Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

ரூ.29 கோடி அடுக்கு மாடி கட்டடம் இடிப்புக்கு யார் காரணம்?

Print PDF

தினமலர் 20.04.2010

ரூ.29 கோடி அடுக்கு மாடி கட்டடம் இடிப்புக்கு யார் காரணம்?

கோவை அம்மன்குளத்தில் 29 கோடி ரூபாய் மதிப்பில் கட்டிய வீடுகளை இடிக்க வேண்டிய சூழ்நிலைக்கு காரணமானவர்களை விசாரிக்க வேண்டும். அதற்கு உடந்தையாக இருந்தவர்களையும் விசாரணைக்கு உற்படுத்த வேண்டும். வீடுகள் கட்ட அனுமதித்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, விரிவான விசாரணை நடத்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் 3,840 வீடுகளை தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கட்டி வருகிறது. நீர்நிலை புறம்போக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிசைகளில் வசிப்பவர்களுக்கு இந்த வீடுகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பயனாளிகளை மாநகராட்சி நிர்வாகமே தேர்வு செய்ய உள்ளது. இந்த இடத்தில் வீடு கட்டலாம் என்று முடிவு செய்ததும், கோவை மாநகராட்சி நிர்வாகமே. ஆனால், வீடுகளை கட்டும் பணி மட்டும் குடிசைமாற்று வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதே திட்டத்தில், மேலும் 9,000 வீடுகளை உக்கடம் உட்பட வேறு இடங்களில் கட்ட மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. குடிசை மாற்று வாரியம் கட்டும் வீடுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, மொத்தம் 118 கோடி ரூபாய். இதில், 50 சதவீதத் தொகை, மத்திய அரசின் மானியம்; அதாவது, 59 கோடி ரூபாய் நிதி, நேரடியாக மத்திய அரசு தந்துள்ளது.

இந்த நிதியைப் பயன்படுத்தும் முன், சரியான இடத்தைத் தேர்வு செய்து, அங்கு மண் ஆய்வு செய்து, எவ்வளவு மாடிகள் கட்டலாம் என்பதை மிகத் தெளிவாக உறுதிப்படுத்தி இருக்க வேண்டியது, மாநகராட்சி நிர்வாகத்தின் கடமை. அதைக் கண்காணித்து, தொழில்நுட்ப ரீதியாக ஆய்வுகளை மேற்கொண்டு, அதன் பின் நிர்வாக ஒப்புதலை வழங்கியிருக்க வேண்டியது, தமிழக அரசின் நகராட்சி மற்றும் நிர்வாக வழங்கல் துறையின் பொறுப்பு. ஆனால், 'கமிஷன்' என்ற ஒரே காரணத்துக்காக எல்லோருமே பொறுப்பற்று நடந்திருப்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத் திட்டத்துக்கான மதிப்பீடு தயாரிக்கும் போதே, 20 சதவீதம் வரை கூடுதல் தொகை வைத்தே மதிப்பீடு தயாரிக்கப்படுவதாக அப்போதே குற்றச்சாட்டு எழுந்தது. இந்த தொகையில், 10 முதல் 15 சதவீதம் வரை, அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு கமிஷனாகச் சென்றிருக்கிறது.

