Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

பாதாள சாக்கடை திட்டம் குடிசைப் பகுதிகளில் வசிப்போர் பணம் கட்டத் தேவையில்லை

Print PDF

தினமணி 01.04.2010

பாதாள சாக்கடை திட்டம் குடிசைப் பகுதிகளில் வசிப்போர் பணம் கட்டத் தேவையில்லை

விழுப்புரம், மார்ச் 31: விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட குடிசைப் பகுதிகளில் வசிப்போர் பாதாள சாக்கடை திட்டத்திற்கு பணம் கட்டத் தேவையில்லை, குடிநீர் இணைப்பும் வீடுகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று நகர்மன்றத் தலைவர் ஆர்.ஜனகராஜ் தெரிவித்தார்.

÷விழுப்புரம் நகர்மன்றக் கூட்டம் தலைவர் ஆர்.ஜனகராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் 45 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

÷உறுப்பினர் பாபு: புதிதாக கட்டப்பட்டு வரும் எரிவாயு தகனமேடை பகுதியில் செப்டிக் டேங்க், சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். இல்லையெனில் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்.

÷உறுப்பினர் கணேஷ் சக்திவேல்: இத் திட்டத்துக்கான செலவு எவ்வளவு?

நகர்மன்றத் தலைவர்: இதன் திட்டச் செலவில் ரூ.56 லட்சம் தான் நகராட்சி வழங்குகிறது. மீதியை ரோட்டரி சங்கம் வழங்கியுள்ளது. ரூ. 30 லட்சத்தில் தகன எரிமேடை எந்திரம் வாங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை அனைவரும் சென்று பார்வையிடலாம்.

÷மதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்த உறுப்பினர் செல்வராஜ்: பென்னாகரம் இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்றதற்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.

÷அதிமுக உறுப்பினர் மல்லிகா: அதிமுக ஆதரவில் ஜெயித்த நீங்கள் முதலில் கவுன்சிலர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு நன்றி தெரிவித்துக் கொள்ளுங்கள்.

÷மல்லிகாவுக்கு ஆதரவாக அதிமுக உறுப்பினர்கள் பேசியதால் கூச்சல் குழப்பம் நிலவியது.

÷அப்போது தலைவர் ஜனகராஜ்: அவர்கள் அங்கு நல்லது செய்தார்கள் வெற்றிபெற்றார்கள், இங்கு நல்லதை செய்து நாம் வெற்றிபெறும் வழியை பார்ப்போம்.

÷ரகுபதி: நகராட்சி சமுதாயக்கூடத்தால் எந்த வருமானமும் இல்லை, அதற்கு செலவு செய்வதைவிட, தனியாருக்கு ஒப்பந்தம் மூலம் விட்டுவிடலாம்.

தலைவர்: அப்படியே செய்யலாம்.

கலைவாணன்: நகரில் பிளாஸ்டிக் பொருள்களை தடைசெய்ய வேண்டும். அப்படி செய்தால்தான் பூமாதேவியின் சூடு தணியும். பஞ்சநாதன்: ஹோட்டல்கள், திருமண மண்டபங்களில் உள்ள கழிப்பறைகளை சுகாதார அலுவலர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

÷சுகாதார அலுவலர்: இன்னும் 3 நாள்களுக்குள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

÷ரகுபதி: நகரில் 200 முதல் 300 திருட்டு குடிநீர் இணைப்புகள் உள்ளன. அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

÷தலைவர்: (அலுவலர்களை நோக்கி) திருட்டு இணைப்புகள் மீது அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லா இடத்திலும் ஆய்வுசெய்து திருட்டு இணைப்புகளை துண்டிக்க வேண்டும். இதில் எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது. மேலும் நகரில் உள்ள 14 குடிசைப் பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்டத்துக்கென ரூ.2.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் அப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இத் திட்டத்துக்காக பணம் கட்டத்தேவையில்லை, அதேபோல் குடிநீர் இணைப்பும் இந்த வீடுகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.

