆதிதிராவிட நலத்துறை செயல்படுத்தும் திட்டம் சிறப்பானது.

குறிப்பாக ஒவ்வொரு வீடும் ரூ.5.3 லட்சத்தில் கட்டப்படுகிறது. இதைத் தவிர இந்த வீடுகளில் படுக்கை அறை, கூடம், சமையல் கூடம், கழிப்பறை வசதி உள்ளிட்ட ஓர் இல்லத்துக்குத் தேவையான எல்லா வசதிகளும் இருக்கும்.

படிக்கட்டு வசதியும் இருக்கும். மேல்மாடி கட்டுவதற்கு உரிய அளவில் கடைக்கால் வசதியும் இருக்கும். இதைத் தவிர மேம்படுத்தப்பட்ட சாலை வசதி, கழிவுநீர் வெளியேறும் வசதி, அதைத் தவிர மக்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளுக்காக தனியாக இடம் போன்றவையும் வீட்டு வசதித் திட்டத்தில் வருகிறது.

ஒவ்வொரு வீட்டுக்கும் 600 சதுர அடி ஒதுக்கப்பட்டு அதில் 346 சதுர அடியில் கட்டடம் கட்டிக் கொடுக்கப்படுகிறது. இது முழுவதும் இலவசம். இத் திட்டத்தின் கீழ் 2008-ம் ஆண்டு ரூ.130 கோடியில் 3 ஆயிரம் வீடுகள் கட்டப்பட உள்ளன. இதில் ரூ.51 கோடி மத்திய அரசின் மானியம். மீதி ஹட்கோ நிறுவனத்தின் கடனுதவி.

2009-ம் ஆண்டில் ரூ.145.75 கோடியில் 4 ஆயிரம் வீடுகளும் ஆக மொத்தம் 12 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்க ஆதிதிராவிட நலத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது முழுவதும் ஹட்கோவின் கடனுதவி. இந்த வீடுகள் கட்டும் பணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. வீடுகள் கட்டும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

சிறப்பான திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இந்த விருது கிடைத்துள்ளது. புதுச்சேரிக்கு மே 1-ம் தேதி வருகை தரும் மக்களவைத் தலைவர் மீராகுமார் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைப்பார் என்று தெரிகிறது.

 


Page 37 of 69