இந்த கமிஷனை விரைவாகப் பெற வேண்டும் என்பதற்காகவே, அரசியல்வாதிகள் அவசர கதியில் தீர்மானம் நிறைவேற்ற, அதிகாரிகளும் நிர்வாக ஒப்புதலை வாரி வழங்கி விட்டனர். அமைச்சர்கள், மேலதிகாரிகளுக்கு இதில் முக்கிய பங்கு இருப்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த கட்டடங்களைக் கட்ட இடம் தேர்வு செய்து, டெண்டர் விட்டு, கமிஷன் பார்த்த முக்கிய அதிகாரிகள் பலரும் இங்கிருந்து 'எஸ்கேப்' ஆகி விட்டனர். இதனால், கோவை மக்களுக்கு நேரடியாகப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் கோவையில் உள்ள அரசியல்வாதிகள் மட்டுமே. குறிப்பாக, தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு இந்த பொறுப்பு அதிகமுள்ளது. ஏனெனில், இது அவரது தொகுதி. இடத்தைத் தேர்வு செய்தது, கட்டடம் கட்டுவது, மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது, டெண்டர் விட்டது உட்பட எல்லாமே அமைச்சருக்குத்தெரியாமல் நடக்கவில்லை. மத்திய அரசின் திட்டம் என்பதால், இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மேயர் உள்ளிட்ட காங்கிரசார் மார் தட்டிக் கொள்ளவும் மறக்கவில்லை. இவர்கள் எல்லோரும், புதையும் கட்டடங்களுக்கு என்ன விளக்கம் தருவார்கள் என்பதே கேள்வி. ஏனெனில், 29 கோடி ரூபாய் மதிப்பில் கட்டிய வீடுகளை இடிப்பதைத்தவிர வேறு வழில்லை.அஸ்திவாரத்தைப் பலப்படுத்தப்போவதாக குடிசை மாற்று வாரியப் பொறியாளர்கள் சொன்னாலும், உயிரைப் பணயம் வைத்து யாரும் அங்கு குடியேறத் தயாரில்லை. இதனால், இத்தனை கோடிப் பணமும் நிச்சயமாக வீண்தான். இந்த இழப்பை யாரிடம் வசூலிப்பது என்று மக்கள் கேட்கின்றனர். இது ஓர் உதாரணம் மட்டுமே. ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத் திட்டத்தில், எல்லாத் திட்டங்களிலும் கமிஷன் விளையாடி, அரைகுறைத் தரத்தில்தான் பணிகள் நடக்கின்றன என்பதே உண்மை. இதனால், இந்த திட்டங்களால் எதிர்காலத்தில் பலன்களை விட பாதிப்புகள் அதிகமாகுமோ என்ற அச்சமும் மக்களிடம் உள்ளது. மத்திய அரசின் நேரடிப் பங்களிப்புள்ள இந்த திட்டத்தில் முறையான மண் பரிசோதனை, ஆய்வு செய்யாமல் இவ்வளவு பெரிய கட்டடங்களை அனுமதித்தது பற்றி விரிவான விசாரணை நடத்த வேண்டியது அவசியம். அது சி.பி.., விசாரணையாக இருந்தாலும் நல்லதே.வெளியே வருமா உண்மை?அம்மன் குளம், உக்கடம் ஆகிய இடங்களில், பல அடுக்கு மாடிக் கட்டடம் கட்டும் முன்பாக, மண் பரிசோதனை நடத்தி, 'உகந்த இடம்' என்று அறிக்கை வந்த பின்பே, அங்கு கட்டடம் கட்ட முடிவு செய்ததாகக் கூறுகின்றனர் மாநகராட்சி மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள். ஆனால், இப்போது 'இளகிய தன்மை'யுள்ள மண் இருப்பதாகக் கூறுகின்றனர்.முதலில் அங்கு மண் பரிசோதனை செய்யப்பட்டது உண்மையா, பரிசோதனையில் 'உகந்தஇடம்' என்று சொல்லப்பட்டதா, அந்த அறிக்கை கொடுத்த நிறுவனத்தின் நம்பகத்தன்மை என்ன என்பதெல்லாம் மக்களின் கேள்வி. இதை தெளிவுபடுத்த 'மண் ஆய்வு' அறிக்கையை பகிரங்கமாக வெளியிட வேண்டியது அரசின் தார்மீக கடமை.

Last Updated on Tuesday, 20 April 2010 06:16
 

எழும்பிய அடுக்குமாடி; உத்தரவிற்குப்பின் இடிப்பு : கோவை அம்மன்குளத்தில் இரண்டாவது சோகம்

Print PDF

தினமலர் 20.04.2010

எழும்பிய அடுக்குமாடி; உத்தரவிற்குப்பின் இடிப்பு : கோவை அம்மன்குளத்தில் இரண்டாவது சோகம்