 

நகர்ப்புற குடிசைகள் மேம்பாட்டுக்கு ரூ.7.20 கோடியில் திட்டம்

Print PDF

தினமணி 01.04.2010

நகர்ப்புற குடிசைகள் மேம்பாட்டுக்கு ரூ.7.20 கோடியில் திட்டம்

வேலூர், மாரச் 31: வேலூர் மாநகராட்சி எல்லைக்குள் உள்ள குடிசைகள் மேம்பாட்டுக்காக ரூ.7.20 கோடியில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி அறிவித்துள்ளது.

வேலூர் மாநகராட்சியில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாநகராட்சி எல்லைக்குள்பட்ட கன்சால்பேட்டை, டாக்டர் அம்பேத்கர் நகர், சீனிவாசன் நகர், முத்து மண்டபம், அருகந்தம்பூண்டி, நைனியப்பன் தெரு, ஆரோக்கிய மாதா கோயில், உத்திரமாதா கோயில், சித்தார்த்தர் தெரு ஆகிய பகுதிகளில் மொத்தம் 399 குடிசை வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், கான்கிரீட் வீடுகள் கட்டித்தர ரூ.4.26 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, தெருவிளக்கு, வடிகால், புதைசாக்கடை, சுகாதார வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க ரூ.2.94 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வீடுகள் கட்ட வழங்கப்படும் தலா ரூ.1.07 லட்சத்தில், ரூ.90,000 மானியமாகும். இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

எரிவாயு தகன மேடை

மாநகராட்சி பகுதியில் உள்ள பாலாறு, அம்மணாங்குட்டை, வேலப்பாடி, கஸ்பா மயானங்களில் தலா ரூ.25 லட்சத்துக்கு சுற்றுச்சுவர், கழிப்பிட, மின்விளக்கு, குடிநீர் வசதிகள், காரிய மண்டபம், தியான மண்டபம், காவலர் அறை போன்றவசதிகளை மேம்படுத்த ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மேலும், பாலாறு மயானத்தில் ரூ.46 லட்சத்தில் எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதில் அரசு மானியம் ரூ.20 லட்சம். மீதி ரூ.26 லட்சம் மாநகராட்சி நிதியிலிருந்து செலவிடப்பட்டு, பணிகள் முடியும் நிலையில் உள்ளன. மேலும், பூங்காக்கள், நடைபாதைகள், புல்தரைகள், மின்வசதிகள் என ரூ.20 லட்சத்தில் பணிகள் நடைபெறுகின்றன. விரைவில் இப்பணிகள் முடிக்கப்படும். இவற்றை பராமரிக்க ரோட்டரி சங்கத்தினருக்கு மன்றம் அனுமதி அளித்துள்ளது.

காணார் நீரோடை சீரமைப்பு

வேலூர் மாநகராட்சியின் மையப்பகுதியில் 4 கிளை வாய்க்கால்களோடு காணார் ஓடை செல்கிறது. ஓட்டேரி ஏரியிலிருந்து வெளியேறும் தண்ணீர் மற்றும் நகர் பகுதியிலிருந்து வெளியேறும் மழை நீர் இந்த கால்வாயில் சென்று, பாலாற்றில் சேருகிறது. இக்கால்வாய்களைச் சீரமைக்க கடந்த ஆண்டு ரூ.1.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, காமராஜர் நகர் முதல் ஆபீஸர்ஸ் லைன் வரை 1,200 மீ. தூரத்துக்கு பணிகள் முடிந்துள்ளது.