கோவை: அரசு உத்தரவிற்குப் பின்பு இடிக்கும் பணி துவங்கப்படும் என்று குடிசைமாற்று வாரிய பொறியாளர் கோபி கூறினார். கோவை அம்மன்குளம் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் 48 வீடுகள் கொண்ட 2 (பி) பிளாக் கட்டடம் கடந்த ஏப்ரல் 3 ம் தேதி மண்ணில் புதைந்தது. ஆய்வு செய்த அரசின் ஆய்வுக் குழுவினர் மற்றும் குடிசைமாற்று வாரியப் பொறியாளர்கள், பூமிக்குள் ஆறரை அடி வரைக்கும் மண்கெட்டித்தன்மையாக உள்ளது. அதற்கு மேல் மண் இளகிய தன்மையாக இருப்பதால், கட்டடத்தின் எடையை மண்ணால் தாங்க முடியாமல் மண்ணுக்குள் புதைந்தது, என்றனர். இச்சூழலில் நேற்று முன் தினம் 24 வீடுகள் கொண்ட மூன்றடுக்கு கொண்ட, 4(பி) பிளாக்கின் வட பகுதியில் 25 செ.மீ ஆழத்திற்கு கட்டடம் மண்ணிற்குள் புதைந்தது. மேலும் கட்டடம் மண்ணிற்குள் புதையாமல் இருப்பதற்காக, இரும்பு பைப்புகளை கொண்டு முட்டு கொடுத்து தடுத்து நிறுத்தும் பணி உடனடியாக மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் நேற்று மேலும் 5 செ.மீ., ஆழத்திற்கு கட்டடம் மண்ணிற்குள் புதைந்தது தெரியவந்தது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை, அடுக்குமாடி கட்டடம் புதையும் வேகத்தை நவீன கருவி மூலம் அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர்.குடிசை மாற்று வாரிய நிர்வாக பொறியாளர் கோபி கூறியதாவது: கட்டடம் பூமியினுள் புதைந்து வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதைந்த கட்டடத்தில் உள்ள அறைகளில் மற்ற கட்டடங்களுக்கு தேவையான இரும்பு, நிலவு, ஜன்னல் உள்ளிட்ட இரும்பு தளவாடங்கள் வைக்கப்பட்டிருந்தன.இதன் காரணமாக கட்டடத்தின் எடை அதிகமாகி புதைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், இரும்பு நிலவுகள், ஜன்னல்கள் உள்ளிட்ட இரும்புப் பொருட்களை மற்ற இடங்களுக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்க இன்ஜினியர்கள் தொழிலாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். அஸ்திவாரத்தை உறுதிப்படுத்த மாற்றுத்தொழில்நுட்பம் குறித்து பன்னாட்டு நிறுவனங்களுடனும், உள்ளூரிலும் கைதேர்ந்த பொறியாளரிடமும் பேசி வருகிறோம்.இந்நிலையில் ஏற்கனவே மண்ணிற்குள் புதைந்த ஒரு கட்டடத்தை இடித்தது போல தற்போது புதைந்து வரும் இந்த கட்டடத்தையும் இடித்து அப்புறப்படுத்த அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். அரசு அனுமதியளித்தால் கட்டடம் இடித்து அப்புறப்படுத்தும் பணி துவங்கும்.கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டடத்தில் தொழில்நுட்ப குறைபாடுகள் இருக்கிறதா, மண்ணிற்கு கெட்டித்தன்மை இல்லையா என்பது குறித்தெல்லாம் கேள்விகளை கேட்க வேண்டாம்.அரசின் திட்டங்கள் மக்களுக்கு போய் சேர வேண்டும் என்று உயரிய நோக்கில் நாங்கள் பணிபுரிந்து வருகிறோம். எதிர்பாராமல் ஏற்படும் இது போன்ற இழப்பீடுகளை மன உறுதியுடன் தாங்கிக்கொள்ள வேண்டும். இதை பெரிது படுத்துவதோ, குற்றம் சுமத்தி பேசுவதாலோ எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. அடுத்து அரசு என்ன செய்யச் சொல்கிறதோ அதை செய்யத் தயாராக இருக்கிறோம், என்றார

Last Updated on Tuesday, 20 April 2010 06:04
 

கோவையில் மீண்டும் புதைந்தது அடுக்குமாடிக் குடியிருப்பு!

Print PDF

தினமணி 19.04.2010

கோவையில் மீண்டும் புதைந்தது அடுக்குமாடிக் குடியிருப்பு!

கோவை, ஏப்.18: கோவையில் குடிசை மாற்றுவாரியத்தால் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு மீண்டும் பூமிக்குள் ஞாயிற்றுக்கிழமை புதைந்தது.

ஒரே மாதத்தில் 2}வது முறையாக அடுக்குமாடி குடியிருப்புகள் புதைந்த சம்பவத்தால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில்கோவை ராமநாதபுரம் அம்மன்குளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இப் பணி கடந்த 2009}ம் ஆண்டு டிசம்பரில் துவங்கியது.

ஒரு பிளாக்கில் 48 வீடுகள் என மொத்தம் 16 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. மொத்தம் ரூ.18 கோடி செலவில் 936 வீடுகள் கட்டப்படுகின்றன. ஒவ்வொரு வீடும் 270 சதுர அடி பரப்பளவு கொண்டது.

கிட்டத்தட்ட 80 சதவீத கட்டுமானப் பணி நிறைவடைந்த நிலையில், ஏப்.4}ம் தேதி 48 வீடுகளை கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பூமிக்குள் 56 செ.மீ. வரை புதைந்தது.

இதனால், ஒருபுறமாக அந்தக் கட்டடம் சாய்ந்தது. தொடர்ந்து புதைந்ததால், அந்த 3 மாடிகளை கொண்ட அடுக்குமாடியை இடிக்க தமிழக அரசு முடிவு செய்தது.