தற்போது 2-ம் கட்டமாக 650 மீ. நீளத்திற்கு கால்வாயைச் சீரமைக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சிக்கு புதிய கட்டடம்

வேலூர் மாநகராட்சிக்கு ரூ.4.98 கோடியில் புதிய கட்டடம் கட்டும் பணி டிட்டர்லைன் பகுதியில் நடைபெறுகிறது. தற்போது 2-ம் தளம் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. வரும் ஜூன் மாதத்தில் இப் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கட்டடத்தின் முகப்புத் தோற்றம், உள்கட்டமைப்பு பணிகள் வரும் நிதியாண்டில் ரூ.2 கோடியில் மேற்கொள்ளப்படும்.

ரூ.9.50 லட்சத்தில் நூலகம்

மாநகராட்சி கல்வி நிதி ரூ.9.50 லட்சத்தில், உயர்கல்வி மாணவர்களுக்கான புதிய நூலகம் கட்டப்படும். உயர்கல்வி விவரங்களை ஏழை மாணவர்கள் அறிந்துகொள்ள ஏதுவாக புத்தகங்கள், கணினி வசதிகள் அமைக்கப்படும்.

 

மாநகராட்சி, ஊராட்சிகளில் குடிசைகள் கணக்கெடுப்பு: திரிசங்கு நிலையில் எட்டு ஊராட்சிகள்

Print PDF

தினமலர் 01.04.2010

மாநகராட்சி, ஊராட்சிகளில் குடிசைகள் கணக்கெடுப்பு: திரிசங்கு நிலையில் எட்டு ஊராட்சிகள்

திருப்பூர் : தமிழக அரசின் இலவச கான்கிரீட் வீடு திட்டத்திற்காக, ஊராட்சி பகுதிகளில் குடிசைகள் கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடக்கிறது. குடிசைமாற்று திட்டத்தில், மாநகராட்சி பகுதிகளிலும் கணக்கெடுப்பு நடக்கிறது. இந்நிலையில், மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ள எட்டு ஊராட்சிகளில் இதுகுறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாதது, அப்பகுதி மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இலவச கான்கிரீட் வீடு திட்டத்தின் மூலம், ஊராட்சிப் பகுதிகளில் உள்ள குடிசைகள், கான்கிரீட் வீடுகளாக மாற்றப்பட உள்ளன. கணக்கெடுப்பு நடத்தி, குடிசைவாசிகளுக்கு, அதே இடத்தில் கான்கிரீட் வீடு இலவசமாக கட்டிக்கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில், கடந்த 29ம்தேதி முதல் கணக்கெடுப்பு துவங்கியுள்ளது. கிராமநிர்வாக அலுவலர், ஊராட்சி உதவியாளர், மக்கள் நலப்பணியாளர் ஆகியோர் அடங்கிய குழு, ஊராட்சி முழுவதும் கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.

'கணக்கெடுப்பு முடிந்து, பயனாளிகள் பட்டியல் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டுமான பணிகள் துவங்கும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் 15ம் தேதிக்குள் கணக்கெடுப்பை நிறைவு செய்ய வேண்டும் என்ற உத்தரவின்பேரில், பணிகள் தீவிரமடைந்துள்ளன. நகரப்பகுதியில் உள்ள குடிசைப்பகுதிகள் குறித்த முழுவிவரங்களைச் சேகரித்து, அப்பகுதிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, 'குடிசைப்பகுதி விவரங்கள் வறுமை மற்றும் வாழ்வாதார நிலை கணக்கெடுப்பு' நடத்தப்படுகிறது.

கடந்த மார்ச் 22ம் தேதி முதல், அந்தந்த பகுதி மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக, கணக்கெடுப்பு துவங்கியுள்ளது. குடிசைப்பகுதி கணக்கெடுப்பின் அடிப்படையில், குடிசைகள் இல்லா மாநகராட்சி திட்டத்தில், குடிசை வீடுகள் அனைத்தும் கான்கிரீட் வீடுகளாக தரம் உயர்த்தப்படும்.திருப்பூர் ஒன்றியத்தில் கடந்த மாதம் 25ம் தேதி நடந்த பயனாளிகள் தேர்வு பயிற்சிக்கு பிறகு, கணக்கெடுப்பு துவங்கியுள்ளது. மொத்தமுள்ள 21 ஊராட்சிகளில், செட்டிபாளையம், தொட்டி பாளையம், நெருப்பெரிச்சல், தொட்டியமண்ணரை, முத்தணம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம், ஆண்டிபாளையம் ஆகிய எட்டு ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளன. அதற்கான அரசாணையும் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

மீதியுள்ள வள்ளிபுரம், சொக்கனூர், பட்டம்பாளையம், மேற்குபதி, தொரவலூர், ஈட்டிவீரம்பாளையம், பெருமாநல்லூர், காளிபாளையம், பொங்குபாளையம், கணக்கம்பாளையம், முதலிபாளையம், இடுவாய், மங்கலம் ஆகிய 13 ஊராட்சிகளில் மட்டும் குடிசை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. மாநகராட்சியுடன் இணையும் எட்டு ஊராட்சிகள் அத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.

மாநகராட்சி சார்பில் குடிசைமாற்று திட்டத்திற்கான கணக்கெடுப்பும், 52 வார்டுகளில் மட்டும் நடக்கிறது. மாநகராட்சியுடன் இணைய உள்ள எட்டு ஊராட்சிகள் குறித்து யோசிக்கப்படவில்லை. பயனாளிகளை தேர்வு செய்து, கட்டுமான பணிகளை முடிக்கும் போது உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடியும். இதனால், எட்டு ஊராட்சிகளில் பணிகளை செய்தாலும், கணக்கு முடிக்கும்போது பிரச்னை ஏற்படும் என்பதற்காக, மாவட்ட நிர்வாகம் எட்டு ஊராட்சிகளையும் இத்திட்டத்தில் ஒதுக்கியுள்ளது.

தமிழக அரசு கடந்த வாரத்தில், மாநகராட்சி விஸ்தரிக்கப்படும் போது, இணைக்கப்பட உள்ள எட்டு ஊராட்சிகள் விவரத்தை அரசாணையில் வெளியிட்டிருந்தது.எப்படியும் வரும் உள்ளாட்சி தேர்தலின்போது, எட்டு ஊராட்சிகளும் மாநகராட்சியில் இணைந்து தேர்தலை சந்திக்கும். இதனால், மாநகராட்சி பகுதியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக நடத்தப்படும் குடிசை கணக்கெடுப்பை, எட்டு ஊராட்சிகளிலும் நடத்தி முடிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சியுடன் இணையும் எட்டு ஊராட்சிகளின் தலைவர்கள் கூறியதாவது: இலவச கான்கிரீட் வீடு திட்டம் குறித்து பத்திரிகை மற்றும் ஊடகங்கள் வாயிலாக அதிகப்படியான செய்திகள் வெளிவருகின்றன. ஆனால், எட்டு ஊராட்சிகளில் இத்திட்டம் இல்லை. தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகங்களுடன் வாதாடுகின்றனர். மாநகராட்சியுடன் இணைவது உறுதியாகியும், இதுவரை எவ்வித கட்டமைப்பு வசதிகளையும் செய்ய வில்லை. எனவே, மாநகராட்சியில் நடக்கும் கணக்கெடுப்பை இந்த ஊராட்சிகளிலும் நடத்த வேண்டும். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, திரிசங்கு நிலையில் உள்ள எட்டு ஊராட்சி மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும், என்றனர்.

மாநகராட்சியிலும், 13 ஊராட்சிகளிலும் போட்டிபோட்டுக்கொண்டு குடிசைகள் கணக்கெடுப்பு நடக்கிறது. அதற்காக, வரும் 15ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சியுடன் இணைய உள்ள எட்டு ஊராட்சிகளில் கணக்கெடுப்பு நடத்துவது குறித்து, மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

Last Updated on Thursday, 01 April 2010 07:07
 


Page 42 of 69