அதன்படி, கட்டடங்களை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 3}வது மாடியின் கீழ் தளம் இடிக்கப்பட்டுவிட்டது.

இந் நிலையில், சனிக்கிழமை இரவு 3 மணி நேரத்துக்கும் மேலாக கன மழை பெய்ததால் பள்ளமான இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால், அம்மன் குளத்தில் ஏற்கெனவே பூமிக்குள் புதைந்த அடுக்குமாடிக்கு நேர் எதிரே உள்ள மற்றொரு அடுக்குமாடி கட்டடத்தின் 24 குடியிருப்புகளை கொண்ட ஒரு பிளாக் 25 செ.மீ. பூமிக்குள் புதைந்தது.

இதைத்தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பின் நடுவே அரை அடி அகலத்துக்கு விரிசல் ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல இந்த விரிசல் பெரிதாகிக் கொண்டே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து விரிசல் ஏற்பட்ட கட்டடத்தை சுற்றிலும் பெரிய இரும்பு ராடுகளைக் கொண்டு கட்டடத் தொழிலாளர்கள் முட்டுக் கொடுத்தனர். இதனால், கட்டடம் மேலும் சரியாமல் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த குடிசைமாற்று வாரிய உயரதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். பின்னர் கட்டடங்களின் நிலை குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பி.உமாநாத்தை சந்தித்து விளக்கம் அளித்தனர்.

கட்டடத்தில் மேலும் விரிசல் ஏற்படுவதை தடுப்பது தொடர்பாக குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து குடிசை மாற்றுவாரிய நிர்வாகப் பொறியாளர் கோபி கூறியது:

முறையான மண் பரிசோதனை மேற்கொண்ட பிறகுதான் அம்மன் குளத்தில் கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டன. ஆனால், ஒரு அடுக்குமாடி கட்டடம் பூமிக்குள் புதைந்தது. அதை இடிக்கும் பணி மேற்கொண்ட போதே மற்றொரு கட்டடமும் பூமிக்குள் புதையத் துவங்கியுள்ளது.

பூமிக்குள் புதைந்த கட்டடம் விழாமல் தடுப்பதற்காகத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சரிந்த கட்டடத்தின் அருகே எடுக்கப்பட்ட மண் சோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்னும் வரவில்லை. மண் பரிசோதனை முடிவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். "இந்தப் பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன் குளம் இருந்தது. கட்டடங்களுக்கான அஸ்திவாரம் தோண்டும்போது கூட அதிக நீர் ஊற்றெடுத்தது. குளங்கள் இருந்த பகுதியில் வீடுகள் கட்டலாம். ஆனால், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு குளங்கள் ஏற்றதல்ல. சிறிதளவு மழை பெய்தாலும் கூட ஒவ்வொரு அடுக்குமாடியாக பூமிக்குள் புதைகிறது. மழைக் காலம் வரையாவது இந்தக் கட்டடங்கள் நிலைத்து நிற்குமா? என்பது சந்தேகம் தான்.அதனால், உயிருக்கும், உடமைக்கு பாதுகாப்பு இல்லாத இந்தக் கட்டடங்களில் நாங்கள் குடியேற மாட்டோம்' என்கின்றனர் அப் பகுதி மக்கள்.

"சரிந்த கட்டடத்தின் அடித்தளம் பலப்படுத்தப்படும்'

பூமிக்குள் புதைந்து சரிந்த கட்டடத்தின் அடித்தளம் பலப்படுத்தப்படும் என தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து குடிசைமாற்று வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குடிசைமாற்று வாரியத்தின் மூலம் அம்மன்குளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பூமிக்குள் புதைந்தது. அதைத் தொடர்ந்து, ஆழ்துளையிட்டு மண்ணின் தன்மை குறித்து ஆராயப்பட்டது. நவீன தொழில்நுட்பத்தை கொண்டு கட்டடத்தின் அஸ்திவாரத்தை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள எண்ணியுள்ள நிலையில், 24 வீடுகளை கொண்ட ஒரு பிளாக் பூமிக்குள் 25 செ.மீ. புதைந்தது. பரிசோதனையில், இந்தக் கட்டடத்தின் கீழ் இலகுவகை மண் இருப்பது தெரியவந்தது. சனிக்கிழமை இரவு பெய்த மழைதான் இதற்குக் காரணம். கட்டடம் மேலும் புதையாமல் தடுக்கவும், நவீன தொழில்நுட்ப உதவியுடன் சரிந்த கட்டடத்தின் அடித்தளத்தை பலப்படுத்தவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

Last Updated on Monday, 19 April 2010 10:05
 


Page 39 of 69